Advertisment

பேச்சால் பெருங்கூட்டத்தை கவர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்

5 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ரகுமான்கான், 1996-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார்.

author-image
WebDesk
New Update
Former DMK Minister Rahman Khan Passed Away

முன்னாள் அமைச்சர் ரகுமான்கான்.

DMK Former Minister Rahman khan Death: தமிழக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் இன்று சென்னையில் காலமானார். இவர் திமுக ஆட்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். அதோடு திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தார்.

Advertisment

திமுக-வின் சிறுபான்மை முகங்களில் ரகுமான்கானின் முகம் படு பிரபலமானது. தேனி மாவட்டம் கம்பம் தான் இவரது சொந்த ஊர். ரகுமானின் சட்டமன்றம் மற்றும் மேடைப் பேச்சுக்களைக் கேட்பதற்கென்றே பெருங்கூட்டம் இருந்தது.

‪முன்னாள் அமைச்சரும், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான, ஆருயிர் அண்ணன் ஏ.ரகுமான்கான் அவர்களின் மறைவு செய்தி...

Posted by Dayanidhi Maran on Wednesday, 19 August 2020

ரகுமான் கான், சென்னை சேப்பாக்கம் தொகுதியில் 1977, 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றவர். 1989-ல் சென்னை பூங்காநகர், 1996-ல் ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர். இப்படி 5 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ரகுமான்கான், 1996-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார். திமுகவின் தலைமை செய்தித் தொடர்பாளராக இருந்தார். தமிழக அரசின் சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழுவின் துணை தலைவராக இருமுறை பதவி வகித்தார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளான தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை ரகுமான்கானுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது அவரது மறைவுக்கு தலைவர்களும், தொண்டர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி இரங்கல்

மறைந்த ரகுமான்கானுக்கு தனது இரங்கலை தெரிவித்து, மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரஹ்மான்கான் கொரோனா தொற்றால் மரணமடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையளிக்கிறது.

மாணவர் அரசியலில் களமாடி, ஆதிக்க இந்திக்கு எதிராக போராடியவர்.

பெரியார், அண்ணா போன்ற தலைவர்களால் பாராட்டப் பெற்று, கலைஞர் அவர்களின் நேசத்திற்குரிய உடன்பிறப்பாய் திகழ்ந்தவர். சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் வலம் வந்தவர். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர்.

எதிர்கட்சி உறுப்பினராய் பணி புரிந்த காலங்களில் சட்டசபையில் 'இடி' முழக்கம் எழுப்பியவர் என்பதும், அமைச்சராய் பணி புரிந்தப் போது அடக்கத்துடன் செயலாற்றியவர் என்பதும் அவரது சிறப்புகளாகும்.

நான் புதுக்கல்லூரியில் பயின்ற போது, 1996-ஆம் ஆண்டு விடுதி நாள் விழாவுக்கு வருகை தந்தார். அன்று அவர் ஆற்றிய உரை கம்பீரமாய் இருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் பளீர் சிரிப்பை வெளிக்காட்டுவது அவரது இயல்பாகும். அவருடன் உரையாடும் போது அரசியல் விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். உலக நிகழ்வுகள், வரலாற்று அறிவு என அவரது பேச்சில் தகவல்கள் நிறைந்திருக்கும்.

இன்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றல் மிகு கொள்கையாளரை இழந்திருக்கிறது. பலரையும் கொள்ளை கொள்ளும் பாழாய் போன கொரோனா தொற்றுக்கு அவரும் பலியாகியிருப்பது வருத்தமளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது மறு உலக வாழ்வு சிறக்கவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment