நீதிமன்ற உத்தரவு வரை காத்திருக்காமல், சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: ராமதாஸ்

அமைச்சர் ஒருவரே கையூட்டு வாங்கிக் கொண்டு, உடல் நலனை பாதிக்கும் குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளை விற்க அனுமதித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

குட்கா லஞ்ச விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரைக் காத்திருக்காமல் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய குட்கா ஊழல் குறித்து நடுவண் புலனாய்வு (சி.பி.ஐ) பிரிவு விசாரணை நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இக்கருத்து மக்கள் உணர்வுகளை பிரதிபலிப்பதாக உள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள குட்கா மற்றும் போதைப்பாக்குகள் ஊழலை மறைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு குட்கா நிறுவனம் ரூ.39.91 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருமானவரித்துறை அறிக்கையை மூடி மறைக்க தமிழக அரசு அடுத்தடுத்து தகிடுதத்தங்களைச் செய்து வருகிறது.

இவை குறித்து தமிழக காவல்துறையின் ஊழல் தடுப்பு- கண்காணிப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று அண்மையில் மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழக்கை சாதாரண அதிகாரிகள் விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால் டி.ஜி.பி. நிலையில் உள்ள அதிகாரியைக் கொண்டு இப்புகாரை விசாரிக்க வேண்டும் அல்லது இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.

அந்தக் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டியது அவசியம் என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. குட்கா ஊழல் தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு விசாரணை நடத்தப்படுவதாக தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. இது இறுதித் தீர்ப்பு இல்லை என்றாலும் கூட, இதுவே இறுதித் தீர்ப்பாக அமைவதற்கு மிக அதிக வாய்ப்புகள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

மக்கள் நலனைப் பாதுகாக்க வேண்டிய அமைச்சர் ஒருவரே கையூட்டு வாங்கிக் கொண்டு, உடல் நலனை பாதிக்கும் குட்கா உள்ளிட்ட போதைப் பாக்குகளை விற்க அனுமதித்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டிருக்கிறது.

இவ்விஷயத்தில் பல நீதிமன்றங்களின் கண்டனத்திற்கு தமிழக அரசு ஆளாகியுள்ளது. இவ்வழக்கிலும் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும், சி.பி.ஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆளாக வாய்ப்புள்ளது. எனவே, உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரைக் காத்திருக்காமல் சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

×Close
×Close