ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் ‘தலை’ தப்பியது : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தனர். அவர்களை கட்சித் தாவல் தடை சட்டப்படி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிய வழக்கு இது.

ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் பதவியை மட்டுமல்ல தமிழக அரசியல் திசையையும் தீர்மானிக்கும் வழக்கு இது. இதற்கிடையே  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தமிழக ஆளுநரிடம், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அரசு கொறடா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர். இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வாறு நடந்து வந்த நிகழ்வுகளின்போது தி.மு.க. கொறடா சக்கரபாணி, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஓபிஎஸ் உள்பட அவரது அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பட்டியல் இட்டது. இதன் live updates

மாலை 3.35 : சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேரின் பதவிக்கு இருந்த ஆபத்து நீங்கியது.

மாலை 3.30 : சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது : 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பிற்பகல் 3.25 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்ற முடியாது என திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

பிற்பகல் 3.20 : தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் நீதிமன்ற அறைக்கு வந்தனர். சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

பிற்பகல் 3.00 : தகுதி நீக்கம் வழக்கில் சிக்கிய ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் இது : ஓ. பன்னீர் செல்வம், ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே. பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர். நடராஜ் ஆகியோர் அரசு கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

பிற்பகல் 2.50 : ஜெயலலிதா படத்தை அகற்றுவது தொடர்பான வழக்கு, ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஆகிய 2 வழக்குகளிலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கவிருக்கிறது.

பிற்பகல் 2.45 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரிய வழக்கில் முதலில் தீர்ப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்பகல் 2.15 : முன்னதாக இன்று காலை சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவர், ‘டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் முதலில் தீர்ப்பு கூற வேண்டும். அதுவரை இந்தத் தீர்ப்பு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.

அவரை நீதிமன்றத்தை விட்டு வெளியே அனுப்ப மத்திய காவல் படைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், ‘எப்போது தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது நீதிமன்றத்திற்கு தெரியும்’ எனவும் கருத்து கூறியது.

பிற்பகல் 2.00 : சக்கரபாணி  தாக்கல் செய்த மனுவில், “கடந்த ஆண்டு (2017 ஆம் ஆண்டு) பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், இதை அவர் நிராகரித்து விட்டார். சபையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி, திமுக உறுப்பினர்களை சபையை விட்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதனால், திமுக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.       

திமுக உறுப்பினர்களை வெளியேற்றிய பிறகு நடை பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் ஆறுக்குட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே. பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர். நடராஜ் ஆகியோர் அரசு கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தனர். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ. க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாறன், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். ஆனால், அதன் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே, அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட 11 எம்.எல்.ஏ. க்கள் மீது தமிழக சட்டமன்ற விதிகள் 1986 ல் கூறப்பட்டுள்ள தகுதி நீக்கம் தொடர்பான பிரிவுப்படி, நடவடிக்கை எடுக்கும்படி, சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் கூறியுள்ளார்.

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு, நாளை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close