ரஜினி ஸ்டைலில் விஷால் ஸ்டேட்மென்ட் : ‘கடவுள்தான் நாட்டை காப்பாற்றணும்’ என்கிறார்

விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் கொதிப்படைந்து இருக்கிறார். ‘கடவுள்தான் நாட்டை காப்பாற்றணும்’ என ரஜினி ஸ்டைலில் ஸ்எட்மெண்ட் விட்டிருக்கிறார் அவர்.

விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் கொதிப்படைந்து இருக்கிறார். ‘கடவுள்தான் நாட்டை காப்பாற்றணும்’ என ரஜினி ஸ்டைலில் ஸ்எட்மெண்ட் விட்டிருக்கிறார் அவர்.

விஷால், பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அரசியல் களம் புக நினைத்தார். ஆனால் அரசியல் என்கிற கொடூர காட்டில் அவ்வளவு சுலபமாக ஒரு புதிய மான் புகுந்துவிட முடியாது என்பதை அரசியல்வாதிகள் அவருக்கு பாடமாக புகட்டியிருக்கிறார்கள்.

விஷால் வேட்புமனுவை முன்மொழிந்த இருவரை ‘அலேக்’காக தூக்கி, அதில் இருப்பது எங்கள் கையொப்பமே இல்லை என கூற வைத்துவிட்டார்கள். விஷாலின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வைப்பதில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கைகோர்த்து செயல்பட்டது விஷாலை இன்னும் அதிகமாக வேதனைப்பட வைத்தது. ஆனால் இப்போது அத்தனை எதிர்கட்சிகளும், ‘விஷால் விஷயத்தில் தேர்தல் அதிகாரி நியாயமாக நடக்கவில்லை’ என நீலிக் கண்ணீர் வடிப்பதையும் விஷால் கவனிக்கிறார்.

விஷால் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்ட அன்றே ஜனாதிபதி, பிரதமர் என பலருக்கும் ட்விட்டரில் புகார் செய்தார். ம்ஹூம், அதற்கு பதிலே இல்லை. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் செய்து பார்த்தார். ‘தேர்தல் அதிகாரி எடுத்த முடிவே இறுதியானது’ என அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய தேர்தல் ஆணையம் தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்களிலும் உடனடி தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை விஷாலுக்கு இல்லை. அதனால் நீதிமன்றம் செல்லும் முடிவையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து இன்று ரஜினி ஸ்டைலில் ‘ஆண்டவன்தான் இந்த நாட்டைக் காப்பாற்றணும்’ என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் விஷால்.

விஷால் தனது ட்விட்டர் பதிவில், ‘ஜனநாயகம் மீண்டும் தனது தலையை நிமிர்த்தும் என இன்னமும் காத்திருக்கிறேன். இந்த அராஜகத்தில் இருந்து மதிப்புக்குரிய எனது நாட்டை கடவுள் காப்பாற்ற வேண்டும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்புமனு வாபஸ் பெற இன்று (7-ம் தேதி) பிற்பகல் 3 மணி வரை அவகாசம் இருக்கிறது. அதன்பிறகே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். அதற்குள்ளாக இந்திய தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் தலையிட்டு இதில் ஒரு தீர்வை ஏற்படுத்துவார்கள் என்பது விஷால் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஆனால் தேர்தல் ஆணையம், ‘தீர்ப்பை’ மாற்றத் தயாராக இருப்பதாக தெரியவில்லை.

 

×Close
×Close