பிக்பாஸ்: 'சேரி பிஹேவியர்' விவகாரம்... மன்னிப்பு கேட்ட காயத்ரி தாயார்!

தெரியாமல் 'சேரி பிஹேவியர்' என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டார். அதற்காக, அவளை இவ்வளவு கேவலப்படுத்துவது எனக்கு வேதனை அளிக்கிறது.

அண்மையில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், காயத்ரி ரகுராம் ஓவியாவைப் பற்றி மற்ற போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஓவியாவை ‘சேரி பிஹேவியர்’ என்று விமர்சித்தார். இந்த வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், இதில் பங்கேற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்தது. மேலும், தேவைப்பட்டால் கமல் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர்.

இதுகுறித்து நேற்று இரவு பத்திரிக்கையாளர்களை சந்தித்து ஆவேசமாக பேசிய கமல்ஹாசன், “காயத்ரி இப்படி பேசியதற்கு நான் ஸ்க்ரிப்ட் எழுதி தரவில்லை. நாம் வாழும் சமுதாயத்தில் இதைவிட கேவலமாக யாரும் பேசுவதில்லையா? ‘சாதி’ என்ற வார்த்தையை உபயோகிப்பதை உங்களால் தடுக்க முடிந்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது. அதில், “சேரி மற்றும் மீனவர்கள் குறித்து தவறான கருத்துகளைக் கூறிய நடிகை காயத்ரி ரகுராம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், நிகழ்ச்சியை ஒளிபரப்பிய விஜய் டிவி மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், காயத்ரி ரகுராமின் தாயார் கிரிஜா அளித்த பேட்டியில், “என் மகள் காயத்ரி, யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பமாட்டாள். மிகவும் அன்பானவள். தெரியாமல் ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை பயன்படுத்திவிட்டார். அதற்காக, அவளை இவ்வளவு கேவலப்படுத்துவது எனக்கு வேதனை அளிக்கிறது. ஒரு தாயாக எனக்கு அது மிகவும் வலியைக் கொடுக்கிறது. என் மகள் பேசிய வார்த்தைகள் மக்களை பாதித்தருந்தால், நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

×Close
×Close