கஜ புயல் பேரழிவு: ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிடுகிறார் முதல்வர் பழனிசாமி

Cyclone Gaja: கஜ புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

கஜ புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்கிழமை) பார்வையிடுகிறார். முதல்வர் நேரில் வரவில்லை என மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் குறை கூறிய நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

கஜ புயல், நவம்பர் 15-ம் தேதி நள்ளிரவு தொடங்கி தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிவிட்டது. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி மாவட்டங்கள் கஜ புயலால் பெரும் சேதத்திற்கு உள்ளாகின.

கஜ புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டதாக எதிர்க்கட்சிகளே பாராட்டின. ஆனால் நிவாரணப் பணிகளில் அரசு எந்திரம் இன்னும் வேகமாக சுழல வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.

அதன் எதிரொலியாகவே அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகையில் முற்றுகையிடப்பட்டிருக்கிறார். அவருடன் வந்த கார் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்றபோது அங்கும் பொதுமக்கள் முற்றுகை நடந்தது. துணை முதல்வருடன் சென்ற கட்சி நிர்வாகிகள் மேற்படி பொதுமக்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

 Cyclone Gaja, Tamil Nadu Weather Report, Fresh Alerts, Delta Districts Protests LIVE UPDATES: கஜ பேரழிவு நிகழ்ந்த இடங்களின் அவலத் தொகுப்பு இங்கே:

08:00 PM: கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் பழனிசாமி நாளை பார்வையிடுகிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்.

04:15 PM: கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் நிவாரண பொருட்கள் எடுத்துச் சென்றால் அவற்றுக்கு, லக்கேஜ் கட்டணம் வாங்க வேண்டாம் என  நடத்துனர்களுக்கு, போக்குவரத்து துறை உத்தரவு.

03:00 PM: கஜா புயலால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சேதம் அடைந்திருப்பதால், வெளி மாநிலங்களில் இருந்து மின் கம்பங்களை வாங்க மின் வாரியம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

12:50 PM: கஜ புயலால் பாதிப்படைந்த வயல், வாழை, வீடு போன்றவற்றிற்கு எவ்வளவு இழப்பீடு கொடுக்கலாம் என முதல் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

12:15 PM: ரஜினி ரசிகர்கள் அறிவிப்பு

“2.0 பட கொண்டாட்டத்திற்காக (பேனர், வானவேடிக்கை, சென்னையில் நல உதவி) வைத்திருந்த சேமிப்பை கஜ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக அனுப்ப உள்ளோம். நம்மை நல்வழியில் நடத்தி செல்லும் தலைவர் ரஜினிக்கு என்றும் அன்புடன்!” என்று ரஜினி ரசிகர்கள் கூட்டாக ட்விட்டரில் அறிவித்துள்ளனர்.

11:15 AM:  கஜ புயல் சேதம்: முதல்வரிடம் விசாரித்த இந்திய குடியரசுத் தலைவர்
கஜ புயல் சேதம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரித்ததாகவும், அதில் பலியானவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்ததாகவும், புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு துணையாக இருக்கும் என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார்.

11:00 AM: கஜ புயல் சேதத்திற்கு திமுக ரூ 1 கோடி உதவி:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியது நம் பொறுப்பு!

அந்த அடிப்படையில் மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிட, கழகத்தின் சார்பில் 1கோடி ரூபாயும், MLA மற்றும் MPக்களின் ஒருமாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும்!’ என கூறியிருக்கிறார்.

10:45 AM: அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டுகிறார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ‘தமிழக அரசு நிவாரணப் பணிகளில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. முழுமையாக பணிகளை முடிக்க அரசுக்கு அவகாசம் தேவை. சிலர் திட்டமிட்டு அரசுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது நிவாரண பணியில் தொய்வை ஏற்படுத்தும்.

குறிப்பாக நிவாரணமே நடக்கவில்லை என்கிற ரீதியில் வைக்கப்படும் விமர்சனங்கள் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும்’ என்றார் அமைச்சர் உதயகுமார்.

10:15 AM: கஜ புயல் பலி எண்ணிக்கை 45-ஆக உயர்வு, முதல்வர் அவசர ஆலோசனை:
கஜ புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்திருக்கிறது. நிவாரணப் பணிகளை பார்வையிடச் சென்ற துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் முற்றுகையிடப்பட்ட நிகழ்வுகள் அரசுத் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்லாதது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. நிவாரணப் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று (நவம்பர் 19) முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதன் முடிவில் நிவாரணம் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

9;50 AM: கஜ புயலால் மின் துறைக்கு பாதிப்பு:

மின் துறை அமைச்சர் தங்கமணி கூறுகையில், ‘கஜ புயலால் மின் துறைக்கு மட்டுமே ரூ.1000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. நகர் புறங்களுக்கு இணையாக கிராமப்புறங்களுக்கும் மின் இணைப்பு தர விரைவான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.’ என்றார்.

9:45 AM: கஜ புயல் சேதம்: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கஜ புயல் நிவாரணப் பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது. எனினும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வந்து சீரமைப்புப் பணிகளை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. பட்டுக்கோட்டை, ஓரத்தநாடு கல்வி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் சூழலுக்கு தக்கபடி பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது.

9:37 AM: வேதாரண்யத்தில் 4 லட்சம் தென்னை மரங்கள் அவுட்:

நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, வேதாரண்யத்தில் மட்டும் கஜ புயலால் 4 லட்சம் தென்னை மரங்கள் உட்பட இருபத்தி ஏழரை லட்சம் மரங்கள் சாய்ந்துள்ளன. 5,200 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட சவுக்கு மரங்கள், 16,500 ஹெக்டேர் நெற் பயிர்கள், 400 ஏக்கர் தைல மரங்கள் நாசமாகியிருக்கின்றன.

9:30 AM: வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று (நவம்பர் 19) முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கும் என கூறினார்.

குறிப்பாக வட தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

9:20 AM: மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை புகார்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ‘கஜ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரவேண்டும். மு.க.ஸ்டாலின் இதை அரசியலாக்குவது கவலை அளிக்கிறது. அரசின் செயல்பாடுகளை கணக்கிட இது நேரம் அல்ல. சுயலாபத்திற்காக இதை யாரும் அரசியலாக்க வேண்டாம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

9:00 AM: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அதோ வருகிறார், இதோவருகிறார் என்று சொல்லப்பட்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் #CycloneDamages -யை எட்டிக்கூட பார்க்கவில்லை! தூத்துக்குடியில் 13பேர் கொல்லப்பட்ட போதும், பசுமை வழிச்சாலை போராட்டத்திலும் நேரில் செல்லாமல் ஏமாற்றிய நிலைதான் இப்போதும்!
இனி அவர், ‘எட்டிப்பார்க்காத பழனிசாமி’!’ என விமர்சனம் செய்திருக்கிறார்.

நிவாரண உதவிகளை திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் திருச்சியில் அமைந்துள்ள கட்சி அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்.

8:50 AM: நாகப்பட்டினம், பூவைத்தேடி நிவாரண முகாமுக்கு அரசு அதிகாரிகளோ, எம்.எல்.ஏ.க்களோ வந்து பார்க்கவில்லை எனவும், உணவு வழங்கப்படவில்லை எனவும் அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்கள் புகார் கூறினர்.

நகர பகுதிகளில் மட்டுமே அரசு அதிகாரிகள் கவனம் செலுத்துவதாகவும், கிராம பகுதிகளை கண்டுகொள்ளவில்லை எனவும் குற்றச்சாட்டு உள்ளது.

8:30 AM: தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் 493 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மொத்தம் 2,49,083 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அரசு புள்ளி விவரம் கூறுகிறது.

8:00 AM: கஜ புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்த பிறகே போராட்டங்கள் தூண்டப்பட்டிருக்கின்றன என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகார் கூறினார்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close