குண்டர் சட்டத்தில் முதல்வரை கைது செய்யுங்கள்... மதுரை கலெக்டரிடம் புகார் மனு!!!

நாங்கள் போராட காரணமாக இருப்பதும் எடப்பாடி அரசாங்கம்தான். எனவே எங்களை போராடு தூண்டுகிற முதலமைச்சர் எடப்பாடி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தான் முதலில்  குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான பதிவு, சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

பொருள்: எங்களை போராட தூண்டிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் தமிழக மக்களை பேரழிப்பு திட்டங்களில் இருந்து காப்பற்ற கோரி மனு

மாவட்ட ஆட்சியருக்கு வணக்கம்:

அன்புள்ள ஐயா வணக்கம். இந்தியா என்கிற மிகப்பெரிய குடியரசு நாடு, சர்வாதிகார நாடக மாறுகிறதே என்கிற அச்சத்தில் நாங்கள் வாழ்கிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்களுக்கு வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, போராடும் உரிமை, கேள்வி கேட்கும் உரிமை உள்ளிட்டவைகள் அனைத்தும் மறுக்கப்படுகிறது. மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவ்வுரிமைகளை நடைமுறைப்படுத்த முனையும் எங்களுக்கு தடியடி, கைது, சிறை, குண்டர் சட்டம் என தண்டனைகள் வழங்கபப்டுகிறது.

இதன் உச்சமாக “மக்களை தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்” என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த 19.07.2017 அன்று சட்டசபையில் பேசுகிறார். இது முற்றிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நினைவேந்தல் நடத்த முயன்றதற்க்காக, துண்டறிக்கை வழங்கியதற்காக என நமது இந்திய அரசியலமைப்பு சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்தியதற்காக குண்டர் சட்டத்தை எங்கள் மீது ஏவுகிறார்கள். எங்களுக்கு நீதியும் மறுக்கப்படுகிறது.

“படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம்” என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால் இப்போதிருக்கிற முதல்வர் எடப்பாடி அவர்களின் ஆட்சியில் புதிய மதுக்கடைகள் திறக்கப்படுகிறது.

அத்தோடு நில்லாமல் மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் பெண்களை நடுரோட்டில் வைத்து சட்டவிரோதமாக தாக்கிய துணை காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவிக்கிறது இந்த அரசாங்கம்.

மதுக்கடை விவகாரத்தில் எங்களை தொடர்ச்சியாக போராட தூண்டுவது இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்தான். மக்கள் விரும்பாத எந்த அழிவுத்திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என சட்டசபையில், தேர்தல் காலத்தில் உறுதியளிக்கிற ஆட்சியாளர்கள், மக்கள் தொடர்ந்து எதிர்த்து வரும் ஹைட்ரோகார்பன், மீத்தேன், அணு உலை உள்ளிட்ட பேரழிப்பு திட்டங்களை புதிதாக அமைக்கவும் திட்டம் போடுகிறது.

அதன் உச்சமாக கதிராமங்கலம் கிராமத்தில் காவல்துறை படைகள் குவிக்கப்பட்டு, மக்களின் போராட்டங்களை ஒடுக்கி, எரிவாயு எடுக்கிறது எடப்பாடி அரசாங்கம். நாங்கள் இராணுவ ஆட்சியில் இருப்பதாகவே அஞ்சுகிறோம். இந்த நாடு ஜனநாயக நாடு என சொல்லி எங்களை ஏமாற்றுகிறார்களோ என்று எங்களுக்கு ஐயமாக உள்ளது. இந்த விவகாரத்தில் எங்களை போராட தூண்டியதும் முதலமைச்சர் எடப்பாடி அரசாங்கம்தான்.

எரிவாயு எடுக்கும் திட்டங்களால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட சில மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று பல்லாண்டுகளாக போராடும் விவசாய மக்களின் எந்த கோரிக்கைகளையும் மதிக்காமல், இப்போது கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல கிராமங்களை உள்ளடக்கி “சிறப்பு பெட்ரோலியம் முதலீட்டு மண்டலம்” என்று அறிவித்துள்ளது எடப்பாடி அரசாங்கம்.

இந்த விவகாரத்தில் நாங்கள் போராட காரணமாக இருப்பதும் எடப்பாடி அரசாங்கம்தான். எனவே எங்களை போராடு தூண்டுகிற முதலமைச்சர் எடப்பாடி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
எங்கள் இயல்பு வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்டது. நாங்கள் இந்த பேரழிப்புக்கு எதிராக போராட வேண்டும். இல்லையென்றால் இதையெல்லாம் சகித்து கொண்டு சாக வேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

அணு ஆயுதங்களை பயன்படுத்தாமல் இப்படியான திட்டங்களின் வழியாக நாங்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறோமா என்று எங்களுக்கு அச்சமாக உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை என இந்திய அரசியலமைப்பு சொல்லுகிறது. ஆனால் எங்கள் மண்ணை, நீரை, வனத்தை, சுற்றுச்சூழலை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.

காப்பாற்றுவதற்காக போராடினால், நாங்கள் அதே இந்திய சட்டப்படி தண்டிக்கப்படுகிறோம். ஒன்று எங்களுக்கு நல்ல ஆட்சியை வழங்க வேண்டும் அல்லது பேரழிப்புக்கு எதிராக போராடும் உரிமை வேண்டும் அல்லது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எங்களுக்கு வழங்குகிற அடிப்படை உரிமைகளை, கடமைகளை திருத்தி இந்த நாட்டை சர்வாதிகார நாடு என்று அறிவிக்க வழிவகை செய்யுங்கள்.

எங்களை காப்பாற்றும் பொறுப்பும் பலமும் கொண்ட எதிர்க்கட்சிகள் அறிக்கை விடுவதோடு நின்றுவிடுகிறார்கள். எதிர்க்கட்சிகள் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது.
இந்த நாட்டில் துப்பாக்கி வைத்திருப்பவர்களை விட துண்டறிக்கை வைத்திருப்பவர்கள்தான் தீவிரவாதிகள் என சொல்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே இந்த மனுவை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு, அதிகார மையங்களுக்கு அனுப்பி, தமிழக மக்களை காப்பற்றுவதற்கான முயற்சிகளையும், எங்களுக்கான நீதியை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close