கவுசல்யாவை வசைபாடும் திமுக.வினரை ஸ்டாலினும், கனிமொழியும் கண்டிக்க வேண்டும் : எவிடென்ஸ் கதிர்

‘கவுசல்யாவை இழிவு படுத்தும் தங்கள் கட்சியினரை அன்பு அண்ணண் ஸ்டாலின் அவர்களும் அக்கா கனிமொழி அவர்களும் கண்டிக்க மறந்தது நியாயம் அல்ல.’

கவுசல்யா சங்கரை ஆபாசமாக பேசும் திமுக.வினரை மு.க.ஸ்டாலினும், கனிமொழியும் கண்டிக்க வேண்டும் என எவிடென்ஸ் கதிர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கவுசல்யா சங்கர், சாதி ஒழிப்புக் களத்தில் போராடி வருகிறார். கடந்த 2016 மார்ச்சில் சாதியவாதிகளால் கொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின் மனைவி இவர்! சாதிய வன்கொடுமைகளை கண்டிப்பதில் திமுக சரியான அணுகுமுறைகளை கடைபிடிக்கவில்லை என கவுசல்யா விமர்சித்தார். இதற்கு சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் வசைபாடி வருகிறார்கள். எவிடென்ஸ் கதிர் தூண்டுதலில் கவுசல்யா பேசுவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

எவிடென்ஸ் கதிர், அதற்கு பதிலளிக்கும் விதமாக தெரிவித்த கருத்துகள் வருமாறு : ‘‘ஆணவ படுகொலைகளைக் கண்டித்து தி.மு.க.வின் செயல் தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் கடுமையாக குரல் கொடுக்கவில்லை என்று அன்பு மகள் கவுசல்யா விமர்சித்து இருக்கிறார். இது கவுசல்யாவின் விமர்சனம். ஆனால் பலரும் அந்த விமர்சனத்தை எதிகொள்ளமுடியாமல் இது கவுசல்யா பேசவில்லை. யாரோ அவருக்கு எழுதி கொடுக்கிறார்கள் என்றும் அதுவும் குறிப்பாக எவிடென்ஸ் கதிர்தான் எழுதி கொடுக்கிறார் என்றும் சொல்லுகிறார்கள். இதுதான் சாக்கு என்று கவுசல்யாவை கடுமையாக இழிவு படுத்தி ஆபாசமாகவும் பதிவு செய்கிறார்கள்.

கவுசல்யா அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் குறித்து அதிகம் வாசித்து கொண்டு இருப்பவர். நிறைய பயணம் செய்பவர். எளிய மக்கள் மீது பேரன்பு உள்ளவர். என் மகள் கவுசல்யா போன்ற ஒரு பெண்ணை காண்பது அரிது. இதுவரை கவுசல்யாவின் கருத்து சுதந்திரத்தில் நான் தலையிட்டது இல்லை. ஒரு நாளும் என் அரசியல் கருத்தினை திணித்தது இல்லை. கவுசல்யா என் மகள். அதனால்தான் சுய நம்பிக்கையுடன் சுதந்திர கருத்துடன் இருக்கிறார். அதே நேரத்தில் ஒரு அப்பாவாக அவர் மீது அதிக அன்பும் அக்கறையும் இருக்கிறது.

எனக்கு தெரிந்து தி.மு.க.வை கவுசல்யா விமர்சித்து இருப்பது கூட உரிமைதான். தி.மு.க.மீது நம்பிக்கை இருப்பதினால்தான் இந்த விமர்சனத்தை வைத்து இருக்கிறார். அது தவறு என்கிற பட்சத்தில் நீங்கள் உரிமையுடன் தவறினை சுட்டி காட்டுங்கள். அன்பு மகள் கவுசல்யா புரிந்து கொள்ளுவார். ஆனால் ஆபாசமாக பேசுவது இழிவு படுத்துவது கண்டிக்கத்தக்கது.

தி.மு.க.வின் பலமே ஆதிக்கத்தை உறுதியாக எதிர்ப்பதும் சகிப்பு தன்மையும்தான். அதை மறந்துவிட கூடாது. உங்கள் வீரத்தை என் மகளிடம் காட்ட வேண்டாம். மதவாதிகளிடமும் சாதிய வாதிகளிடமும் காட்டுங்கள். கவுசல்யாவை இழிவு படுத்தும் தங்கள் கட்சியினரை அன்பு அண்ணண் ஸ்டாலின் அவர்களும் அக்கா கனிமொழி அவர்களும் கண்டிக்க மறந்தது நியாயம் அல்ல. கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.

 

×Close
×Close