முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவுநாளில் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், அம்மா மறைந்திட்ட நன்நாளில் என்று கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்ட வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக மிகப்பெரும் அரசியல் ஆளுமையாக விளங்கிய ஜெயலலிதா, டிசம்பர் 5, 2016-ல் உடல் நலக் குறைவால் காலமானார். அ.தி.மு.க-வினராலும் பொதுமக்களாலும் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஜெயலலிதாவின் மறைவு அக்கட்சியினருக்கும் பெரும் இழப்பாக அமைந்தது. அவருடை மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் கடந்த 6 ஆண்டுகளில் என்னென்னவோ நடந்துவிட்டது.
தற்போது, அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு தீர்மானப்படி அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில், முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் நினைவு நாளில், அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்ப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர், அனைவரும் ஜெயலலிதா நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது, இ.பி.எஸ் உள்ளிட்ட அவருடைய ஆதரவாளர்கள் அம்மா மறைந்திட்ட நன்நாளில் என்று கூறி உறுதிமொழி ஏற்றிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறுதிமொழி ஏற்பின்போது எடப்பாடி பழனிசாமி முதலில் உறுதிமொழியைக் கூற, அவருடைய ஆதரவாளர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர். அப்போது, “நம் உணர்வில், நம் உதிரத்தில், நாடி நரம்புகளில் கலந்திட்ட, நம் அம்மா மறைந்திட்ட இந்நன்நாளில் தொண்டரின் படைபலம் ஆர்ப்பரிக்க, கடல் போல் உடன் பிறப்புகள், கடமை தவறாத உடன்பிறப்புகள், நம் அம்மா மறைந்திட்ட இந்நன்நாளில் வீர சபதமேற்க குறித்திட்ட, கொள்கை வீரர்கள், வீராங்கனைகளின் வாரீர் வாரீர்” என்று உறுதியேற்றுள்ளனர்.
ஒரு தலைவரின் மறைவு என்பது அது மிகவும் சோகமான நாள்தானே, ஆனால், இ.பி.எஸ் அவர்களின் ஆதரவாளர்கள் நம் அம்மா மறைந்திட்ட நன்நாளில் என்று உறுதியேற்கிறார்களே என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதால் இ.பி.எஸ் தரப்பு உறுதிமொழி ஏற்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“