ஜெயலலிதாவின் சொத்து, கடன் எவ்வளவு? - வருமான வரித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

அப்படியானால் ஜெயலிதாவுக்கு எத்தனை இடங்களில் சொத்துக்கள் உள்ளன? அதன் மதிப்பு என்ன? எவ்வளவு கடன் உள்ளது?

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களை தெரிவிக்குமாறு வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் தமிழக அரசும் எதிர் மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகியான புகழேந்தி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மறைந்த தமிழக முதல்மைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் என்று சுமார் 913 கோடிக்கு மேல் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சொத்துக்கள் யாருக்கு என்று ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அந்த சொத்துகளை யார் நிர்வகிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. அதனால், இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க ஒரு நிர்வாகியை உயர்நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதாக தெரிவித்தருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதா கொடநாடு எஸ்டேடை அடமானமாக வைத்து கடன் வாங்கியதில் ஒன்னறை கோடி ரூபாய் செலுத்தக் கோரி இந்தியன் வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘அப்படியானால் ஜெயலிதாவுக்கு எத்தனை இடங்களில் சொத்துக்கள் உள்ளன? அதன் மதிப்பு என்ன? எவ்வளவு கடன் உள்ளது?’ என கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து வருமான வரித்துறை தான் சொல்ல முடியும் என்று தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் வருமானவரித்துறையை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் சொத்துகள் மற்றும் கடன் தொடர்பான விபரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கில் அமலாக்கத்துறையை பிரதிவாதியாக சேர்த்து பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் போயஸ் வீடு “வேதா இல்லத்தை” தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு இன்று கருத்து கேட்பு கூட்டம் நடந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் அதன் மதிப்பு என்னவாக இருக்கும்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த தீபக் தரப்பு வழக்கறிஞர், சந்தை மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் வரைக்கும் இருக்கும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் தமிழ் வளர்ச்சித் துறையையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close