விஜய்யை எச்சரிக்கும் அமைச்சர்... மீண்டும் களத்தில் இறங்கிய ஹெச்.ராஜா! சூடுபிடிக்கும் சர்கார்

இப்போது, மீண்டும் அவர் சர்கார் படம் குறித்து இன்று ட்வீட்டியதன் மூலம், விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். எப்படியும் படம் ஹிட் தான்.

விஜய்யின் ‘சர்கார்’ படத்திற்கு திரைக்கதை சரியில்லை என்று சில நெகட்டிவான விமர்சனங்கள் வந்துக் கொண்டிருக்கும் வேளையில் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதற்கு முன்னதாக, விஜய் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டமாக கூறிய கருத்துகளை பார்ப்போம்.

சர்கார் படம் குறித்தும், விஜய் குறித்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “சர்கார் திரைப்படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் சர்ச்சைக்குரிய வகையில் சில காட்சிகள் இருக்கின்றன. அது குறித்து அரசுக்கு தகவல் வந்துள்ளது. அந்தக் காட்சிகளை படக்குழுவினர், அவர்களாகவே நீக்கி விடுவது நல்லது.

அப்படி சர்ச்சை காட்சிகள் நீக்கம் செய்யப்படவில்லை என்றால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசித்து நடவடிக்கை எடுப்போம். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து முதல்வரிடம் விவாதிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ‘உசுப்பேத்றவன் கிட்ட உம்முனும், கடுப்பேத்றவன்கிட்ட கம்முனும் இருந்தா நம்ம லைப் ஜம்முனு இருக்கும்’ என்பது தான் எனது ஃபார்முலா என்று விஜய் கூறியிருப்பதால், அமைச்சரின் இந்த எச்சரிக்கையை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார் எனலாம். அதேசமயம், இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலையிட்டால், விவகாரம் நிச்சயம் பெரிதாகும்.

நிலைமை எப்படி இருக்க படம் சுமார் என்ற விமர்சனம், அமைச்சரின் எச்சரிக்கை போன்றவற்றால், லைட்டாக ஃபீல் பண்ணிக் கொண்டிருந்த விஜய்யின் ரசிகர்களுக்கு மாபெரும் பூஸ்ட்டாக வந்திருகிறது ‘மெர்சல்’ புகழ் ஹெச்.ராஜா ட்வீட்.

‘படித்ததில் பிடித்தது’ என்ற தலைப்பில் ட்வீட் செய்திருக்கும் ஹெச்.ராஜா, “கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா, நல்ல கதையா திருடுங்கடா” என்று பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான விஜய்யின் மெர்சல் படம் குறித்தும், விஜய்யை ‘ஜோசப் விஜய்’ என்றும் குறிப்பிட்டு ஹெச்.ராஜா விமர்சிக்க, சுமாராக போன அந்தப் படம், சூப்பர் டூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளிக் குவித்தது. இந்த படத்திற்கு இவ்வளவு ஒர்த்தா? என்று டிரேடிங் வட்டாரத்தில் இருப்பவர்களே ஆச்சர்யப்படும் அளவிற்கு வசூலை அள்ளிக் குவிக்க காரணமாயிருந்தார் ஹெச்.ராஜா.

முன்னதாக, படம் ரிலீஸுக்கு சில நாட்கள் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், “தேவையில்லாமல் சர்கார் பற்றி பேசி, அதை வெற்றிப்படமாக்க நாங்கள் விரும்பவில்லை” என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது ஹெச்.ராஜா ட்வீட்டியதன் மூலம், விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். எப்படியும் படம் ஹிட் தான் என்று முணுமுணுக்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close