Advertisment

நீட் தேர்வுக்கு மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை மரணம்: மாணவனின் கல்விச் செலவை ஏற்பதாக அரசு அறிவிப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Father Krishnaswamy body

நீட் தேர்வெழுத எர்ணாகுளத்திற்கு மகனை அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணமடைந்தார். தந்தையின் மரணம் அறியாமல் மகன் தேர்வெழுதிய நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் இன்று நீட் தேர்வு எழுதுகிறார். திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட மாணவனுக்கு நீட் தேர்வு எழுத எர்ணாகுளத்தில் மையம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே நேற்று முன்தினம் தந்தை கிருஷ்ணசாமியுடன் மகன் கஸ்தூரி கேரளா சென்றார்.

father krishnaswamy

இன்று காலை இருவரும் நீட் தேர்வு மையத்திற்குச் செல்ல தயாரானபோது கிருஷ்ணசாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே தேர்வு மையத்திற்குத் தனது மகனை அழைத்துச்செல்லுமாறு அவர்கள் தங்கியிருந்த விடுதி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து ஓட்டல் உரிமையாளர்கள் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்துச் சென்றனர். பின்னர் தேர்வு மையத்திலிருந்து விடுதிக்குத் திரும்பியபோது கிருஷ்ணசாமி அசைவற்ற நிலையில் இருப்பதைப் பார்த்துள்ளனர்.

கிருஷ்ணசாமி உடனே அருகில் இருந்த சிட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவரின் உயிர் பிறிந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் உடல் அலைச்சலுக்கு ஆளானதால் மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

father dead neet

நீட் தேர்வெழுத அழைத்துச் சென்ற தந்தை மாரடைப்பால் மரணமடைந்தது கூட அறியாமல் மகன் கஸ்தூரி மையத்தில் தேர்வெழுதி வரும் நிலமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகனை எப்படியாவது டாக்டர் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவில் கிருஷ்ணசாமி இருந்தார்.

இதையடுத்து கிருஷ்ணசாமியின் மரணச் செய்தியை அவரின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். தற்போது அவர்கள் எர்ணாகுளம் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் அவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வர அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து தரும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இந்தத் தகவலை அடுத்து அவரின் உடலை எடுத்து வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மறைந்த கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம் மற்றும் அவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

student kasturi magalingam

இதைத் தொடர்ந்து, தேர்வெழுதிவிட்டு வெளியே வந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். அவர் அதிகாரிகளிடம் 'அப்பா எங்கே?' என கேட்ட போது, அவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. கூடியிருந்த மற்ற பெற்றோர்கள் கண்ணீர் விட்டு அழுது இருக்கின்றனர். தற்போது அந்த மாணவரை, அவரது தந்தை உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

இறந்த கிருஷ்ணசாமியின் மனைவியின் தங்கை, தற்போது எர்ணாகுளம் விரைந்துள்ளார்.

இதுகுறித்த Live Updates இங்கே,

மாலை 04.00 -  கிருஷ்ணசாமியின் உடலை அவரது மைத்துனர் அன்பரசன் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் பெற்றுக் கொண்டார். அப்போது கிருஷ்ணசாமியின் மகன் கஸ்தூரி மகாலிங்கம் கதறி அழுதது காண்போரை கலங்க வைத்தது.

பிற்பகல் 03.45 -  திருவாரூர்: விளக்குடியில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவும், மாணவர் மகாலிங்கம் குடும்பத்திற்கு நிதியுதவி தரவும் கோரிக்கை

பிற்பகல் 03.30 - நீட் தேர்வுக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகளே காரணம். மத்தியில் இரு கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 03.00 - மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வர தமிழக அரசின் குழு எர்ணாகுளத்திற்கு புறப்பட்டது.

பிற்பகல் 02.50 -  தமிழக மாணவர்களை வெளிமாநிலங்களில் நீட் தேர்வை எழுத வைத்து மத்திய அரசு வஞ்சிக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வு இருக்ககூடாது என்பதற்காக இனி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். நீட் தேர்வுக்காக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது என முத்தரசன் பேட்டியளித்துள்ளார்.

பிற்பகல் 02.40 - பி.ஆர்.பாண்டியன் தலைமையில், எர்ணாகுளத்தில் இறந்த கிருஷ்ணசாமியின் உறவினர்கள் கிராம மக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். நீட் தேர்வில் விலக்கு கோரியும், கிருஷ்ணசாமி குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியும் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

பிற்பகல் 02.30 - மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்- முதலமைச்சர் பழனிசாமி.

பிற்பகல் 02.15 - உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் போதாது என்பதால் நிதியுதவியை அதிகரிக்க வேண்டும் என தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிற்பகல் 02.00 - தந்தை இறந்தது தெரியாமல் மாணவன் நீட் எழுதியது துயரம் என தமிழிசை சௌந்திரராஜன் பேட்டி.

மதியம் 01.55 - மாரடைப்பால் இறந்த கிருஷ்ணசாமியின் மனைவிக்கு போனில் ஆறுதல் கூறினார் முதலமைச்சர் பழனிசாமி. மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு தாங்கள்தான் தைரியம் கூறவேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மதியம் 01.45 -  அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் பதில் கொடுப்பார்கள் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மதியம் 01. 35 - மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு உரிய முறையில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்து தரவில்லை. முறையாக மாணவர்களை தயார் செய்ய முடியாத நிலையில் அரசு நடந்துகொண்டது கண்டனத்திற்குரியது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment