வணக்கம் சென்னை - சென்னை தின சிறப்புப் பதிவு

இது நம்ம சென்னை என்று கெத்தாக காலர் தூக்கிவிடும் அனைவருக்கும் சென்னை தின வாழ்த்துகள் !

சென்னை தினம் : தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஆனால் சென்னை தான் உள் மாவட்ட மக்களையும் வாழ வைக்கும் தாய் வீடு என்பதை மறுப்பதிற்கும் இல்லை. நடந்து கொண்டிருக்கும் சாலையில் சட்டென திரும்பி இவர்களில் யார் சென்னையைச் சேர்ந்த நபர்கள் யாரென்று சொல்லிவிடவே முடியாது. வீட்டிற்கொரு பட்டதாரியை உருவாக்கி அவனை மெட்ராஸ் என்று செல்லமாய் அழைக்கப்படும் சென்னைக்கு அனுப்பவதென்பது பல பெற்றோர்களின் கனவாய் இருந்தது.

சென்னை தினம் சிறப்புக் காணொளியினைக் காண

இதே சென்னை தான் வேலைக்காக, கனவிற்காக, படிப்பிற்காக வீட்டில் இருந்து வெளியேறும் ஒவ்வொரு தமிழக இளைஞர்களுக்கும் முகவரியாய் இன்றும் இருக்கிறது. சென்னையை நம்பினார் கைவிடப்படார் என்பது தான் உண்மை. இன்று சென்னை தினம். இந்த தினத்தில் சென்னையின் வரலாற்றினை அறிந்து கொள்வது மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகவே கருதலாம். ஏன் எனில் சென்னை தான் முதன்முதலில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட நகரம்.

சென்னை தினம் எதனை நினைவுப்படுத்துகிறது?

வானுயர்ந்த கட்டிடங்கள், அடிக்கடி எட்டிப் பார்க்கும் சிறு மேகக்கூட்டங்கள், வந்ததும் சென்றுவிடாமல் அனைவரையும் தத்தளிக்க வைக்கும் புயல்கள், மெரினா என்று நீண்டு கிடக்கும் மிகப் பெரிய கடற்கரை, மெட்ரோ ரயில் சேவை, திரும்பும் திசைகள் எல்லாம் அசர (குழம்ப) வைக்கும் மேம்பாலங்கள், வேகம், ஓட்டம், ஓய்வற்ற ஓட்டம் – இது தான் இன்றைய சென்னை. புதிதாக இங்கு வருபவர்களுக்கு இது புரிபட கொஞ்சம் நாட்கள் ஆகும் என்பது அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டது.

1639ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டை கம்பீரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இடத்தினை கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரு கோஹன் சென்னப்பநாயக்கர் மகன்களிடம் இருந்து பெற்ற நாளையே நாம் சென்னை தினமாக கொண்டாடுகிறோம்.

சென்னைக்குப் பல முகங்கள்

புனித ஜார்ஜ் கோட்டை இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டையாகும். இந்த கோட்டையின் உருவாக்கத்தில் இருந்து தான் சென்னையின் உள்கட்டுமானம் தொடங்குகிறது. கோட்டை கட்டுவதற்காக பலர் இப்பகுதிக்கு வந்தனர். அவர்களின் உறைவிடத்திற்காக குடியிருப்புப் பகுதிகள் அதன் அருகில் உருவாக்கப்பட்டன. சில கிராமங்கள் நகரங்கள் ஆக்கப்பட்டன.

நகரங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து சென்னையென பிரம்மாண்டமாக இன்று நம் கண் முன் பரந்து விரிந்து கிடக்கிறது. வட சென்னை பகுதிகளை மதராசப்பட்டினம் என்றும் தென் சென்னை பகுதிகளை சென்னப்பட்டனம் என்று அழைப்பது வழக்கத்தில் இருந்ததாம்.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பின்னால் சென்னை முகலாயர்களால், மராட்டியர்களால், பிரெஞ்சுக்காரர்களால் ஆளப்பட்டு பின்பு மீண்டும் ஆங்கிலேயர்களின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டது நம்ம சென்னை.

சென்னை என்பது மிக முக்கியமான வர்த்தக தளமாக மாற்றியமைத்த பெருமை ஆங்கிலேயர்களையும் அவர்களுக்கு உதவி புரிந்த கூவம் மற்றும் அடையாறு நீர் வழிப்பாதையினையும் தான் கூற வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்குகள் அனைத்தும் பெரிய கப்பல்களில் இருந்து இறக்கப்பட்டு சிறிய படகுகள் மூலமாக சென்னையின் உள்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் அது தேவையான பகுதிகளில் தரைவழியாக அனுப்பப்படுவது வழக்கம்.

சுதந்திரத்திற்கு பின்பு மெட்ராஸ் ராஜ்தானி மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது 1969ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம் தமிழ் நாடு என்று அழைக்கப்பட்டது. 1996ல் தமிழ்நாட்டின் தலைநகராக திகழ்ந்த மெட்ராஸ் சென்னை என்று ஆனது.

இன்றைய சென்னையை உலகத்தினர் எப்படி அறிந்துள்ளார்கள்?

இந்தியாவின் கலாச்சார தலைநகரம் இந்த சென்னை. திரும்பும் திசையெங்கும் ஒலிக்கும் மார்கழி மகா உற்சவ சப்தங்களில் மயங்கிய யுனெஸ்கோ சென்னைக்கு ஆக்கப்பூர்வமான நகரங்களின் பட்டியலில் யுனெஸ்கோவினை இணைத்துள்ளது.

இங்கு தரப்படும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவத்திற்காக, சென்னை வரும் வெளிநாட்டு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.

உணவுக் கலாச்சாரத்திற்கும் பெயர் போன சென்னை, உலகின் அதிக உணவுப் பிரியர்களை கவர்ந்த நகரமாக சென்னையை அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக விளங்கும் சென்னை தான் சிறந்த வாழ்வாதாரத்தினை மக்களுக்கு அமைத்துத் தரும் இந்தியாவின் தலைசிறந்த நகரமாகவும் திகழ்கிறது.

இந்தியாவின் சாலைகளில் ஓடும் நான்கு சக்கர வாகனங்களில் 30% வாகனங்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உருவாக்கப்படுபவை தான்.  35% வாகன உதிரி பாகங்களை தயாரிக்கும் பகுதியாகவும் சென்னை விளங்குவதால் தான் சென்னை, ஆசியாவின் டெட்ராய்ட் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

சென்னை தினம் – சென்னை வாரம் – கொண்டாட்டம்

சென்னை தினக் கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்கள் நகர வரலாற்று அறிஞர் எஸ். முத்தையா, பத்திரிகையாளர்கள் சசி நாயர் மற்றும் வின்சென்ட் டி சோஸா ஆகியோர் தான்.

அவர்களுக்குப் பின்னர் ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சுசிலா ரவீந்திரநாத், ஆர். ரேவதி, வி. ஸ்ரீராம் ஆகியோர் சென்னை தினக் கொண்டாட்டத்தினை சென்னை வாரக் கொண்டாட்டமாக மாற்றினார்கள். இவ்வருடம் ஆகஸ்ட் 19 தொடங்கி ஆகஸ்ட் 26 வரை சென்னை வாரம் கொண்டாடப்படுகிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close