வீடியோ : போட்டோகிராபரிடம் எகிறிய ஹெச்.ராஜாவின் தம்பி! கோர்ட் வளாகத்தில் பரபரப்பு

ஹெச்.ராஜாவின் சகோதரர் சுந்தர், திருச்சியில் நீதிமன்ற வளாகத்தில் தன்னை போட்டோ எடுத்த போட்டோகிராபரிடம் எகிறிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹெச்.ராஜாவின் சகோதரர் சுந்தர், திருச்சியில் நீதிமன்ற வளாகத்தில் தன்னை போட்டோ எடுத்த போட்டோகிராபரிடம் எகிறிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹெச்.ராஜா மட்டுமல்ல, அவரது சகோதரராலும் பரபரப்பு கிளப்ப முடியும் என்பதற்கு சாட்சியாக அமைந்தது இன்று (பிப்ரவரி 9) மாலையில் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்வு!
பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் சகோதரர் சுந்தர்! இவர் உட்பட 21 அதிகாரிகள் இன்று மாலை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை நகலைப் பெற்றுக்கொண்டனர்.

ஹெச்.ராஜாவின் சகோதரரை உள்ளடக்கிய அந்த வழக்கு இதுதான்… கடந்த 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியின்போது, போக்குவரத்துக் கழகங்களின் வருவாய் 32.84 லட்சம் ரூபாயை, அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு, கும்பகோணம் கோட்ட மேலான் இயக்குநர் ராஜி, ராஜேந்திரன், வெங்கடாசலம், உள்ளிட்ட 19 பேர் முறைகேடு செய்ததாகத் தஞ்சாவூரைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளரும் அப்போதைய அண்ணா தொழிற்சங்க மாவட்டப் பொருளாளருமான கோவிந்தராஜன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக்கூறி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கோவிந்தராஜன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து, குற்றம் சாட்டப்பட்ட கே.என்.நேரு உள்ளிட்ட 19 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். வழக்கு விசாரணையின்போதே ராஜி என்பவர் இறந்துவிட்டார்.

அப்போது அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தில் தலைமைக் கணக்கு அதிகாரியாக இருந்துவந்த சுந்தர், சிவக்குமார், அண்ணாதுரை உள்ளிட்ட மேலும் 4 பேருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சுந்தர், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் உடன்பிறந்த இளைய சகோதரர் ஆவார்.

சுந்தர், ஓய்வுபெறும் நாளான கடந்த மார்ச் 31-ம் தேதிக்கு முதல்நாள் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஹெச்.ராஜாவின் தம்பி சுந்தர் உள்ளிட்ட 21 பேர் இன்று திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன்னிலையில் ஆஜரானார்கள். டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார், குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொண்டவர்கள், மாற்றுவழியில் தனித்தனியே அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அப்போது அவர்களைப் புகைப்படக்காரர்கள் போட்டோ எடுக்க முயன்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சுந்தர், குற்றம்சாட்டப்பட்டவர்களைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த வார இதழ் புகைப்படக் கலைஞர் என்.ஜி.மணிகண்டனை நோக்கி எகிறினார். அவரை பிடித்துத் தள்ளினார். இதையடுத்து புகைப்படக்காரர், உங்கள் பெயர் என்ன எனக் கேட்டபோது தன்னுடைய பெயர், எடப்பாடி என்றபடி கிளம்பினார். இந்த நிகழ்வு, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close