உயர் நிதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் நீதிமன்ற ஊழியர்களையும் வீடியோ வெளியிட்டு விமர்சித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனை சென்னையில் இன்று போலீசார் கைது செய்தனர்.
உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன்,உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நிதிமன்ற நீதிபதிகளையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நீதிமன்ற ஊழியர்களையும் அவதூறாக விமர்சித்து பேசிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் தேவிகா என்பவர் புகாரளித்திருந்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாகவும் புகாரளிக்கப்பட்டது. ஆனால், இந்த புகார்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் நீதிபதி கர்ணன் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கையை டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கு நேற்று (டிசம்பர் 1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி, கமிஷனர் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், காவல்துறை ஓய்வுபெற்ற நீதிபதியிடம் 2 நாட்கள் விசாரணை நடைபெற்றதாகவும் அவர் விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும் இனிமேல் அவர் இதுபோல வீடியோ வெளியிடமாட்டேன் என்று கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையின் இந்த விளக்கத்தால் அதிருப்தியடைந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் அவதூறு பரப்பியதற்கான வீடியோ ஆவணங்கள் ஆதாரமாக உள்ள நிலையில், அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பி காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக, தமிழக டிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோர் டிசம்பர் 7ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன்,உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நிதிமன்ற நீதிபதிகளையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் நீதிமன்ற ஊழியர்களையும் அவதூறாக விமர்சித்து வீடியோ வெளியிட்ட வழக்கில் போலீசார், அவரை சென்னை அருகே ஆவடியில் கைது செய்தனர்.
முன்னாள் நீதிபதி கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2017ம் ஆண்டு மேற்குவங்க காவல்துறையால் கைது செய்யப்பட்டு, 6 மாத சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகி வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil ”