முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், கருப்பசாமி பாண்டியன் மீண்டும் திமுகவில் ஐக்கியம்!

மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, அதிகாரப்பூர்வமாக திமுகவில் தன்னை மீண்டும் இணைத்து கொண்டார்

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அதேபோல, திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியனும் மீண்டும் கட்சியில் சேர்ந்தார்.


திமுகவின் தருமபுரி மாவட்ட செயலாளராகவும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறையின் அமைச்சராகவும் பதவி வகித்தவர் முல்லைவேந்தன். 2014 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அடைந்த தோல்விக்கு விளக்கம் கேட்டு, அப்போது தர்மபுரி தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த முல்லைவேந்தனுக்கு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு முல்லைவேந்தன் சரியான விளக்கம் அளிக்கவில்லை.

இதையடுத்து,  கட்சிக்கு முல்லைவேந்தன் துரோகம் செய்துவிட்டார் என்று கூறி திமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். இருப்பினும், மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதினால், மீண்டும் கட்சிக்குள் முல்லை வேந்தன் சேர்த்துக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முல்லைவேந்தன் 2015-ல் தேமுதிகவில் இணைந்தார். அங்கே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்புமும் முக்கியத்துவமும் முல்லைவேந்தனுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேமுதிகவிலிருந்தும் சற்று விலகிதான் இருந்தார்.

இந்நிலையில், முல்லைவேந்தன் திமுகவில் மீண்டும் இணைய முடிவெடுத்தார். அதன்படி, இன்று மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, அதிகாரப்பூர்வமாக திமுகவில் தன்னை மீண்டும் இணைத்து கொண்டார்.

அதேபோல, ‘கானா’ என்று அழைக்கப்படும் திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்பட்ட வீ. கருப்பசாமி பாண்டியனும் மீண்டும் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இன்று சேர்ந்தார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர், கருப்பசாமி பாண்டியன். ’கானா’ என்று அழைக்கப்பட்ட அவர், எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்டவர். 1977-ம் வருடம் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு, தனது 25 வயதிலேயே எம்.எல்.ஏ- வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி தொகுதிகளில் வெற்றிபெற்று மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

திமுகவில் இணைந்த கருப்பசாமி பாண்டியன்

திமுகவில் இணைந்த கருப்பசாமி பாண்டியன்

அதிமுகவில், ஜெயலலிதா காலத்தில் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திமுகவில் இணைந்தார். பின்னர், அங்கும் கட்சித் தலைமை அதிருப்தியை சம்பாதித்த கருப்பசாமி பாண்டியன், மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவையடுத்து, டிடிவி தினகரன் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீண்டும் அதிமுகவில் இருந்து விலகி, தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close