மத்திய அரசின் கடைந்தெடுத்த மோசடி : டாக்டர் ராமதாஸ் சாடல்

உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது விளக்கம் கேட்கும் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கடைந்தெடுத்த மோசடியை செய்துள்ளது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு புதிய மனு தாக்கல் செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கடைந்தெடுத்த மோசடி என்பதற்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கையை விட சிறந்த உதாரணம் வேறு எதுவுமில்லை.

காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை செயல்படுத்துவதற்கான அமைப்பை (ஸ்கீம்) உருவாக்க அடுத்த ஆறு வாரங்களில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் பல இடங்களில் ஸ்கீம் என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஸ்கீம் என்பதே காவிரி மேலாண்மை வாரியம் தான் என்பதை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் 216 முதல் 236 வரை நீளும் எட்டாவது அத்தியாயத்தை முழுமையாகப் படித்தால் உணர்ந்து கொள்ள முடியும். இதற்கெல்லாம் மேலாக பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கில் தமிழகத்தின் கோரிக்கையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான். அவ்வாறு இருக்கும் போது உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ஸ்கீம் என்பது மேலாண்மை வாரியம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஒருவேளை இதில் மத்திய அரசுக்கு ஏதேனும் ஐயம் இருந்தாலும் கூட தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு விளக்கம் கேட்டிருக்க முடியும். ஆனால், ஆறு வாரங்கள் அமைதியாக இருந்து விட்டு, இப்போது உச்சநீதிமன்றத்தை அணுகுவது நம்பவைத்து கழுத்தை அறுக்கும் செயலாகத்தானே இருக்க முடியும்.

உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இப்போது விளக்கம் கேட்கும் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட வேண்டியது காவிரி மேலாண்மை வாரியமா? ஸ்கீமா? என்பது தொடர்பாக மத்திய அரசுக்கு எந்தக் குழப்பமும் இல்லை; இவ்விஷயத்தில் மத்திய அரசு கடைபிடிப்பது காலம் கடத்தும் அணுகுமுறை தான் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களைக் கூற முடியும்.

காவிரிப் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகத்திற்கு சற்றும் குறையாதது மாநில அரசின் துரோகம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழகத்தை மத்திய அரசு ஏமாற்றுகிறது என்பதும், துரோகம் செய்கிறது என்பதும் நன்றாகத் தெரிந்தும் அதற்கு எதிராக வாயைத் திறப்பதற்குக்கூட தமிழக ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. மாறாக சொல்லிக் கொடுக்கப்பட்ட கிளிப்பிள்ளையைப் போல, ‘‘உச்சநீதிமன்றம் கொடுத்த அவகாசம் முடியும் வரை காத்திருப்போம்’’ என்பதையே மீண்டும், மீண்டும் கூறி வந்தனர்.

உச்சநீதிமன்றம் விதித்தக் கெடு இன்றுடன் முடிவடைந்து விட்ட நிலையில் நாளைக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து விட்டு அமைதியாக ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார்கள்.
இவர்கள் தான் தமிழகத்தின் சாபம்.

காவிரிப் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு இழைத்த துரோகத்தை தமிழக மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். எனவே, உச்சநீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்து மக்களை ஏமாற்றுவதை விடுத்து உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்று இரவுடன் முடிவடைவதற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close