Advertisment

Exclusive: ஆளுநருக்கு ரிப்போர்ட்: ஆதரிக்கும் பா.ஜ.க; 'சந்திக்க தயார்' என்கிறது திமுக

திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “நாங்கள் ஒன்றும் புதியதாக ஆட்சிக்கு வந்தவர்கள் இல்லை. ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம். பல கவர்னர்களைப் பார்த்திருக்கிறோம். ஆகையினால், எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறினார்.

author-image
Balaji E
New Update
Governor RN Ravi asks report at chief secretory, Governor RN Ravi trigger controversy, DMK MP RS Bharathi, BJP Karun Nagarajan comment, தலைமைச் செயலாளரிடம் ரிப்போர்ட் கேட்ட ஆளுநர் ஆர் என் ரவி, திமுக எம்பி ஆர் எஸ் பாரதி கருத்து, பாஜக, கரு நாகராஜன், tamilnadu governor rn ravi, dmk, tamil nadu politics

தமிழ்நாட்டில் அரசு நலத்திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் இறையன்புவிடம், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ரிப்போர்ட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் அரசுத் திட்டங்கள் குறித்து அறிக்கை கேட்டிருப்பது அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு செய்கிறார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆளுநரின் இந்த நடவடிக்கையை திமுக ஆதரவாளர்களும் திமுக கூட்டணி கட்சிகளும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். அதே போல, பாஜகவினர் ஆளுநரின் செயல்பாட்டை ஆதரித்தும் ஆளுநர் பதவி பொம்மை பதவி அல்ல. ஆளுநர் அவருடைய பணியை செய்து வருகிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியின்போது, தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாநில அரசின் நிர்வாக செயல்பாடுகளை ஆய்வு செய்தார். காஞ்சிபுரம், திருப்பூர், கோவை போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ஆட்டுக்கு தாடியும் மாநிலத்துக்கு ஆளுநரும் தேவையில்லை என்று அண்ணா காலத்தில் இருந்து உறுதியாக இருக்கும் திமுகவினர், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுநர் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று விமர்சனம் செய்தனர். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய சென்ற இடங்களில் எல்லாம் திமுகவினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், திமுகவுக்கும் - ஆளுநருக்கும் இடையே முரண் ஏற்பட்டது.

ஆளுநருக்கு எதிராக போராடியதில் கைதான திமுகவினரை விடுதலை செய்யக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் மாளிகையை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிருப்தி அடைந்தார். மேலும், ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. மேலும், ஆளுநரின் ஆய்வை மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் தவறான நோக்கில் எடுத்துரைப்பதாக விமர்சிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்து, கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியேற்றார். இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நடைபெற்ற முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடருக்கு பிறகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டார். மேகாலயா ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு நலத்திட்டங்கள் குறித்து தலைமை செயலாளர் இறையன்புவிடம், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ரிப்போர்ட் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த ரிப்போர்டில், நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன, அதில் எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள், பயனடைந்த மக்களின் விவரங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை செயலர்கள், உயர் அதிகாரிகளுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அனுப்பிய கடிதத்தில், “ஒவ்வொரு துறையிலும் உள்ள உயர் அதிகாரிகள், துறை தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோர் அவர்களின் துறை குறித்த ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், ஆளுநர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையும் எப்படி இயங்குகிறது, நலத்திட்டங்கள் என்ன நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறார். இதனால் உங்கள் துறை குறித்த விவரங்களை முழுமையாக வெளியிடுங்கள். உங்கள் ரிப்போர்ட் விளக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனால், திமுக ஆட்சியில் ஆளுநர் தலையீடு செய்கிறார் என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தமிழக அரசு நிர்வாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிட்டால் திமுக உரிய பதிலடி கொடுக்கும் என்று திமுக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே போல, பாஜகவினர், ஆளுநர் பதவி என்பது பொம்மை பதவி அல்ல. ஆளுநர் அவருடைய பணியை செய்வார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அரசின் நலத்திட்டங்கள் குறித்த ரிப்போர்ட் கேட்டிருப்பதை யொட்டி எழுந்துள்ள சர்ச்சை குறித்து திமுகவின் ராஜ்ய சபா எம்.பி ஆர்.எஸ்.பாரதி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “எங்களைப் பொறுத்தவரை கவர்னர் பதவியை ஏற்றுக்கொள்ளாத ஒரு கட்சி. ஆறாவது முறையாக நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறொம். கவர்னர் என்று ஒருவர் இருக்கும்போது ஒத்துழைப்புடன்தான் போய்க்கொண்டிருக்கிறோம். இந்த புதிய கவர்னர் யூனியன் பிரதேசத்தில் இருந்து ஒரு முழு அதிகாரம் மிக்க மாநிலத்திற்கு வந்திருக்கிறார். அதனால், யூனியன் பிரதேசத்துக்கும் மாநிலத்திற்கும் நிர்வாகத்தில் வித்தியாசம் இருக்கிறது. அதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்கூட அவர் கேட்டிருக்கலாம். அவர் அந்த ஆர்வத்தில் கேட்டிருந்தால் ஒன்றும் குற்றமில்லை. உள்நோக்கத்தோடு கேட்டிருந்தால் அதை சந்திப்பதற்கு திமுக தயார். அதை நாங்கள் சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்போம். அதைப் பற்றி எங்கள் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார்.” என்று கூறினார்.

மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, ஆளுநரை சந்திக்க எல்லோருக்கும் உரிமை உள்ளது. ஆனால், கவர்னருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். ஒரு நாள் பத்திரிகையில் செய்தி வரவேண்டும் என்பதற்காக சிலர் அதைப் போல செய்வார்கள். கவர்னர் என்று ஒருவர் இருந்தால் அவரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்பது சம்பரதாயமாக இருந்து வருகிறது. இதுவரையில் கவர்னர் கொடுத்த மனுக்களில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் 1972ல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து வரலாற்றில் கணக்கெடுத்துப் பாருங்கள். கவர்னரிடம் கொடுத்த மனுவுக்கு ஏதாவது பரிகாரம் ஏற்பட்டிருக்கிறதா என்றால் கிடையாது.” என்று கூறினார்.

அதே போல, திமுகவும் புகார் கொடுத்திருக்கிறதே என்ற கேள்விக்கு, “அது அந்த சம்பரதாயத்தில் ஒன்று” என்று கூறினார்.

ஆளுநர் மோதல் போக்கை கடைபிடித்தால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.பாரதி, “நாங்கள் ஒன்றும் புதியதாக ஆட்சிக்கு வந்தவர்கள் இல்லை. 6வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம். பல கவர்னர்களைப் பார்த்திருக்கிறோம். ஆகையினால், எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்” என்று கூறினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் அரசின் திட்டங்களின் நிலை குறித்து ரிப்போர்ட் கேட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து தமிழக அரசியலில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “தமிழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரிதான் கவர்னர். அவர் மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வதை நாம் அரசியலாக பார்க்க வேண்டியதில்லை. கவர்னர்தான் தமிழக அரசின் செயல் திட்டத்தையே சட்டமன்றத்தில் பேசி தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் கொள்கைகள் என்ன என்பதை சட்டமன்றத்தில் பேசுகிறார். அதனால், அவர் இப்படி ஒரு தகவல் கேட்பதை தவறாகவும் அரசியலாகவும் பார்க்க கூடாது. அவர் மத்திய அரசின் திட்டங்கள் எப்படி மக்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது என்று தெரிந்துகொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.” என்று கூறினார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கவர்னர் ஆய்வுகள் மேற்கொண்டபோது திமுக கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது ஆளுநர் அதே போக்கை கடைபிடிப்பதன் தொடர்ச்சியா இது என்ற கேள்விக்கு பதிலளித்த கரு.நாகராஜன், “ஆளுநர் என்ன செய்தாலும் திமுகவில் எதிர்ப்பு விமர்சனங்கள் வரும். சும்மா இருக்கிற சில லெட்டர் பேடு கட்சிகள் நிறைய பேர் பொழுது போகாமல் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏதோ உள்நோக்கத்தோடு, நமது முன்னேற்றத்திற்கு தடையாக பல கருத்துகளை தெரிவிக்கிறார்கள். எல்லாவற்றுக்கு பிரச்னையை கவர்னர் பக்கம் திருப்புவார்கள். நிறைய கற்பனைக் கதைகளைப் பேசுவார்கள். நமக்கு மக்களுக்கான திட்டங்கள் போய் சேர வேண்டும். கவர்னர் வெளியே சென்று மக்களை சந்திக்க கூடாது. மக்களைப் பார்க்கக் கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. அவர்கள் தார்மீக கடமையை செய்கிறார்கள். கவர்னர் என்றால் பேசாமல் பொம்மை மாதிரி இருக்கணுமா? திமுக தலைவர் ஸ்டாலின் பேசுங்கள் என்றால் பேச வேண்டும், பேசக்கூடாது என்றால் பேசாமல் இருக்க வேண்டுமா? அப்படி இருந்தால்தான் கவர்னரா? கவர்னர் என்றால் இந்த நாட்டை நிர்வகிக்கக் கூடியவர்களில் ஒருவர். மாநிலத்தை நிர்வகிக்கக் கூடிய தலைமை நிர்வாகி. அதனால், ஆளுநர் ரிப்போர்ட் கேட்டிருப்பதை அரசியலாக பார்ப்பது தவறு.” என்று கூறினார்.

இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ரிப்போர்ட் கேட்டதாக எழுந்த சர்சையைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன்.

திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான். அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல.

அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும்.” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp Dmk Rs Bharathi Governor Rn Ravi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment