சாதிய வன்கொடுமைகளில் திமுக நிலை என்ன? கவுசல்யா சங்கர் கிளப்பிய விவாதம்

கவுசல்யா சங்கருக்கு ஆதரவு கொடுத்து வரும் எவிடன்ஸ் கதிர்தான் இப்படி தூண்டுவிட்டு திமுக குறித்து பேச வைத்திருப்பதாக குமுறினர் திமுக.வினர்.

திமுக குறித்து சாதி ஒழிப்புப் போராளியான கவுசல்யா சங்கர் முன்வைத்த விமர்சனம் சமூக வலைதளங்களில் பலமான விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.

கவுசல்யா சங்கருக்கு அறிமுகம் தேவையில்லை. கடந்த 2016 மார்ச்சில் தமிழ்நாட்டையே உறைய வைத்த உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலையை யாரும் மறந்திருக்க முடியாது. சாதி ஆதிக்கவாதிகளால் தனது கண் எதிரே காதல் கணவர் சங்கர் கொலை செய்யப்பட்ட கோரத்தை கண்டு நிலைகுலைந்து நின்ற பெண் கவுசல்யா! எவிடன்ஸ் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் துணையுடன் அந்த அதிர்வில் இருந்து மீண்டு, சாதி ஒழிப்புப் போராளியாக களத்தில் நிற்கிறார்.

கவுசல்யா சங்கர் அண்மையில் சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அகில இந்திய அளவில் தலித் அமைப்புகள் பலவும் பாஜக.வுடன் ஒட்டிக்கொண்ட சூழலில், தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் நேர்த்தியாக அரசியல் பயணத்தை மேற்கொள்வதாக அந்த நிகழ்வில் கூறினார் கவுசல்யா. ‘தமிழ் தேசியத்தை தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்த்தவர் திருமாவளவன் தான்!’ என்றும் குறிப்பிட்டார்.

கவுசல்யா சங்கர் அதே நிகழ்வில் திமுக குறித்தும் பேசியவைதான் தற்போதைய சர்ச்சை… ‘இயல்பாகவே திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து எனக்குள் ஒரு கேள்வி வரும். நானும் சங்கரும் தாக்கப்பட்ட நிகழ்வு குறித்து திராவிட முன்னேற்ற கழகம் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஒரு ஆணவப் படுகொலையை ஆணவப் படுகொலை என்று சொல்லக் கூட துணியவில்லை. பட்டப்பகலில் நடைபெற்ற அப்படுகொலையைக் கண்டிக்கக் கூட இல்லை.

இப்படி தமிழ்நாட்டின் ஒரு பெரிய கட்சியால் இருக்க முடிந்திருக்கிறது என்பது எப்போதும் என்னை உறுத்திக் கொண்டே உள்ளது. வேறு சில சாதியப் படுகொலைகள், வன்முறைகளில் திமுக என்ன நிலை எடுத்தது என மூத்த தோழர்களிடம் கேட்டால் பதில் ஏமாற்றமாகவே இருந்தது.’ இப்படி மேடையில் பேசிவிட்டு, அதையே முகநூலில் பதிவிட்டார் கவுசல்யா.

கவுசல்யா சங்கரின் இந்தப் பேச்சுக்கு இணையதள உடன்பிறப்புகள் பலரும், ‘சங்கர் படுகொலையை கண்டித்து தளபதி அறிக்கை விட்டார்’ என பதில் கொடுத்தனர். ‘அறிக்கை கொடுத்தார் சரி… அதை ஆணவப் படுகொலை என்றாரா? அதில் இருந்த சாதிக் கொடுமையை கண்டித்தாரா?’ என்கிற கேள்விகளுக்கு உடன்பிறப்புகளிடம் பதில் இல்லை. அதற்கு பதிலாக ஆபாச அர்ச்சனைகளை முகநூல் முழுக்க ஏற்றினர். தவிர, கவுசல்யா சங்கருக்கு ஆதரவு கொடுத்து வரும் எவிடன்ஸ் கதிர்தான் இப்படி தூண்டுவிட்டு திமுக குறித்து பேச வைத்திருப்பதாக குமுறினர் திமுக.வினர்.

கவுசல்யாவை வசைபாடும் திமுக.வினரை ஸ்டாலினும், கனிமொழியும் கண்டிக்க வேண்டும் : எவிடென்ஸ் கதிர்

திமுக.வினரின் அர்ச்சனைகளுக்கு பதிலாக ஏப்ரல் 15-ம் தேதி மீண்டும் ஒரு பதிவை செய்திருக்கிறார் கவுசல்யா சங்கர். அதில், ‘திராவிட முன்னேற்றக் கழக சொந்தங்களுக்கு…..
திராவிட முன்னேற்ற கழகம் குறித்து பதிவிட்டிருந்ததற்காக சில தோழர்கள் அவரவர் கருத்துகளை பதிவிட்டிருந்தீர்கள். தி. மு.க தலைவரும், தொண்டர்களும், தோழர்களும் சமூகநீதி உணர்வு உள்ளவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தும் இல்லை. சங்கரின் இறப்புக்கு மனம் வருந்திய திமுகவினரின் உணர்வை இன்றும் மதிக்கிறேன்.

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சாதி ஒழிப்பாளர்களாக இருக்கலாம். இவை அனைத்தும் வேறு. சமூகநீதி சார்ந்து திமுக செய்திருக்கிற சில நல்ல நடவடிக்கைகளையும் தெரிந்தே வைத்திருக்கிறேன். அதேநேரம் எனக்கிருக்கும் மையமான கேள்விகள் :

இத்தனை காலம் தமிழகத்தில் நடந்திருக்கும் சாதிய வன்கொடுமைகளில் திமுக வின் நிலைப்பாடு என்ன? முரணின்றி தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக அது ஒலித்துள்ளதா? சாதி கேட்டும் சாதி பார்த்தும் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சி வன்கொடுமை நிகழ்வுகளில் யார் பக்கம் நிற்கும்? நின்றிருக்கிறது? காங்கிரசோடு இணைந்து இந்துத்துவத்தை ஒழிப்பது எப்படிச் சாத்தியம்? ராமராஜ்யக் கனவு காங்கிரசுக்கும் உரியதா இல்லையா?இந்தக் கேள்விகளுக்குத்தான் விடை வேண்டும்.

தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் ஈழ உணர்வாளராக ஈழத்திற்கு தீவிர ஆதரவாளராக இருக்கலாம், அதை நானும் நம்புகிறேன். ஆனால் 2009 ம் ஆண்டில் திமுக எடுத்த நிலையைத்தான் நாம் கருத்தில் கொள்ள முடியும். இதுதான் சமூகநீதியில் நான் முன்வைப்பதற்கும் அடிப்படை.

மு.க.ஸ்டாலின் அவர்கள் சங்கர் படுகொலை நிகழ்வு குறித்துத் தெரிவித்திருக்கிற கண்டனத்தை எடுத்துக்கொள்வோம். அதில் அவர் சங்கர் எதற்காக இறந்தான். நான் எதற்காகப் தாக்கப்பட்டேன் என்ற உண்மையை கூறாமல் வெறுமனே படுகொலை என்று கூறியிருக்கிறார். எங்களை தாக்குவதற்குக் காரணம் சாதியம், நடந்தது ஆணவப் படுகொலை. இதையெல்லாம் மறைத்துவிட்டு ஒரு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவிக்க முடியும் என்றால் முடியும் என்று நிரூபித்துள்ளார். அந்தக் கண்டனம் யாரைக் காப்பாற்ற? அந்தக் கண்டனம் இறுதி விளைவாக யாருக்குச் சாதகம்? நீங்களே சொல்லுங்கள்.

இதேபோல் பல சாதிய வன்கொடுமைகளில் திமுக வின் நிலைப்பாடு என்ன என்பதை பட்டியல் எடுத்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன். அதையும் எடுத்து வைத்துப் பேசுவோம். சளைக்காமல் அதேநேரம் பொறுமையாக விவாதிக்க அணியமாக இருக்கிறேன். இனி நான் பின்வாங்கப் போவதில்லை.

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு இவ்வளவு காலம் பதில் தராமல் தாழ்த்தியதற்குக் காரணம் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக ஒன்று. நீங்கள் என்னை சுயபுத்தி அற்றவளாக சித்தரிக்க முனைகிறீர்கள். இது என் சுயமரியாதையைச் சீண்டுவதாக உள்ளது.

என்னை வழிநடத்த சில மூத்த தோழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என் பேச்சை எழுத்தை சரிபார்த்து வழிநடத்துகிறார்கள். மற்றபடி நான் எழுதுவதும் பேசுவதும் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்வதும் என்னுடைய சுயமே. யாரோ ஒருவர் என்னை இயக்க நான் இயந்திரம் அல்ல. எதையும் ஆராய்ந்து தெளியும் சுயசிந்தனை கூட இல்லாததாக எனைக் கருதுவது உங்கள் பதற்றத்தைக் காட்டுகிறது. கருத்தைப் பேசுங்கள்.

இனி திமுக குறித்து நான் கொடுக்கும் பட்டியல் சார்ந்தும் பேசுங்கள். இனி அவதூறுகளை உதறிவிடுவேன். கருத்துகளுக்கு மட்டுமே பதில். விரைவில் பதிவிடுகிறேன். அன்பு மாறாது சாதி ஒழிப்பு இலக்குக்கு உண்மையாக நின்று விவாதிப்போம். நன்றி!’ இவ்வாறு கவுசல்யா சங்கர் பதிவிட்டிருக்கிறார்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close