Advertisment

ஓகி புயல் பாதிப்பை சீரமைக்கக்கோரி குமரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்

ஓகி புயல் பாதிப்பை சரி செய்யக் கோரி குமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bus debo

ஓகி புயல் பாதிப்பை சரி செய்யக் கோரி குமரி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

Advertisment

குமரி மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வீசிய ஓகி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது. மழை பெய்தபோது வீடு இடிந்தும், மரம் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததிலும் மாவட்டம் முழுவதும் 11 பேர் பலியானார்கள்.

கடற்கரை கிராமங்களை கலங்க வைத்த ஒக்கி புயல் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை. தென்னை, ரப்பர், தேக்கு, வாழை மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடு சாய்த்தது. வரப்புக்கு மேல் வளர்ந்து நின்ற நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகின.

ஓகி புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நாசமான பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகளும், பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம், சாலை மறியலும் நடந்தது.

இன்று மாவட்டம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இப்போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா கட்சி மற்றும் குமரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.

kumari bunth

இந்த நிலையில் நேற்றிரவு குமரி மேற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் அரசு பஸ்கள் மீது சிலர் கல்வீசினர். இதில் மார்த்தாண்டத்தில் 8, கருங்கலில் 4, களியக்காவிளை 2, திருவட்டார், புதுக்கடை, அருமனை, அஞ்சுகிராமம், இரணியல், சுசீந்திரம், நேசமணி நகர் ஆகிய ஊர்களில் தலா ஒரு பஸ் என மொத்தம் 21 பஸ்கள் மீது கல்வீசப்பட்டது.

பஸ்கள் உடைக்கப்பட்டதும், டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பஸ்களை அருகில் உள்ள டெப்போக்களுக்கு ஓட்டி சென்றனர். இரவு 8 மணிக்கு மேல் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

திடீரென பஸ்கள் நிறுத்தப்பட்டதால் இரவுப்பணி முடிந்து வீடு திரும்ப வந்தவர்கள் அவதிக்கு ஆளானார்கள். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இரவு 9 மணி வரை எந்த பஸ்களும் இயக்கப்படாததால் பொதுமக்களும், பயணிகளும் ஆத்திரம் அடைந்தனர்.

அவர்கள், பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசப்படுத்தினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

இன்று காலை பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. வழக்கமாக அதிகாலை 4 மணிக்கே டெப்போக்களில் இருந்து பஸ் நிலையங்களுக்கு வரும் பஸ்கள் இன்று காலை 6 மணி வரை வரவில்லை. இதனால் அதிகாலையில் ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையம் வந்தவர்கள் வெளியூர் செல்ல முடியாமல் தவித்தனர். இதுபோல ரெயில்களில் வந்து இறங்கியவர்களும் ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிப்புக்கு ஆளானார்கள்.

இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, பழனி, திருச்செந்தூர், குமுளி உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. முன்னும் பின்னும் போலீஸ் ஜீப்புக்கள் செல்ல அவை மாவட்டத்தின் எல்லை வரை போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.

வழக்கமாக குமரி மாவட்டத்தில் தினமும் 810 பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று 10 சதவீத பஸ்களே ஓடின. முழு அடைப்பு போராட்டத்திற்கு வியாபாரிகளும் ஆதரவு தெரிவித்திருந்ததால் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் இன்று மூடிக் கிடந்தன. வர்த்தக நிறுவனங்கள், மால்களும் திறக்கப்படவில்லை. நாகர்கோவிலில் அப்டா காய்கறி மார்க்கெட்டு, கோட்டார் மார்க்கெட்டும் செயல்படவில்லை.

குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை, வேர்கிளம்பி, திங்கள் நகர் பகுதிகளில் மார்க்கெட்டுகளும் செயல்படவில்லை. ஒருசில டீக்கடைகள் மட்டும் திறந்திருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் இன்று நடந்த முழு அடைப்பையொட்டி ஒருசில தனியார் பள்ளிகள் மட்டும் மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளித்தது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், பெரும்பாலான தனியார் பள்ளிகளும் இயங்கின.

பஸ்கள் ஓடாததால் மாணவ-மாணவிகள் பெரும்பாலானோர் வகுப்புக்கு வர சிரமப்பட்டனர். இப்போது அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. தேர்வுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவிகள் கண்ணீர் விட்டனர். அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின. ஆனால் ஊழியர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

குமரி மாவட்டத்தில் மீனவர் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment