Advertisment

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?

அ.தி.மு.க தலைமை தொடர்பாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா காலமானதால், காலியான ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Supreme Court postpones verdict in AIADMK case

தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க தலைமை தொடர்பாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வே.ரா காலமானதால், காலியான ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

அ.தி.மு.க-வில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிலவி வருகிறது. அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனால், அ.தி.மு.க-வினர் ஓ.பி.எஸ் அணி - இ.பி.எஸ் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றானர். பொதுக்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக வந்தது. இதை எதிர்த்து, இ.பி.எஸ் தரப்பு மேல்முறையீடு செய்ததில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றதில் நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க தலைமை தொடர்பாக ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இடையேயான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் எம்.எல்.ஏ காலமானதால், காலியான ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ளது.

2016-ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்ததைத் தொடர்ந்து, நடந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில், அ.தி.மு.க ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் - டி.டி.வி தினகரன் அணி என மூன்று அணிகளாகப் பிரிந்தனர். மூன்று தரப்பும் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால் தேர்தல் ஆணையத்தால் 2017-ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

பிறகு, ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணி இணைந்த பிறகு, அ.தி.மு.க மீண்டும் இரட்டை இலை சின்னம் பெற்றது. 5 ஆண்டுகளுக்கு பிறகு, அ.தி.மு.க-வில் மீண்டும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் பிரிந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, தேர்தல் ஆணையம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக, ரிமோட் மின்னணு வாக்குப்பதிவுக்கு அனுமதி அளிப்பது குறித்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க-வுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை இ.பி.எஸ் தரப்பு திருப்பி அனுப்பியது. இதனால், தேர்தல் ஆணையத்தில், அ.தி.மு.க ஆவணங்களில் இன்னும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றே இருக்கிறது என்பது தெரிகிறது.

பெரியாரின் கொள்ளுப் பேரனும், மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகனுமான திருமகன் ஈ.வே.ரா ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த நிலையில், ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. விரைவில் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? கிடைகாதா என்று தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில், அ.தி.மு.க தலைமை தொடர்பான பிரச்னையில், கட்சித் தலைமை தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்காமல் போனால், அல்லது தீர்வு கிடைப்பதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் ஆனால், தேர்தல் கட்சி அனுமதி அளிக்கும் பி-படிவத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் கையொப்பமிடாத வரை, அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் கிடைக்காது.

2021-ம் ஆண்டு சட்டம்னறத் தேர்தலில் அ.தி.மு.க தனது கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸுக்கு ஈரோடு கிழக்கு தொகுதியை ஒதுக்கியது. த.மா.கா வேட்பாளர் கூட்டணி கட்சியான அ.தி.மு.க-வின் இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், இரட்டைஇலை சின்னம் கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்வியாலும், இந்த தொகுதி மேற்கு மண்டலத்தில் தி.மு.க கோட்டையாக இருப்பதாலும், இந்த இடைத் தேர்தல் அ.தி.மு.க.வுக்கு அக்னிப் பரீட்சையாக இருக்கும்.

இது குறித்து ஆங்கில செய்தி இணையதளத்துக்கு கருத்து தெரிவித்துள்ள அ.தி.மு.க மூத்த தலைவர் ஒருவர், “இந்த இடைத்தேர்தல் எங்களுக்கு கவலை அளிக்கிறது. ஏனெனில், தேர்தல் ஆணையத்தின் பதிவுகள் இன்னும் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இருவரையும் தலைவர்களாகக் குறிப்பிடுகிறது. தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் தேர்தல் ஆணையம் பொதுக்குழு முடிவை ஏற்றுக்கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்யாவிட்டால், வேட்பாளர்களுக்காக வழங்கப்பட்ட பி-படிவத்தில் இ.பி.எஸ்-ன் கையெழுத்து செல்லாது” என்று கூறினார்.

இதனால், இந்த இடைத் தேர்தலில், அ.தி.மு.க அல்லது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட்டாலும், பட்டியலில் இருந்து பொதுவான சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும். “எங்களுக்கு சின்னம் கிடைக்காவிட்டால், அது நிஜமாகவே சங்கடமாக இருக்கும். அதற்குள் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் இந்த பிரச்னையை தீர்த்து வைத்து இ.பி.எ.ஸ்-ஐ அ.தி.மு.க-வின் தலைவராக அங்கீகரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அந்த அ.தி.மு.க தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், இந்த இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க உள்ளதாக மற்றொரு தலைவர் கூறினார். “எங்களுக்குள் சண்டை போட முடியாது. தி.மு.க-வினர் மேற்கு மண்டலம் இப்போது அவர்கள் பக்கம் திரும்புகிறது என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதை நாங்கள் பொய்யாக்க வேண்டும், அதற்குத் அ.தி.மு.க-வில் ஒற்றுமையும் கடின உழைப்பும் மட்டுமே தேவை” என்று கூறினார்.

இடைக்கால பொதுச்செயலாளர் என்று இ.பி.எஸ் கூறினாலும், ஓ.பி.எஸ் தரப்பு, பொதுக்குழுவை நிர்வாகிகளால் கூட்ட முடியாது என்றும், எம்.ஜி.ஆர் வகுத்த கட்சி விதிகள்படி அ.தி.மு.க உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும்” என்று கூறுகிறார்கள்.

அதே நேரத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில், த.மா.கா. போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், இது குறித்து மிக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். யுவராஜாவும் கட்சித் தலைவரின் முடிவிற்கு கட்டுப்படுவேன் என்று கூறியுள்ளார்.

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த, யுவராஜா இந்தத் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளதாக த.மா.கா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Aiadmk Erode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment