Advertisment

வைர விழாவை கடந்து பகுத்தறிவு தேர் இழுக்கும் கி.வீரமணி

திராவிடர் கழகத்தில் இருந்து கிளைத்த திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கும் கி.வீரமணி தனது 89வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெரியார் கொள்கைகளில் இன்றும் அதே பிடிப்புடன் அதே வீச்சுடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் இருக்கிறார்.

author-image
WebDesk
New Update
K Veeramani, Dravidar Kazhaga President K Veeramani, K Veeramani celebrates birthday, Periyar, பெரியார், திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, கி வீரமணி பிறந்தநாள் கொண்டாட்டம், ஆசிரியர் கி வீரமணி, K Veeramani birthday, DK, Periyar soldier

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது 89வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெரியார் தொடங்கிய இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இன்றைக்கும் மூடநம்பிக்கை ஒழிப்பு, வருணாசிரமத்துக்கு எதிரான குரல் என்று செயல்பாட்டில் இருக்கிறார்.

Advertisment

திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகம் தொடங்கியபோது, அரசியல் வாய்ப்புக்காக தி.கவில் இருந்து பலரும் அண்ணாவுடன் சென்றார்கள். பெரியாரின் தளபதிகளில் ஒருவராக அரசியலில் நுழைந்த கி.வீரமணி, அப்படி செல்லாமல் பெரியாரின் தளபதியாகவே இருந்தார். பெரியாருக்குப்பின், இன்றும் அவர் பெரியாரின் தளதியாகவே தொடர்கிறார். ஆனாலும், தாய்க் கழகத்தில் இருந்து சென்ற திமுக சகோதரர்களுடன் இணக்கமாக இருந்தார். இணக்கமாக இருகிறார்.

கடலூர் பழையபட்டினத்தில் கிருஷ்ணசாமி - மீனாட்சி தம்பதிக்கு 3வது மகனாக டிசம்பர் 2, 1933ம் ஆண்டு பிறந்தவர் கி.வீரமணி. இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சாரங்கபாணி. கி.வீரமணியின் பள்ளித் தோழனாக அறிமுகமான முருகேசன்தான் பின்னளில் தமிழ் நவீன இலக்கியத்தின் கம்பீர முகமான எழுத்தாளர் ஜெயகாந்தன்.

பள்ளியில் படிக்கும்போது திராவிட மணி என்ற ஆசிரியர்தான் சாரங்கபாணி என்ற பெயரை வீரமணி என்று மாற்றினார். ஆசிரியரின் மூலம் அரசியலை அறிமுகம் செய்துகொண்ட கி.வீரமணி திராவிட அரசியல் பாதையில் தனது பயணத்தைத் தொடங்கினார். தனது 12வது வயதில் 1945ல் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தீர்மாணம் ஒன்றை வழிமொழியும் வாய்ப்பை பெற்றார்.

கி.வீரமணி அரசியல் வாய்ப்புக்காக அண்ணாவுடன் செல்லாமல் பெரியார் உடன் இருந்தார். அதுமட்டுமில்லாமல், அப்போது பெரியாரை ஆதரித்து அண்ணாவை கடுமையாக விமர்சித்துப் பேசியது இன்றும் நினைவுகூரப்படுகிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் பேச எழுத வாதாடும் திறன்மிக்க கி.வீரமணி 29 வயதில் விடுதலை நாளிதழின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பெற்றார். இன்று தி.க சார்பில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளுக்கு அவர்தான் ஆசிரியர். திராவிடர் கழகத்தினரும் திமுகவினரும் திராவிட இயக்க ஆதரவாளர்களும் அவரை அன்புடன் ஆசிரியர் என்றே அழைக்கின்றனர்.

பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு, பெண் உரிமைகள் ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி பெரியாரால் 1944ம் ஆண்டு தொடங்கப்பட்ட திராவிடர் கழகம். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, திராவிடர் கழகத் தேரை வைரவிழா ஆண்டைத் தாண்டி இன்றுவரை இன்று வரை இழுத்து வந்து நிறுத்தியிருக்கிறார். இதுவே பெரிய சாதனைதான். திராவிடர் கழகத்தை அவருடைய குடும்ப சொத்தாக மாற்றிவிட்டார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், தொடர்ந்து பெரியாரின் வழியில் பயணித்து வந்திருகிறார். பெரியாரின் வழியில் பயணிப்பது என்பது அவ்வளவு சுலபமானதில்லை. ஏனென்றால், அது அரசு ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை நோக்கம் கொள்ளாத சமூக சீர்திருத்தத்துக்கான பாதை. அது ஒரு கடுமையான பாதை. அதில் தொடர்ந்து பயணிப்பதால் பெரிய அளவில் ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியாது. ஆனால், அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த பாதையில் கி.வீரமணி வெற்றிகரமாகவே பயணித்து வந்துள்ளார். ஆனால், திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்த அதே வீர்யத்துடன் இருக்கிறதா என்பது விமர்சனத்துக்குட்பட்டதுதான்.

திராவிடர் கழகத்தில் இருந்து கிளைத்த திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தாய்க் கழகத்தின் தலைவராக இருக்கும் கி.வீரமணி தனது 89வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெரியார் கொள்கைகளில் இன்றும் அதே பிடிப்புடன் அதே வீச்சுடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முனைப்புடன் இருக்கிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Periyar K Veeramani Dravidar Kazhagam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment