டிடிவி தினகரனுக்கு அடுத்த சிக்கல்... அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு!

டிடிவி தினகரனுக்கு எதிராக அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

‘இரட்டை இலை’ சின்னத்தை மீட்க  தேர்தல் ஆணைத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டிடிவி தினகரனை தில்லி போலீஸார் கடந்த மாதம் 25–ம் தேதி கைது செய்தனர்.

இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும், டி.டி.வி.தினகரனின் நெருங்கிய நண்பரான மல்லிகார்ஜுனாவும் இதற்கு உடந்தையாக இருந்ததாக தில்லி போலீஸாரால் செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் டிடிவி தினகரனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் வகையில், கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் தில்லி போலீஸார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய அனைவரையும் கண்டுபிடிப்பதற்காக தில்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரனையும், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவையும் கடந்த மாதம் 26-ம் தேதி, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

அவர்களை சென்னை கொண்டுவந்த போலீஸார், டிடிவி தினகரனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். முதலில், சுகேஷ் யாரென்று தனக்கு தெரியாது என்று கூறிவந்த தினகரன்,  பின்னர் ஒப்புக் கொண்டார். இதைத்தொடர்ந்து, டிடிவி தினகரனை சென்னையில் இருந்து மீண்டும் தில்லிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

கடந்த 28-ந்தேதி தாய்லாந்தில் இருந்து டெல்லி திரும்பிய போது ஹவாலா தரகர் நரேஷ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக  நரேஷ் மற்றும் மற்றொரு ஹவாலா தரகரான புல்ஹித், சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்த வக்கீல் கோபிநாத் ஆகியோரிடமும் தில்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே  இடைத்தரகர் புல்ஹித்திடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், டிடிவி தினகரனின் 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த வங்கிக் கணக்குளில் இருந்து அதிக அளவு பணப்பரிமாற்றம் நடந்ததாக தெரிகிறது.  டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோரின் 5 நாள் போலீஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்தது.  இதையடுத்து டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா ஆகியோர்  தில்லி திஸ்ஹசாரே நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனாவை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காணொலி காட்சி(வீடியோ) மூலம் தினகரனை விசாரிக்க தில்லி போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் ஹவாலா தரகர் நரேஷ் ஆகியோரை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்று திகார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில்,  டிடிவி தினகரனுக்கு எதிராக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. தில்லி போலீஸார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

×Close
×Close