Advertisment

ஜி ஸ்கொயர் பிரச்னை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்; ஊடக துறையினர் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஜி ஸ்கொயர் விவகாரம்; கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி; காவல்துறைக்கு எதிராக சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

EPS condemns; Press association announced protest on G Square issue: ஜி ஸ்கொயர் பிரச்சனையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

Advertisment

ஜி ஸ்கொயர் விவகாரம் தொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி ஸ்கொயர் என்கின்ற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ஒரு தனிநபர் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுகிறது, மேலும் இந்தப் புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குனர்கள் மூவர் பெயரையும் மற்றும் சவுக்கு சங்கர், மாரி தாஸ் ஆகியோர் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குனர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது.

ஜூனியர் விகடன் பெயரையோ அல்லது சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் ஆகிய பெயர்களைக் கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டி இருந்தால் அந்நிறுவனத்தினர் ஜூனியர் விகடன் நிறுவனத்தையோ அல்லது அதில் உள்ள இரண்டு நபர்களையோ அணுகி தெளிவு பெற்று இருக்கலாம். அது உண்மையா என்று விசாரித்து இருக்கலாம், ஆனால் காவல்துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளிப்பதும் இரவோடு இரவாக மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும் ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே கருதவேண்டியுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் மூன்றாவது குற்றவாளியாக ஜூனியர் விகடன் அதில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் வரை அனைவரையும் கைது செய்ய காவல்துறைக்கு உரிமை வழங்கியுள்ளது.

இந்த பொய் புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்துக்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பத்திரிக்கை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், எழுத்து சுதந்திரம் பற்றியெல்லாம் வாய் கிழியப் பேசிய இதை ஆட்சியாளர்கள் அதிகார மமதையில் உச்சத்திற்கே சென்றுள்ளார்கள். அனைத்து செய்தி ஊடகங்களும் கைகட்டி வாய் பொத்தி தங்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என்று இந்த அரசு எதிர்பார்க்கிறது. தாங்கள் செய்யும் தவறுகளை எந்த ஒரு ஊடகமும் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு இந்த அரசு உத்தரவிட்டது போல் தெரிகிறது.

பத்திரிக்கை சுதந்திரம் பற்றிப் பேசும் திமுகவின் அரசியல் கூட்டணிகள் ஒரு சில சமூக வலைதளங்கள் மற்றும் சமூக ஊடகவியலாளர்கள் பத்திரிகையாளர் சங்கங்கள் பத்திரிகை சுதந்திரத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு சில ஆங்கிலம் மற்றும் தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் ஒரு சில செய்தி ஊடகங்கள் என அனைத்தும் இந்த விடியா அரசின் பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையை வாய்மூடி மௌனமாக வேடிக்கை பார்ப்பதை பார்க்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்ற பாரதியின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

தங்களுக்கு வெண்சாமரம் வீசும் காட்சி ஊடகங்கள் மற்றும் அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற மமதையை இந்த அரசு விட்டொழிக்க வேண்டும் காவல்துறை அதிகாரிகள் தங்களிடம் கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்து உண்மை தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு திமுகவிற்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் வழக்கு பதிவு செய்த உடனே கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இதற்கு தமிழக மக்கள் விரைவில் சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஜூனியர் விகடன் மீது போடப்பட்ட பொய்வழக்கு எதிராக சென்னை காவல்துறைக்கு எதிராக சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டன ஆர்பாட்டம் அறிவித்துள்ளது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜி ஸ்கொயர் என்கிற தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் புருஷோத்தமன் குமார் என்பவர் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் 21-05-2002 அன்று அளித்த பொய்ப்புகாரில் வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மூவர் பெயரையும், ஆசிரியர் நிருபர் ஜுனியர் விடனுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சவுக்கு சங்கர், மாரிதாஸ் ஆகியோர் பெயர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்துள்ளனர்.

தற்போது காவல்துறையில் புகார் கொடுத்துள்ள ஜி ஸ்கொயர் நிறுவனம் தங்களைப் பற்றிய செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் மீது ஏற்கெனவே வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு விகடன் நிறுவனமும் பதிலளித்திருக்கும் நிலையில் அதே உள்ளடக்கத்தை கொஞ்சம் கூடுதலாக புகாரைச் சேர்த்து காவல் துறையிடம் வழங்கியுள்ளனர். புகாரின் உண்மையை முழுமையாக விசாரித்து அறியாமல் வேகவேகமாக ஜூனியர் விகடன் நிறுவன இயக்குநர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது இதன் பின்னணி குறித்து கேள்விகளை எழுப்புகிறது. இந்த பொய்ப்புகாரை வழக்காக பதிவு செய்து ஊடகங்களை மிரட்டும் போக்கு கண்டனத்துக்கு உரியது.

புகாரில், 3வது குற்றவாளியாக “ஜூனியர் விகடனோடு சம்பந்தப்பட்டவர்கள்” என்பது, விகடன் குழுமத்தின் உரிமையாளர் முதல் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஓட்டுனர் வரை அனைவரையும் கைது செய்ய, காவல் துறைக்கு உரிமை வழங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஜி ஸ்கொயர் நிறுவனத்தை மிரட்டியதாக ஒருவர் கைது: சவுக்கு சங்கர், மாரிதாஸ் மீதும் வழக்கு

ஜூனியர் விகடன் பெயரை கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டினால், அந்நிறுவனத்தினர் விகடன் நிறுவனத்தை அணுகி தெளிவு பெற்றிருக்கலாம். அது உண்மையா என்றும் விசாரித்திருக்கலாம்.  ஆனால், காவல் துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளிப்பதும், இரவோடு இரவாக, மின்னல் வேகத்தில் சென்னை மாநகர காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், ஆளும் கட்சிக்கு எதிராக செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையாகவே கருத வேண்டியுள்ளது.

கருத்துரிமையை நசுக்கும் எதேச்சதிகார போக்கைக் கண்டித்தும் காவல்துறையின் அதிகார அத்துமீறலைக் கண்டித்தும் இந்த விவகாரத்தில், ஊடக சுதந்திரத்தை மதிக்கும் முதலமைச்சர் உடனடியாகத் தலையிடவும் வலியுறுத்தி மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்து பத்திரிகையாளர் அமைப்புக்கள் இணைந்து அடையாளப்பூர்வ கண்டன ஆர்பாட்டத்தை சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் (24-05-2022) செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பத்திரிகைகள் ஊடகங்கள் மீது போடப்படும் பொய்வழக்குகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கையை கொண்டவர்கள் நன்கறிவார்கள். கருத்து சுதந்திரத்தை நசுக்கும் அநீதியை கண்டிப்போம். ஊடக சுதந்திரத்துக்காக உரத்த குரல் கொடுப்போம். கண்டன ஆர்பாட்டத்தில் பங்கேற்போம். எழுத்துரிமை பேச்சுரிமை கருத்துரிமை காத்திட குரல் கொடுப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment