மெரினாவில் ஒருநாள் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்

சென்னை மெரினா கடற்கரையில் ஒருநாள் போராட்டம் நடத்த முன்னதாக அனுமதி வழங்கியதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் சென்னை மெரினா கடற்கரையில் ஒருநாள் மட்டும் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தலாம் என அனுமதி அளித்தது. மேலும் அந்தத் தீர்ப்பில் எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமையை வெளிப்படுத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது
இதையடுத்து, மெரினாவில் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக உள்துறை செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் சார்பில் மேல் முறையீடு செய்தனர். மெரினாவில் போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்றும், அய்யாகண்ணுவிற்கு அனுமதி அளித்தால் மற்ற சங்கங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன் மனுத்தாக்கல் செய்த இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அய்யாக்கண்ணுவிற்கு வழங்கிய ஒரு நாள் போராட்ட அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் மெரினாவில் போராட தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

முதலில் அனுமதி வழங்கி பிறகு அதே அனுமதியை மறுத்து தடை விதித்த தீர்ப்பை பல்வேறு கட்சியினர் எதிர்த்து வருகின்றனர்.

×Close
×Close