தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த விதமான விதிகளும் சட்டப்பூர்வமான உத்தரவும் இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்த் தாய் வாழ்த்து வாழ்த்து இறை வணக்கப் பாடல். அது தேசிய கீதம் அல்ல. தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த விதிகளும், எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னையில் மியூசிக் அகாடமியில் ஜனவரி 24, 2018-ல் நடைபெற்ற தமிழ் – சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாக கூறப்பட்டது.
தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அவமதித்ததாகக் கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ராமேஸ்வரம் காஞ்சி மடத்துக்குள் நுழைந்து கோஷம் எழுப்பியதாக நாம் தமிழ் கட்சியை சேர்ந்த கண். இளங்கோ உட்பட பலர் மீது ராமேஸ்வரம் கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனால், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கண். இளங்கோ உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்த் தாய் வாழ்த்து இறை வணக்க பாடல். தேசிய கீதம் அல்ல. தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த விதிகளும், எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை. அதே நேரத்தில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மிக உயர்ந்த மரியாதை வழங்கப்பட வேண்டும். உண்மையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது கூட்டத்தினர் எழுந்து நிற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதே நேரத்தில், இவ்வாறு எழுந்து நின்றுதான் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கிற, கொண்டாடுகிற நாம் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு இப்படித்தான் மரியாதை செலுத்த வேண்டும் என்பது சரியல்ல.
ஆன்மிகவாதிகள் பிராத்தனையின்போது தியான நிலையில் இருப்பார்கள். தமிழ்த் தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடல் என்பதால், அந்தப்பாடல் இசைக்கப்படும்போது ஆன்மிகவாதிகள் தியான நிலையில் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தாய் மொழி தமிழுக்கு அவர் அவரது வழியில் உரிய மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த வழக்கில், மனுதாரர் மற்றும் புகார்தாரர் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கை தொடர்ந்து நடத்துவதால் பலனில்லை. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொருந்தும்” என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”