அணைத்த கைகளே இனி அடிக்கும்? தமிழக ஆட்சியாளர்களின் ‘கஜானா’வை குறி வைத்த ஐ.டி.!

இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பையும் வருமான வரித் துறை குறி வைக்க ஆரம்பித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி திசை மாறுகிறதா?

இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பையும் வருமான வரித் துறை குறி வைக்க ஆரம்பித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி திசை மாறுகிறதா?

இபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்புக்கே டெல்லி அதிகார வட்டாரங்கள் உதவியதாக தமிழக அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவி வருகிறது. இருவரும் இணைந்ததைத் தொடர்ந்து, நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் அப்போதைய ஆளுனர் வித்யாசாகர் ராவ் இபிஎஸ்-ஓபிஎஸ் கைகளைப் பிடித்து இணைத்து உயர்த்திப் பிடித்த காட்சியே அதற்கு சாட்சியாக அமைந்தது.

ஆனால் ஆளும்கட்சியாக இருந்தும் ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வியை தழுவியது, டிடிவி தினகரனை ஜெயிக்க விட்டது, நோட்டாவைவிட குறைவாக பாஜக வாக்குகள் வாங்கியது உள்ளிட்ட அம்சங்கள் டெல்லியை வெகுவாக யோசிக்க வைத்துவிட்டதாக தெரிகிறது. அதன்பிறகு தமிழக ஆளும்கட்சி விஐபி.க்களுடன் டெல்லி பாஜக தலைவர்கள் யாரும் பெரிதாக நெருக்கம் காட்டவில்லை.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா படத்தை திறக்க பிரதமர் மோடியின் ‘அப்பாய்ன்மென்ட்’டை பதவியேற்ற தருணத்திலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டார். ஆனால் அதற்கு மோடி ஒப்புதல் கொடுக்கவில்லை. எனவே மோடியோ, தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்தோ இல்லாமல் கடந்த 12-ம் தேதி சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். பிரதமர் மோடியிடம் தமிழக ஆட்சியாளர்களின் செல்வாக்கு மங்கிப் போனதை உணர்த்தும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.

இப்போது இதன் அடுத்த கட்டமாக இதுநாள் வரை சசிகலா தரப்பை மட்டுமே குறி வைத்துப் பாய்ந்த வருமான வரித் துறை இப்போது தமிழக ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களையும் நோக்கிப் பாய்கிறது. குறிப்பாக ஆர்.எஸ்.முருகன் என்பவரது திருநெல்வேலி இல்லத்தில் கடந்த 12-ம் தேதி நடைபெற்றிருக்கும் ரெய்டு!

ஆர்.எஸ்.முருகனின் சொந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள விஜயநாராயணம்! அதிமுக.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தவர்! பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணிகள் பலவற்றையும் ஒப்பந்தம் எடுத்துச் செய்கிறவர்!

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு ஓபிஎஸ் தரப்புக்கு வேண்டிய பலரையும் ஜெயலலிதா உத்தரவுப்படி மாநில போலீஸாரே ‘ரெய்டு’ அடித்ததாக செய்திகள் வந்தன. அப்போது ஆர்.எஸ். முருகனும் அதில் சிக்கியதாகவும், சில காலம் வெளியே தலை காட்டாமல் இருந்ததாகவும் அப்போது கூறப்பட்டது.

அதே ஆர்.எஸ்.முருகன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வர ஆரம்பித்திருக்கிறார். அரசு ஒப்பந்தப் பணிகளையும் அவர் கையாண்டதாக தெரிகிறது. அவருக்கு பாளையங்கோட்டை, என்.ஜி.ஓ காலனியில் 2 வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வீடுகளில் கடந்த 12-ம் தேதி வருமான வரித் துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். பணப் பரிமாற்றங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றியதாகவும் தெரிகிறது.

இதேபோல விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டுமான தொழில் அதிபரான காமராஜ் என்பவரின் இல்லத்திலும் வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். இவரது நிறுவனமும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆளும்கட்சியின் ‘கஜானா’ என கூறத்தக்க நபர்களாக பார்த்து வருமான வரித் துறை தங்கள் வேட்டையை தொடங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சசிகலாவின் குடும்பத்தை வளைத்த ஐ.டி., இப்போது அப்படியே திசை மாறி புயலாக தாக்கத் தொடங்கியிருப்பது ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது.

ஜெயலலிதா படம் திறப்பு விழாவுக்கு மோடியும் ஆளுனரும் வராதது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு இதுவரை மோடி அப்பாய்ன்மென்ட் கொடுக்காதது, ஓகி புயல் பாதிப்பு குறித்து டெல்லியில் பிரதமரை சந்திக்க இதுவரை தமிழக ஆட்சியாளர்களுக்கு அப்பாய்ன்மென்ட் கிடைக்காதது, இப்போது ஐ.டி. ரெய்டு… என அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் டெல்லியின் தட்பவெப்பம் அதிமுக.வுக்கு சாதகமாக இல்லை என உணர்த்துகிறது. எனவே ஆட்சி கவிழும் நிலை உருவானால், டெல்லியின் கைத்தாங்கல் கிடைக்காது என்பது நிஜம்!

அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள். இங்கு அணைத்த கைகளே அடிக்கும் போல் தெரிகிறதே!

 

×Close
×Close