மீனாட்சி அம்மன் கோவில் கடைகளை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மீனாட்சி அம்மன் கோவில் கடைகளை நாளை மதியம் 12 மணிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

மீனாட்சி அம்மன் கோவில் கடைகளை நாளை மதியம் 12 மணிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு.

கடந்த 2 ஆம் தேதி இரவு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் பகுதிக்கு அருகில் இருந்த  கடைகளில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 36 கடைகள் எரிந்து சாம்பலாகின. வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. அதேபோல், பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரையும் இடிந்து விழுந்தது.

இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் இணை ஆணையர், கோவில் வளாகத்தில் உள்ள பல கடைகளை காலி செய்ய நேற்று நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதை எதிர்த்து, மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் நலச் சங்க தலைவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து, இன்று இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை முடிவில், நாளை மதியம் 12 மணிக்குள் நோட்டீஸ் அனுப்பப்பட்ட கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பொருட்களை தற்காலிகமாக கோவில் நிர்வாகம் சொல்லும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். மூன்று வாரத்திற்குள் அந்த பொருட்களையும் அங்கிருந்து எடுத்துச் சென்று விட வேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close