தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில், கடுமையான வெயிலும் காய்ந்து வருகிறது. இந்த நிலையில், மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலான மழை பொழிவும் அதே நேரத்தில் கடுமையான வெயிலும் கண்டு வருகிறது. விவசாயிகள் பலரும் குறுவை சாகுபடி செய்வதற்காக மழை எதிர்ப்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் மதுரை, திருச்சி, சிவகங்கை, விருதுநகர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வானிலை அறிவிப்பில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு மராட்டிய கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதி கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"