ஓய்வூதிய திட்டத்தில் அரசு பங்களிப்பை செலுத்துகிறது : ஐகோர்ட்டில் மனு

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு தன்னுடைய பங்களிப்பை செலுத்தி வருவதாக, தமிழக அரசின் நிதித்துறை சார்பில் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

By: Updated: September 19, 2017, 09:26:26 AM

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி, அரசு தன்னுடைய பங்களிப்பை செலுத்தி வருவதாக, தமிழக அரசின் நிதித்துறை சார்பில் செலவினப் பிரிவு செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நீட் தேர்வால் மருத்துவ கல்வி படிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க குழு அமைக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை கடுமையாக கண்டித்தார். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது தான். ஆனால் போராடும் வழிமுறை தான் தவறானது என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆசிரியர்களுக்கு 26 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு 91 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்குவதாக தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் அரசு முறையாக செயல்பட வில்லை. ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகையை செலுத்துவ தில்லை என்ற குற்றச்சாட்டு எழுத்துள்ளது. இதை வலியுறுத்திதான் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் அரசின் தவறும் உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு, தனது பங்களிப்பை செலுத்தாமல் அலட்சியமாக இருந்தால் அதையும் நீதிமன்றம் கேள்வி கேட்கும் என நீதிபதி தெரிவித்தார்.

அரசு தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் தன்னுடைய பங்களிப்பு தொகையை செலுத்துகிறதா? செலுத்தவில்லை எனில் ஏன் செலுத்துவதில்லை?

அரசு தன்னுடைய தொகையை எப்போது செலுத்தும் ? 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு தன் பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டதா?

வழங்கப்படவில்லையெனில் அதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிதித்துறை சார்பில் செலவினப் பிரிவு செயலாளர் சித்திக் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், 2004 ஆகஸ்ட் 4 நிதித்துறை (பென்சன்) உத்தரவுப்படி, ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் 10% பங்களிப்பு பென்சன் திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அரசின் பங்களிப்பும் செலுத்தப்படுகிறது.

அரசின் பங்களிப்பை வட்டியுடன் பொதுக்கணக்கில் செலுத்தப்படுகிறது. மார்ச் 2017 வரை வட்டியுடன் சேர்ந்து ரூ.18, 016 கோடி இருப்பு உள்ளது. 2016-17 கணக்கு சீட்டு அவரவர்களுக்கு கொடுக்கப்பட்டு, இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியம் தொடர்பாக 2016 பிப்ரவரி 22 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வு, மரணம், பணி நீக்கம் செய்யப்பட்டால் அந்த தொகை உடனடியாக கொடுக்கிறோம். கருவூலம், கணக்குதுறை ஆணையர் அறிக்கைப்படி, இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், கணக்கை முடிக்க கேட்டு 7, 450 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 3, 288 ஊழியர்களுக்கு ரூ.125 கோடியே, 24 லட்சத்து 24 ஆயிரத்து, 317 வழங்குவதற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. மற்றவர்களுக்கான ஆவணங்கள் கிடைத்த பிறகு ஒப்புதல் வழங்கப்படும். அரசு தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Government contributes to retired teachers petition in the high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X