சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ.27 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது 2 மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
2011-16 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். அப்போது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க வைத்தியலிங்கம் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சென்னை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டடத்தின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பான கோப்பு 2013ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை நிலுவையில் இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம் 27 கோடியே 90 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்த பிறகு, அமைச்சர் ஒப்பந்தம் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது 2 மகன்களான பிரபு மற்றும் சண்முக பிரபு உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“