ஜிஎஸ்டி பாதிப்புகளை தாராளமாக தெரிவிக்கலாம்; தீர்வு காணப்படும்: ஜெட்லி உறுதி

ஜி.எஸ்.டி. வரியால் ஏதேனும் பாதிப்பு என்றால் மாநில அரசுகள் தாராளமாக தெரிவிக்கலாம். அதற்கு உரிய தீர்வு காணப்படும் என அருண் ஜெட்லி உறுதி அளித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரியால் ஏதேனும் பாதிப்பு என்றால் மாநில அரசுகள் தாராளமாக தெரிவிக்கலாம். அதற்கு உரிய தீர்வு காணப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உறுதி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி அறிமுக விழாவில், இந்த வரிவிதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜிஎஸ்டி குறித்த விளக்கக் கூட்டம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னை வந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அருண் ஜெட்லி, அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அருண் ஜெட்லி வருகைக்கு மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்க சென்னை பல்கலை நுழைவாயிலில் திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று மாணவர்கள் சுமார் 15 பேரை அப்புறப்படுத்தினர்.

அதனையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபர்கள், வர்த்தக, வணிகர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற ஜிஎஸ்டி குறித்த விளக்கக் கூட்டத்தில், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்வேறு தொழில் வர்த்தக சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அருண் ஜெட்லி பேசியதாவது: நாடு முன்னேற சில கடின முடிவுகளை எடுப்பது கட்டாயம். கடினமான முடிவுகளை எடுக்கும்போது பல்வேறு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமான வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனால், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

முந்தைய அரசுகளும், ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த முயன்றன. தமிழகம், மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா ஆகிய உற்பத்தி மாநிலங்களின் முதல்வர்கள், வருவாய் இழப்பால் பாதிக்கப்படுவோம் என எதிர்ப்பு தெரிவித்தனர். அவ்வாறு மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்படும் பட்சத்தில் அதை ஈடுகட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இது, மத்திய அரசு விதித்துள்ள வரி என்பது தவறான கருத்தாகும்.

ஜிஎஸ்டி-யால் மாநிலங்களின் வளர்ச்சியில் பாதிப்பு வராது. ஊழல் ஒழிந்து நாடு அதிவேக வளர்ச்சி பெறும். ஜி.எஸ்.டி. வரியால் ஏதேனும் பாதிப்பு என்றால் மாநில அரசுகள் தாராளமாக தெரிவிக்கலாம். அதற்கு உரிய தீர்வு காணப்படும் என்றார்.

×Close
×Close