ஆம்னி பஸ் நிறுவனம் நடத்தும் முன்னாள் துணை வேந்தர்! லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் பரபரப்பு தகவல்கள்

“உங்கள் இருவரையும் கைது செய்ய வேண்டியது வரும்” என்று அதிகாரிகள் எச்சரித்த பின்னரே, அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்தனர்.

முன்னாள் துணை வேந்தர்கள் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் ஆம்னி பஸ் நிறுவனம் நடத்துவதற்கான ஆவணங்கள் சிக்கியதாக தெரிய வந்துள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 2013-ம் ஆண்டு மே 24-ந்தேதி முதல் 2016-ம் ஆண்டு மே 26-ந்தேதி வரை துணைவேந்தராக இருந்தவர் ராஜாராம். இவருடைய பணிக்காலத்தில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பேராசிரியர்கள் நியமனம் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது. இந்தநிலையில் பேராசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சமாக வாங்கி வசூல் வேட்டை நடத்தியதாக ஏராளமான புகார்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தது. அதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் ராஜாராம் உள்பட 6 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தநிலையில் சென்னை, தேனியில் ராஜாராமுக்கு சொந்தமான வீடு உள்பட 7 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மிகவும் ரகசியமாக இந்த சோதனை நடந்தது. சோதனையின் முடிவில் ரூ.20 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்பட மொத்தம் 65 முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடியும் முறைகேடு புகாரில் சிக்கினார். அவரது பதவி காலத்தில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான 15 சதவீத இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இந்த முறைகேட்டில் அவருடன் மேலும் 4 பேர் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் வணங்காமுடிக்கு சொந்தமான சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வீடு உள்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் அவரிடம் இருந்து ரூ.95 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் உள்பட 74 ஆவணங்கள் அதிகாரிகள் கையில் சிக்கியது.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முன்னாள் துணைவேந்தர்கள் ராஜாராம், வணங்காமுடி ஆகிய இருவர் மீதும் தொடர்ந்து லஞ்சபுகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர்கள் மீது தற்போது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது.

முதலில் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு அவர்கள் இருவரும் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தனர். “நாங்கள் எங்கு பேச வேண்டும். சொல்லுங்கள். சோதனை நடத்தாமல் திரும்பி செல்லுங்கள்” என்று மிரட்டல் விடுத்தனர். அதன் பின்னர், “உங்கள் இருவரையும் கைது செய்ய வேண்டியது வரும்” என்று அதிகாரிகள் எச்சரித்த பின்னரே, அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தந்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் லட்சக்கணக்கில் ரொக்கப்பணமும், தங்கநகைகளும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.’’

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்களில் ஆம்னி பஸ் நிறுவனம் நடத்தி வருவதும் கண்டறியப்பட்டது. இதேபோன்று மேலும் சில முன்னாள் துணைவேந்தர்கள் மீதும் லஞ்ச புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close