Advertisment

ஆளுனர் மாளிகை ஆண்டு செலவு இத்தனை கோடியா?

ஆளுநரின் செயலகத்திற்கு மட்டுமே ஒரு ஆண்டிற்கு 2 கோடியே 84 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது என்பதை அறிந்து ஆளுநர் மாளிகைக்கு இவ்வளவு செலவாகிறதா என்று நெட்டிசன்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆளுனர் மாளிகை ஆண்டு செலவு இத்தனை கோடியா?

தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. அதற்கு பாஜகவினர் டீ செலவு மிச்சம் என்று கூறியதால் சர்ச்சையானது. இதனால், சமூக ஊடகங்களில் ஆளுநர் மாளிகைக்கு எவ்வளவு செலவாகிறது என்று யாராவது ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் பரகத் அலி ஆளுநரின் ஆண்டு செலவு கணக்கை வெளியிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஆளுநர் மாளிகைக்கு ஆண்டு செலவு இத்தனை கோடியா என்று வியப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

Advertisment

தமிழக ஆளுநர் மாளிகைக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் பரகத் அலி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநர் மாளிகையின் தேநீர் விருந்தை புறக்கணித்தன. பாஜக அதிமுக, தமாகா மட்டுமே கலந்துகொண்டன. ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது” என்றார்.

இதற்கு, “பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ் நாட்டின் உரிமை பிரச்சனைக்கான புறக்கணிப்பைத் தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது” என்று விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநாவஸ் பதிலடி கொடுத்தார்.

இதனிடையே, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநாவஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

ஆளுநர் மாளிகைக்கு எவ்வளவு செலவாகிறது,ஆளுநர் செயலகம், ஆளுநர் இல்லமான ராஜ்பவனுக்காக இரண்டு வகையான செலவுகளை அரசு செய்கிறது என்று அதன் விவரங்களையும் மூத்த பத்திரிகையாளர் பரகத் அலி என்று வெளியிட்டுள்ளார்.

கவர்னர் மாளிகை செலவுகள் பட்டியல்

அதன்படி 2021 – 2022 ஆண்டுக்கான செலவு விவரங்கள் கிடைத்தன. முதலில் கவர்னரின் செயலகம் பற்றிய செலவுகளைப் முதலில் பார்ப்போம். கவர்னரின் செயலகத்தில் கவர்னரின் அலுவலக ரீதியிலான பணிகளைச் செய்வதற்காக பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்காகவும் அலுவலகத்தின் பணிகளுக்காகவும் பணம் செலவிடப்படுகிறது. சம்பளத்திற்காக மட்டுமே 2021 – 2022-ம் ஆண்டுக்கு 1,60,79,000 ரூபாயைச் செலவிட்டிருக்கிறார்கள். என்னென்ன செலவுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன?

அடிப்படை சம்பளம் -1,44,43,000

மருத்துவ படி – 36,000

மருத்துவ செலவுகள் – 50,000

படிகள் – 88,000

வீட்டு வாடகைப் படி - 12,23,000

பயண சலுகை - 30,000

நகர ஈட்டுப்படி - 2,09,000

அகவிலைப்படி - 32,50,000

சுற்று பயணப் படிகள் – 8,00,000

தொலைப்பேசி கட்டணம் - 5,00,000

சில்லறை செலவுகள் – 5,10,000

மின் கட்டணம் – 3,91,000

தபால் செலவு – 90,000

வண்டிகளின் பராமரிப்பு - 1,53,000

பொருள்கள் வாங்கியது - 1,00,000

அரசு வழக்கறிஞர் கட்டணம் - 1,00,000

ஒப்பந்த ஊதியம் - 57,09,000

பெட்ரோல் / எரிபொருள் – 6,14,000

பராமரிப்பு – 42,000

ஸ்டேஷனரி – 1,29,000

மொத்தம் – 2,84,97,000

கவர்னரின் செயலகத்திற்கு மட்டுமே ஒரு ஆண்டிற்கு 2 கோடியே 84 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் கவர்னரின் இல்லத்திற்கு என்னென்ன செலவுகள் செய்யப்படுகின்றன? அதன் விவரம் விரைவில்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் செயலகத்திற்கு மட்டுமே ஒரு ஆண்டிற்கு 2 கோடியே 84 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது என்பதை அறிந்து ஆளுநர் மாளிகைக்கு இவ்வளவு செலவாகிறதா என்று நெட்டிசன்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment