Advertisment

ஆசிரியர்களுக்கே விழிப்புணர்வு இல்லையே! மாணவியை சாகடித்த துயர சம்பவம்

அதிக உதிரப்போக்கு காரணமாக தன் சீருடை மற்றும் மேசையில் ரத்தக்கரை படிந்ததற்காக, தன்னை ஆசிரியர் திட்டியதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
period, mensus, menstrual problems, heavy bleeding

பாளையங்கோட்டையில் மாதவிடாய் நாளில் அதிக உதிரப்போக்கு காரணமாக தன் சீருடை மற்றும் மேசையில் ரத்தக்கரை படிந்ததற்காக, தன்னை ஆசிரியர் திட்டியதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செல்வா நகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்துவந்த 12 வயது சிறுமி, ஓரிரு நாட்களுக்கு முன்பு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, அச்சிறுமி எழுதியதாக கூறப்படும் தற்கொலை கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.

publive-image

அதில், தனக்கு மாதவிடாயின்போது அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு, சீருடையிலும், வகுப்பு மேசையிலும் ரத்தக்கறை படிந்ததால், ஆசிரியர் தன்னை திட்டியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், சக மாணவர்கள் முன்னிலையில், “நாப்கினை சரிவர வைக்க தெரியாதா?”, எனக்கேட்டு ஆசிரியர் கடுமையான வார்த்தைகளால் சிறுமியை புண்படுத்தியதாக, இச்சம்பவம் குறித்த இந்தியா டுடே-ன் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, மாணவியை அந்த ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியரும் மாணவியிடம் அந்நிகழ்வுக்காக கடிந்துகொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தான் செய்யாத ஒரு தவறுக்காகவும், உடலளவில் ஏற்பட்ட மாற்றத்திற்காகவும், மற்றவர்கள் முன்னிலையில் தான் அவமானப்படுத்தப்பட்டதை தாங்கிக் கொள்ள முடியாத அச்சிறுமி, உறவினர் வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மாதவிடாய் குறித்த அடிப்படயான சில புரிதல்கள் ஒரு பள்ளி ஆசிரியருக்கே தெரியவில்லையா என்ற கேள்வியை நம் முன்னால் இச்சம்பவம் வைக்கிறது.

அதிக உதிரப்போக்குக்கான காரணங்கள் என்னென்ன?

மாதவிடாய் காலத்தில் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான உதிரப்போக்கு இருக்காது. சில பெண்களுக்கு அதிகளவில் ரத்தப்போக்கு இருக்கும். ஹார்மோன்கள் குறைபாடு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள், கர்ப்பப்பை செயல்பாட்டில் குறைபாடு, கர்ப்பமாவதை தடுக்கும் ஐ.யு.டி. காப்பர் சாதனத்தை பொருத்துதல், கர்ப்பப்பை நார்த்திசு கட்டிகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்.

சந்திக்கும் பிரச்சனைகள்:

மாதவிடாய் காலத்தில் பொதுவாக எல்லா பெண்களுமே பல அசௌகரியங்களை சந்திப்பர்.

தொலைக்காட்சியில் நாப்கின் விளம்பரங்களில் வரும் பெண்கள்போல் மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஆடி, ஓடி மகிழ முடியாது. சாதாரணமாகவே இப்படி என்றால், அதிக உதிரப்போக்கை சந்திக்கும் பெண்களை பற்றி கேட்கவே வேண்டாம்.

- ஒவ்வொரு மணிநேரத்திற்கு அவர்கள் தங்களுடைய நாப்கின்கள் அல்லது டாம்பூன்களை மாற்ற வேண்டும்.

- இரவு நேரத்திலும் தங்களுடைய நாப்கின்களை மாற்ற வேண்டும்.

- அதிக உதிரப்போக்கை சமாளிக்க ஒரே சமயத்தில் இரண்டு நாப்கின்களை உபயோகிக்க வேண்டி இருக்கும்.

- ஏழு நாட்களையும் தாண்டி மாதவிடாய் நீடிக்கும்.

- மெனோபாஸ் காலத்திற்கு பிறகும் உதிரப்போக்கு ஏற்பட வாய்ப்புண்டு.

- பிறப்புறுப்பில் கட்டிகள், தடிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்

உள்ளிட்ட பல பிரச்சனைகளை அதிக உதிரப்போக்கிற்கு ஆளாகும் பெண்கள் சந்திக்கின்றனர்.

இப்படி பல பிரச்சனைகள் இருக்கும்போது, அச்சிறுமியை அருகில் அழைத்து மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதாரம் குறித்து கற்றுக்கொடுப்பதுதான் அந்த ஆசிரியர் செய்யக்கூடிய வேலையாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், மாதவிடாய் சுகாதாரத்தை அவளது குடும்பம், பள்ளி, கல்லூரி, பணியிடம் என எல்லா இடங்களிலும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் அடிப்படை உரிமை.

மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க வேண்டுமா என்பதை விட, மாதவிடாய் குறித்த அடிப்படை புரிதல்களையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, அதுகுறித்த மூட நம்பிக்கைகள், பெண்களை அந்நேரத்தில் தீண்டாமை கொடுமைகளிலிருந்து விடுவிப்பதே முதல் முக்கிய கடமையாகும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment