சென்னையில் இன்று மாலை அல்லது இரவு கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை அல்லது இரவு கன மழை பெய்யும் எனத் தகவல்.

தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகளில் அடுத்த 4 தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மேற்கு மாநிலங்களில் இன்று முதல் பருவ மழை தீவிரமாகும் என்ற காரணத்தால், கனமழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், காற்று வேகமாக வீசும் என்பதாலும் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதாவது 45 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பிறகு மாலை அல்லது இரவு நேரத்தில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்யுமென்றும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது. அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

×Close
×Close