பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் டெண்டர் ரத்து: உயர் நீதிமன்றம்

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்பான டெண்டரை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வருகிற 2018-ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் வேட்டி, சேலை நெய்வதற்கான நூல் கொள்முதல் செய்ய கடந்த ஜூன் 22-ம் தேதி கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இணை இயக்குனர் டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டார். அதில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 7-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அளவில் கோரப்பட்ட இந்த டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கழிவுநீரை வெளியேற்றவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து ஸ்ரீவெங்கட்ராம் நூற்பாலை சார்பிலும், முருகானந்தம் என்பவர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் நீதிபதி துரைசாமி தலைமையில் இன்று நடந்தது. அப்போது,”பிற மாநில நிறுவனங்களை டெண்டரில் பங்கேற்க விடாமல் செய்யவும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டரை ஒதுக்கும் வகையிலும் புதிய நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளதாகவும், டெண்டர் விதிகளின்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும். அதை மீறும் வகையில் இந்த டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகவும்” மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ரூ.50-க்கு மேல் மதிப்புள்ள டெண்டரை இந்திய வர்த்தக பத்திரிகை எனும் இந்தியன் டிரேட் ஜர்னலில் வெளியிட வேண்டும். ஆனால், ரூ.450 கோடி மதிப்பிலான இந்த டெண்டர் அந்த பத்திரிகையில் வெளியிடப்படவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது.

அதேசமயம், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட தாமதத்தை தவிர்க்கும் வகையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி துரைசாமி, விதிகளை பின்பற்றாமல் வெளியிடப்பட்ட இந்த டெண்டரை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்டத்தின் கீழ் புதிய டெண்டர் கோர அரசுக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close