Advertisment

எரிவாயு மானியம் ரத்து: ஏழைகளுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம்! ராமதாஸ் கண்டனம்

எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என்று வாக்குறுதி அளித்து விட்டு, அதைக் காப்பாற்றாமல் மானியத்தை ரத்து செய்வது மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
ramadoss, PMK, NEET Exam, Bank exam

சமையல் எரிவாயு மீதான விலை உயர்வும், மானியம் ரத்தும் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, இம்முடிவுகளை உடனடியாக ரத்து செய்து மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

Advertisment

இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளுக்கான விலை இனி மாதந்தோறும் ரூ.4 வீதம் உயர்த்தப்படும் என்றும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் சமையல் எரிவாயுவுக்கான மானியம் அடியோடு ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

சமையல் எரிவாயு விலை உயர்வு கூட அறிவிப்பாக வரவில்லை. மாறாக நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலாகத் தான் இந்த விஷயம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. வழக்கமாக எந்த விலை உயர்வும் அறிவிக்கப்பட்ட பிறகு தான் நடைமுறைக்கு வரும்.

ஆனால், இந்த விலை உயர்வு அறிவிப்பு இல்லாமலேயே கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டது. அதுமட்டுமின்றி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை காரணம் காட்டி கூடுதல் விலைஉயர்வும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் ஒரு சமையல் உருளைக்கு ரூ.40 விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் மொத்தம் ரூ.56 விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

எரிவாயு உருளைகளுக்கான மானியத்தை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தும் திட்டம் 01.01.2015 அன்று நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதே இது சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை படிப்படியாக நிறுத்துவதற்கான திட்டம் என்று பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்தது.

ஆனால், சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என மத்திய அரசு உறுதியளித்தது.

ஆனால், மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு மாறாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மாதத்திற்கு ரூ.2 வீதம் உயர்த்தப்பட்டு வந்த சமையல் எரிவாயு விலை, கடந்த ஜூன் மாதம் முதல் ரூ.4 வீதம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அடுத்த மார்ச் மாதத்துடன் எரிவாயு மானியத்தை ரத்து செய்வதன் மூலம் நடப்பாண்டில் எரிவாயுவுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.22,000 கோடி மானியத்தைக் கூட செலவழிக்காமல் மிச்சப்படுத்தி, பெரு நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. எரிவாயு மானியம் ரத்து செய்யப்படாது என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து விட்டு, அதைக் காப்பாற்றாமல் மானியத்தை ரத்து செய்வது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.

LPG

உலகில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு மிக அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. மத்தியில் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற நாளில் இருந்து இன்று வரையிலான 38 மாதங்களில் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெறும் 6.3% மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவில் 153% விலை உயர்த்தப் பட்டிருக்கிறது.

இதிலிருந்தே பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மக்களின் பணத்தை மத்திய அரசு எப்படி பிடுங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். ஆகஸ்ட் முதல் தேதி நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் உற்பத்தி விலை ரூ.24.57 மட்டும் தான் எனும் நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.67.71 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரி மற்றும் லாபமாக மட்டும் ரூ.43.14 வசூலிக்கப்படுகிறது. இது அடக்கவிலையில் 175.57% ஆகும்.

நடப்பாண்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகளின் மூலமாக மட்டும் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருமானம் ரூ.2.30 லட்சம் கோடி ஆகும். ஆனால், சமையல் எரிவாயுவுக்காக மத்திய அரசு வழங்கும் மானியம் ரூ.22,000 கோடி மட்டுமே. வரி வசூலில் 9.50 விழுக்காட்டைக் கூட மக்களுக்கு மானியமாக வழங்க முன்வராத அரசு எந்த வகையில் மக்கள் நலன் காக்கும் அரசாக இருக்க முடியும்.

கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்ட மானியங்களின் அளவு மட்டும் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடி ஆகும். பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளின் மதிப்பு ரூ. 1.95 லட்சம் கோடி. மானியம் ரத்து, கூடுதல் வரிகள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த சுமார் ரூ.5 லட்சம் கோடியையும் மத்திய அரசு ஏழைகளுக்காக செலவழித்ததாக தெரியவில்லை; மாறாக பெருநிறுவனங்களுக்கான சலுகைகளுக்காகவே அந்த தொகை முழுவதும் செலவழிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் எரிவாயு மீதான விலை உயர்வும், மானியம் ரத்தும் ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, இம்முடிவுகளை உடனடியாக ரத்து செய்து மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Bjp Central Government Pmk Ramadoss Gas Cylinder Lpg Subsidy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment