Advertisment

கமல்ஹாசனுடன் மு.க.அழகிரி கூட்டணியா? பரபரக்கும் அரசியல்

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் அரசியல் பிரச்சாரங்களுக்கு இடையே மு.க அழகிரியின் அரசியல் நிலைபாடு என்ன என்பது பெரும் கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Azhagiri ana Kamal

Azhagiri ana Kamal

தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான பிரச்சராம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக சார்பில் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகிய மூவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இவர்களை அடுத்து  தி.மு.க வின் முன்னாள் உறுப்பினர் மு.க அழகிரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எப்போதும் தேர்தல் பிரச்சாரத்தில் அவ்வளவாக ஈடுபடாத அழகிரி கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறார். இதில் அவரின் பேச்சுக்கள் அனைத்தும் திமுக தொண்டர்களின் அனுதாபத்தை பெறும் வகையில் உள்ளது. மேலும் தனது சகோதரர் மு.க ஸ்டாலினுடனான குடும்ப  விவகாரங்களை  பொதுமேடையில் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இது தொடர்பாக மதுரையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அழகிரி, சதிகாரர்கள், துரோகிகளின் வீழ்ச்சிக்கு கிடைக்கும் முதல்படிக்கட்டு இது. 1989-ல் மதுரை வந்ததாகவும், அன்றிலிருந்து நான் உங்களுடன் ஒருவனாக இருக்கிறேன். என்னையும், உங்களையும் யாராலும் பிரிக்க முடியாது. பல துரோக சக்திகள் சேர்ந்து, கலைஞரிடம் என்னைப்பற்றி சொல்லி, பேராசிரியருக்கும் தெரியாமல் என்னை கட்சியைவிட்டு நீக்கினர்.

எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. எம்ஜிஆர் கோட்டையாக இருந்த மதுரையில், உங்களுடன் சேர்ந்து வெற்றியை நிலை நாட்டினேன். 2000-ல் கட்சியைவிட்டு என்னை தற்காலிகமாக நீக்கினர். அப்போது 2001-ல் மதுரை மாநகராட்சி தேர்தல் வந்தது. 7 கவுன்சிலர்களை வென்றோம். திருமங்கலம் இடைத்தேர்தலில், 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றபோது, மு.க.அழகிரி பார்முலா என, சில ஊடகங்களில் கூறினர். இந்த வெற்றிக்குப்பின், என்னை பாராட்டுவதாகக் கூறி சென்னைக்கு என்னை அழைத்துபோது, விமான நிலையத்திற்கு 10 பேரை அனுப்பி வரவேற்றனர். அதுகூட தற்போதைய தலைவர் ஸ்டாலின் சதி தான்.

திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, மதிய உணவுக்காக எனது தம்பி ஸ்டாலின், எம்ஆர்கே பன்னீர்செல்வம், பொன்முடி. ஐ.பெரியசாமி ஆகியோர் வந்தபோது, தலைவரிடம் சொல்லி, தம்பிக்கு (ஸ்டாலின்) பொருளாளர் பதவி வாங்கித்தரவேண்டும் என, வலியுறுத்தினர். உடனே போனில் சொன்னேன். அன்றைக்கு மாலையே அவர் பொருளாளராக தலைவரால் அறிவிக்கப்பட்டார். அவர் விரும்பியதால் அப்பதவியை கேட்டு வாங்கிக் கொடுத்தேன். அன்றைய தினமே இரவில் எனது வீட்டுக்கு ஸ்டாலின், அவரது மனைவியும் சாப்பிட வந்தனர்.

அப்போது, நானும், எனது மனைவியும் சொன்னோம். தலைவருக்குப் பிறகு கட்சித் தலைவர், முதல்வர் எல்லாமே நீ தான். உனக்காக நான் பாடுபடுவேன் என்று கூறினேன் ஆனாலும், அவர் ஏன் இப்படி எனக்கு துரோகம் செய்கிறார் எனத் தெரியவில்லை. அமைச்சரான பின், என்னிடம் தலைவர் கேட்டார். உனது தம்பி ஸ்டாலின் துணை முதல்வர் பதவி கேட்கிறார் என்றபோது, தாராளமாக கொடுங்கள் என்றேன். மந்திரி பதவி வைத்து, மக்களுக்காக உழைத்தேன். என்னை எதற்காக கட்சியை விட்டு நீக்கினர்

தலைவரின் மறைவுக்கு முன்பு, மீண்டும் கட்சியில் சேர்க்க சொன்னபோது, கொஞ்ச நாள் பொறுத்திரு, சேர்த்துக் கொள்றேன் என, நம்பிக்கை தெரிவித்தார். அதற்குள் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதன்பின், என்னை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். எத்தனையோ பேருக்கு உழைத்து இருக்கிறேன். மந்திரி ஆக்கினேன். எவருக்கும் நன்றி கிடையாது. கலைஞரால் எல்லோரும் கோடீஸ்வரன் ஆகிவிட்டனர். கலைஞர் தான் திமுகவின் உயர்மூச்சு. கலைஞரை மறந்து கட்சி நடத்துகின்றனர். அவரை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டும். எதுவானாலும் விரைவில் நான் அறிவிக்கலாம். அறிவிக்காமலும் இருக்கலாம். எதையும் தாங்கும் இதயமாக நீங்கள் இருக்கவேண்டும்.

அழகிரியின் இந்த பேச்சு திமுக தொண்டர்களின் அனுதாபத்தை பெறும் வகையில் உள்ளது. மேலும் ஸ்டாலினுடனான மோதலை பொது இடத்தில் விமர்சித்ததால், அதிமுக பாஜக  கட்சியினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவரின் பேச்சு மீண்டும் திமுக வில் சேர்வதற்காகவா அல்லது தனி கட்சி தொடங்குவதற்காகவா என்ற பெரும் சந்தேகம் நிலவி வருகிறது. அது மட்டுமல்லாமல் அவர் அதிமுக மற்றும் பாஜகவில் சேர்வார் என பலதரப்பில் இருந்து கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், அழகிரி தனது பேச்சில் கலைஞரின் புகழ் பற்றி பேசியுள்ளதால் அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை.

மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அங்கும் அவர் செல்ல வாய்பில்லை. இதில் ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்த அழகிரி ரஜினியை சந்திப்பேன் என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து ரஜினி கட்சி தொடங்கினால் அந்த கட்சியில் கூட்டணி சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டு தீவிரமாக செயல்பட்டு வந்த ரஜினிகாந்த் திடீரென கட்சி தொடங்கவில்லை என அதிரடி அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அழகிரி குறித்து மக்களின் கணிப்பு பொய்த்துபோனது.

ஆனாலும் தற்போது அதிமுக திமுக என இரு பெரும் கட்சிகளுக்கு மாற்றாக கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சரத்தில் கமல்ஹாசன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதனால் மாற்று கட்சி என்ற பெயரில் அழகிரி மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணியில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அழகிரி  கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஆலோசனைகளில் ஈடுபடாத நிலையில், தற்போது  அவரது மாற்றம் அவரது தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment