விஸ்வரூபம் எடுக்கும் குட்கா விவகாரம்: தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர வேட்டை

குட்கா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்ததையடுத்து, தமிழகம் முழுவதும் தீவிர வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் குட்கா விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வெளிநடப்பு செய்த நிலையில், குட்கா விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் அண்மையில் செய்தி வெளி வந்தது. அதில், தங்கு தடையின்றி குட்கா விற்பனைக்கு, சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச விவரங்கள் குறித்து வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும், அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த செய்தியை சுட்டிக் காட்டிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், அந்தப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி, கமிஷனர் உள்ளிட்டோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தை நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எழுப்பிய திமுக-வினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அத்துடன் தமிழகத்தில் தங்கு தடையின்றி குட்கா விற்பனை நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, குட்கா விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொருட்டு சென்னையில் 2 கூடுதல் ஆணையர்கள் தலைமையில் காவல் நிலையத்துக்கு ஒரு தனிப்படை வீதம் 135-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இது தொடர்பாக, கடந்த 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நான்கு நாட்களில் மட்டும் 750 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர் எனவும், இந்த நடவடிக்கை தொடரும் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டதிற்கு பின்னர், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்வோரைக் கைது செய்யவும், பொருட்களைப் பறிமுதல் செய்யவும் அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை கடத்தினாலோ, தொடர்ந்து விற்பனை செய்து வந்தாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்து வருகிறார். மேலும், இந்த பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், விற்பனை செய்யப்படும் கடைகள் குறித்து தகவல் தெரிந்தால் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொடர்பு கொண்டோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையங்களிலோ தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் தலைமையில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

×Close
×Close