ஓ.பி.எஸ். தோட்டத்தில் ராட்சத கிணறு : தொடரும் மக்கள் போராட்டம்

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தோட்டத்தில் ராட்சத கிணறு வெட்டிய விவகாரத்தில் மக்கள் போராட்டம் தொடர்கிறது!

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். தோட்டத்தில் ராட்சத கிணறு வெட்டிய விவகாரத்தில் மக்கள் போராட்டம் தொடர்கிறது!
கிணறு வெட்ட பூதம் கிளம்பியதாக பழமொழி சொல்வார்கள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் இது நிஜமாகியிருக்கிறது. ஓ.பி.எஸ்.ஸின் சொந்த ஏரியாவான பெரியகுளம் அருகேயுள்ள லட்சுமிபுரம் கோம்பைக்காட்டில் அவரது மனைவி விஜயலட்சுமி பெயரில் ஒரு தோட்டம் உள்ளது. அங்கு 18 சென்ட் பரப்பில் ராட்சத கிணறு அமைத்திருக்கிறார் ஓ.பி.எஸ். அந்த கிணற்றில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள இன்னொரு தோட்டத்திற்கு குழாய் மூலமாக அவர் தண்ணீர் கொண்டு செல்வதாக தெரிகிறது. இதற்கு லட்சுமிபுரம் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஓ.பி.எஸ். அமைத்த கிணறால், அருகிலுள்ள லட்சுமிபுரம் ஊர்க்கிணறில் நீருற்று நின்றுவிட்டதாகவும், அதனால் மொத்த ஊர் மக்களும் குடிநீரின்றி தவிப்பதாகவும் கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே தொகுதி எம்.எல்.ஏ., முன்னாள் முதல்வர், ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் அந்த கிணறை ஓ.பி.எஸ். ஊருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என கேட்டு மக்கள் 20 நாட்களுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரளான பொதுமக்கள் கிணறு அமைந்துள்ள இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களில் சுமார் 350 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணவேணி, ஏ.டி.எஸ்.பி. பத்மாவதி மற்றும் வருவாய், போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் சார்பில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால், கிராம கமிட்டி தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் சென்றனர். இதில் அதிகாரிகள் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி போராட்டக் குழுவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.
தொடர்ந்து லட்சுமிபுரம் கிராம மக்கள் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இது குறித்து கிராம கமிட்டி தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், ‘லட்சுமிபுரம் ஊராட்சியின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிணற்றில் இருந்து கைலாசப்பட்டிக்கு நீர் எடுத்துச் செல்கின்றனர். மக்களின் உணர்வுகளை மதித்து ஓ.பன்னீர்செல்வம் கிணறை மக்களுக்கு ஒப்படைக்க வேண்டும்’ என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவரது வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறுகையில், ‘லட்சுமிபுரம் பகுதியில் 75 அடி ஆழத்தில் ஒரு கிணறு மட்டுமே உள்ளது. அதில் இருந்து தினமும் 2 மணி நேரம் தண்ணீர் எடுக்கப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் அதில் உள்ள தண்ணீர் முழுவதையும் மக்களுக்கு வழங்க தயாராக உள்ளோம். மக்களின் பங்களிப்போடு அரசின் திட்டங்களுக்கு எங்கள் சார்பில் கூடுதல் நிதி கொடுக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்துள்ளோம். இப்பிரச்சினையை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் தூண்டி விட்டு வருகின்றனர்’ என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close