பசுமை வழிச் சாலையை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் - தமிழக விவசாய சங்கச் செயலாளர் அறிவிப்பு

போதிய கால அவகாசம் தராமல் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மாநில அரசு...

விவசாயிகள் தங்களின் வீடுகள் மட்டும் நிலங்களில் வருகின்ற ஜூன் 26ம் தேதி கருப்புக் கொடியினை கட்டி தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவிக்க இருப்பதாக விவசாயிகள் சங்கச் செயலாளர் சண்முகம் தகவல்

சேலத்திலிருந்து சென்னை வரை பசுமை வழிச் சாலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  அத்திட்டத்தினை நிறைவேற்றக் கூடாது என்று பல்வேறு இடங்களில் விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய மக்களை நேற்று கைது செய்திருக்கின்றது தமிழக காவல்துறை. நேற்று மட்டும் மொத்தம் 24 விவசாயிகளை கைது செய்திருக்கின்றார்கள். இதனை எதிர்த்தும், பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்தும், தமிழக விவசாய சங்கம், பல்வேறு விவசாய அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றது.

இது தொடர்பாக பேசிய தமிழக விவசாய சங்கச் செயலாளர், மக்களின் எதிர்ப்பினையும் மீறி அவர்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயல்கின்றது இவ்வரசு. விவசாய சங்கங்கள், விவசாய நிலங்களை அளந்து வைக்கப்பட்டிருந்த சர்வே கல்லினை அகற்ற முடிவு செய்திருக்கின்றது. மேலும் வருகின்ற 26ம் தேதி இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ய முடிவு செய்திருக்கின்றார்கள். அதன் பின்பும் இத்திட்டத்தை கைவிடவில்லை எனில், ஜூலை 6ம் தேதி இத்திட்டத்தின் உத்திரவினை எரித்து போராட்டம் செய்யப் போவதாகவும் முடிவு செய்திருக்கின்றார்கள்.

நேற்று (20/06/2018)  திருவண்ணாமலை பகுதியில், விவசாயிகள் கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த 24 விவசாயிகளை கைது செய்து நேற்று மாலை விடுவித்திருக்கின்றது தமிழக காவல் துறை. அம்மாவட்ட விவசாய சங்கத்தலைவர் டி.கே. வாசன் மற்றும் துணைத்தலைவர் பாலராமனையும் விசாரணைக்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து அனைத்திந்திய கிஷான் சபை உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் பேசிய போது, “தமிழக அரசு, மக்களை போராட்டங்களில் ஈடுபடாமல் தவிர்க்க காவல்துறையை பயன்படுத்திக் கொள்கின்றது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

”தூத்துக்குடியில் 13 போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்றது தொடர்பாக மக்களின் மத்தியில் இன்னும் வருத்தம் நிலவி வரும் சூழலில், பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுப்பது இன்னும் மோசமான சூழலையே உருவாக்குகின்றது” என்றும் அவர் கூறியுள்ளார். போராட்டக்காரர்களை கைது செய்வதே ஒரு வகையில் போராட்டத்திற்கான வெற்றியாக நாங்கள் கருதுகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

277 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த எட்டு வழிச் சாலையை பாரத்மாலா பரியோஜானா திட்டத்தின் மூலமாக கட்ட மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான உத்தரவினை வெளியிட்டிருக்கின்றது. இச்சாலை சென்னையில் தொடங்கி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலத்தில் முடிவடைகின்றது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close