நாமக்கல் திமுக.வினர் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்ததால் கைது செய்யப்பட்டனர் என்றார் எடப்பாடி பழனிசாமி.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன் தினம் (ஜூன் 22) தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு நாமக்கல் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான காந்தி செல்வன் தலைமையில் திமுக.வினர் கருப்புக் கொடி காட்டினர்.
ஆளுனருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக.வினர், ஓரிரு கருப்புக் கொடிகளை ஆளுனர் கார் மீது வீசியதாக கூறப்படுகிறது. இதையொட்டி கருப்புக் கொடி காட்டிய திமுக.வினர் 192 பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் திமுக.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் நேற்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுனர் மாளிகை நோக்கி திமுக.வினர் ஊர்வலம் நடத்தினர். அவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஸ்டாலின் கைதைக் கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் மறியல் செய்த திமுக.வினரும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.
நாமக்கல் திமுக.வினர் கைது மற்றும் பல பிரச்னைகள் குறித்து இன்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது: ‘சேலம்- சென்னை பசுமை வழிச்சாலைக்கான எல்லைக்கற்கள் நடப்பட்டிருக்கின்றன. 8 வழிச்சாலைக்கு பெரும்பாலான விவசாயிகள் தாமாக முன்வந்து நிலத்தை வழங்கியுள்ளார்கள். ஒரு சிலர் மட்டுமே நிலத்தை தர மறுக்கின்றனர். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சாலையை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்ததால்தான், நாமக்கல்லில் தி.மு.க வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதனால் மாநில அரசு மத்திய அரசுக்கு உதவி செய்கிறது. மேலும் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் சேலம் விமான நிலையம் விரிவாக்கம் அவசியம். காவிரி நீர் விவகாரத்தில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பத்து நாட்களுக்கு ஒருமுறை கணக்கிட்டு தண்ணீர் வழங்கும்’ என குறிப்பிட்டார் முதல்வர்.