தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை... அமைச்சர் காமராஜ் திட்டவட்டம்

சமூக வலைதளங்களில் பரப்படுவது வதந்தியாக இருக்கக்கூடும்

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழக அரசின் விலையில்லா அசிரித் திட்டமும், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டமும் இணைந்து இரண்டையுமே செயல்படுத்துகின்ற ஒரே மாநிலம் தமிழகம் மட்டும் தான். அந்த வகையில் தமிழகத்திற்கு தேவையான அரிசிகள் ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடைகளில் வாங்குபர்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூ.20-க்கு வழங்கப்படும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிசந்தைகளிலும் அரிசியின் விலை கட்டுக்குள் இருக்கிறது.

தமிழகத்தில் ரேசன் கடைகளுக்கு வழக்கப்பட வேண்டிய 2 லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதில் கூடுதல் அசிரி தேவைப்படும்பட்சத்தில் 3 லட்சத்து 28 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ரேசன் கடைகளுக்கு அசிரி வழங்கப்படுவதில் எந்த வித பிரச்சனையும் இல்லை.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது போன்ற விஷயங்களை கண்காணித்து, அறிவுரை கூறி வருகிறார். அதனால் அரிசியின் விலை கட்டுக்குள் இருக்கிறது.

பிளாஸ்டிக் அரிசி என்பது தமிழகத்தில் கிடையவே கிடையாது. தரமான அரிசி வழங்கப்படுவதில் பிரச்சனை ஏற்படும் பட்சத்திலேயே, போலியான அரிசி சந்தைக்குள் வர வாய்ப்பிருக்கிறது. தரமான அரிசி தமிழகத்தில் கிடைக்கும் போது, பிளாஸ்டிக் அசிரி தமிழகத்தில் இருக்க வாய்ப்பே இல்லை.

சென்னையில் உள்ள துரித உணவு கடைகளில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து?

பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்தப்படுவதாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. அவ்வாறு எதேனும் புகார் வரும்பட்சத்தில் அது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் அரிசி வழங்கப்பட்டு வரும் வேளையில், பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை. சமூக வலைதளங்களில் பரப்படுவது வதந்தியாக இருக்கக்கூடும் என்று கூறினார்.

×Close
×Close