முதலமைச்சரின் பேச்சு, இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை: முக ஸ்டாலின் விமர்சனம்

உச்சநீதிமன்றத் தீர்ப்பையே அரசு அதிகாரிகள் மதிக்காமல் இருப்பதற்குத்தானே கையெழுத்துப் போட்டிருக்கிறார் முதலமைச்சர் என்பதுதானே உண்மை.

“லோக் அயுக்தா” அமைப்பு உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்துப் போட்டிருந்தால் நான் உள்ளபடியே வரவேற்று அறிக்கை விட்டிருப்பேன் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசின் நிர்வாகம் அனைத்து மட்டங்களிலும் ஸ்தம்பித்து நிற்கின்ற நேரத்தில் “73 நாட்களில் 1570 கோப்புகளில் கையெழுத்துப் போட்டிருக்கிறேன். எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லாத வண்ணம் அரசு நிர்வாகம் தொய்வின்றி நடைபெற்று வருகிறது” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியிருக்கிறார்.

அதில் “விவசாயிகள் தற்கொலையே செய்து கொள்ளவில்லை” என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண வாக்குமூலத்திற்கான கோப்பும் ஒன்றாக இருக்கும் என்றே நம்புகிறேன். ஏனென்றால் முதலமைச்சருக்குத் தெரியாமல் “விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை” என்று தவறான தகவலை உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலமாக தமிழக அரசின் சார்பில் யாரும் தாக்கல் செய்திருக்க முடியாது.

கோப்புகளில் கையெழுத்துப் போடுவது முதலமைச்சரின் கடமைகளில் ஒன்று. இவ்வளவு கோப்புகளில் கையெழுத்துப் போட்டேன் என்று கூறும் முதலமைச்சர் அவர்கள் எத்தனை முக்கிய திட்டங்களுக்கு அந்த கோப்புகள் மூலம் அனுமதி கொடுத்திருக்கிறார்? 1570 கோப்புகள் மூலம் திட்டங்களுக்காக இது வரை எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது போன்ற விவரங்களையும் அந்த கூட்டத்தில் பேசியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் “கோப்புகளில் கையெழுத்திட்டேன்” என்று முதலமைச்சர் பேசியதிலிருந்தே அந்த கோப்புகள் வழக்கமான கோப்புகள்தான் என்பதும், எந்தவொரு முக்கிய திட்டங்கள் சார்ந்த கோப்புகளும் அல்ல என்பதும் பட்டவர்த்தனமாக தெரிகிறது.

முதலமைச்சர் கையெழுத்துப் போட்ட கோப்புகளில் 2017-18 நிதி நிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்களுக்காக கையழுத்துப் போட்ட கோப்புகள் எத்தனை? உதாரணத்திற்கு தமிழர் கலாச்சார பாரம்பரிய அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு கோப்பில் கையெழுத்து போடப்பட்டுள்ளதா? காவலர்களுக்கு 3000 வீடுகள் கட்டுமானப் பணிகளுக்கான கோப்பில் கையெழுத்துப் போடப்பட்டுள்ளதா?

400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களே, அந்த விவசாயிகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க  முதலமைச்சர் கையெழுத்துப் போட்டிருக்கிறாரா? பல்கலைக் கழகங்களில் 200 புதிய ஆவின் பாலகங்கள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டதே. அதற்கு கையெழுத்துப் போடப்பட்டதா? அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ரூ.250 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினீர்களே, அந்த நிதியை ஒதுக்கி, அதற்கான பணிகளையாவது துவக்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளதா?

மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ஆங்காங்கே தாய்மார்கள் போராடுகிறார்கள். அந்த கோரிக்கைகளை ஏற்று எத்தனை மதுக்கடைகளை மூடுவதற்கு முதலமைச்சர் அவர்கள் கையெழுத்துப் போட்டிருக்கிறாரா? அதற்கு பதில் நெடுஞ்சாலைகளை வகை மாற்றம் செய்து உச்சநீதிமன்றத் தீர்ப்பையே அரசு அதிகாரிகள் மதிக்காமல் இருப்பதற்குத்தானே கையெழுத்துப் போட்டிருக்கிறார் முதலமைச்சர் என்பதுதானே உண்மை.

முதலமைச்சருக்கு வரும் வழக்கமான கோப்புகளில் கையெழுத்துப் போட்டதை எல்லாம் கணக்குப் போட்டு ஏதோ புதிய நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கும், புதிய போக்குவரத்து திட்டங்களுக்கும், புதிய மெகா கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டிருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, முடங்கிக் கிடக்கும் அரசு நிர்வாக இமேஜை செயற்கையாக தூக்கி நிறுத்தும் நோக்கோடு முதலமைச்சர் பேசியிருப்பது வெறும் “விளம்பரத்திற்கு” உதவுமே தவிர ஆக்கபூர்வமான அரசு நிர்வாக செயல்பாட்டிற்கு நிச்சயம் உதவாது என்பதை முதலமைச்சர் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு மத்திய அரசை வலியுறுத்தி ஒரு தீர்வு காண முடியவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவுவதற்கு ஒரு கையெழுத்துப் போட முடியவில்லை.

ஒரு துறை மட்டுமல்ல- அரசின் அனைத்து துறைகளும் நிர்வாக ரீதியாக முடங்கிக் கிடக்கிறது. “ ஊழல் அணிகளை இணைத்துக் கொள்வதற்கும்” அதற்கு “பேட்டியளிக்கவும்” மட்டுமே தங்கள் பதவிகளை அமைச்சர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தன் தொகுதியில் அறிவித்த மருத்துவக் கல்லூரியை இதுவரை துவக்கவில்லை என்று ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜியே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். தன் கட்சியிலேயே இருக்கும் சட்டமன்ற உறுப்பினரின் மக்கள் பிரச்சினைக்காகக் கூட ஒரு கையெழுத்தைப் போட முடியாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 1570 கோப்புகளில் கையெழுத்துப் போட்டிருக்கிறேன் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

ஆகவே வழக்கமான கோப்புகளின் கையெழுத்துக்களை கணக்கு காட்டாமல் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக, வேலையில்லாத் திண்டாட்டங்களை தீர்ப்பதற்காக, தாய்மார்களின் மதுக்கடைகள் மூடும் கோரிக்கையை நிறைவேற்ற எத்தனை கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்துப் போட்டிருக்கிறார் என்ற விவரங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கு அதிமுக ஆட்சியில் தமிழக அரசு நிர்வாகம் முழுவதும் ஸ்தம்பித்து விட்டது.

எல்லா துறைகளிலும் ஊழல் படிந்து விட்டது. ஆனால் அது பற்றி விசாரிக்கும் “லோக் அயுக்தா” அமைப்பு உருவாக்க முதலமைச்சர் கையெழுத்துப் போட்டிருந்தால் நான் உள்ளபடியே வரவேற்று அறிக்கை விட்டிருப்பேன். இதையெல்லாம் விட்டு விட்டு ஏதோ இரண்டரை மாதங்களுக்கு மேலாக 1570 கோப்புகளில் கையெழுத்திட்டேன் என்று கூறி, தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும், அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை மிகப்பெரிய கம்பளம் விரித்து மறைக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

நிதி நிலை தாக்கல் செய்யப்பட்டு இரு மாதங்கள் நெருங்கப் போகும் வேளையில் கூட, துறை சார்ந்த மானியக் கோரிக்கைகளை விவாதிக்க சட்டமன்றத்தின் கூட்டத்தை கூட்டாத முதலமைச்சர் தமிழக அரசு நிர்வாகம் தொய்வின்றி நடக்கிறது என்று கூறியிருப்பதை இந்த வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவையாகவே நான் கருதுகிறேன்.

ஆகவே அதிமுக ஆட்சியில் அழுகிப் போன அரசு நிர்வாகத்தை இது போன்ற “பகட்டான” பேச்சுக்கள் மூலம் மறைக்க முயலாமல், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும், மக்கள் குறை தீர்க்கும் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதலமைச்சர் தனது கையெழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close