குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு: போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம்

குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் காவல் துறை அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ம் ஆண்டு 68 பணியிடங்களுக்கு நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு விடைத்தாள்களை எடுத்து, அதில் திருத்தங்கள் செய்து மீண்டும் வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டு, தேர்வை ரத்துசெய்து, மறு தேர்வு நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த முறைகேடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி தண்டபாணி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், இந்த வழக்கில் 9 மாதங்களாகியும், காவல் துறையினர் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை… பணி நியமனங்கள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிடப்பட்டுள்ளதால் தேர்வானவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்…. அரசியல் சாசன அமைப்பான தேர்வாணையத்தை களங்கப்படுத்தும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 222 விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன…. இவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார்.

இதையடுத்து, இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கி, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

×Close
×Close