பிக்பாஸ்: கமல்ஹாசனை கைது செய்ய கமிஷனரிடம் மனு!

இதில் எந்தவித தொடர்பு இல்லாத ஏழு ஆண்கள் ஏழு பெண்கள் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், 75% நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள்.

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி தினம் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், எனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், இதில் பங்கேற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி சென்னை போலீஸ் கமிஷனரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.

அந்த மனுவில், “இந்திய மக்கள் மானமே முக்கியம் எனும் கொள்கைகள் உடையவர்கள், இந்திய கலாச்சார பண்பாடுகளை கெடுக்கும் நோக்கில் தொடர்ந்து சினிமா, டிவி நிகழ்ச்சிகள் செயல்பட்டு வருகின்றன.

இதன் உச்சக்கட்டமாக பிக்பாஸ் எனும் ஆபாச நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எந்தவித தொடர்பு இல்லாத ஏழு ஆண்கள் ஏழு பெண்கள் கலந்து கொண்டு ஆபாசமாக பேசியும், 75% நிர்வாணமாகவும் நடித்து வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொலைக்காட்சியை பார்த்து வரும் சூழலில் இது போன்ற நிகழ்ச்சிகள் சமூக சீர்கேடுகளை அதிகரிக்க செய்யும்.

தமிழர்கள் உயிரை விட மேலாக மதித்து போற்றும் தமிழ்த்தாய் வாழ்த்தை கூட கிண்டலடிக்கும் காட்சிகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ளது. இது ஏழு கோடி தமிழர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனையும், அந்நிகழ்ச்சியில் நடிக்கும் நமிதா, ஓவியா, காயத்ரி ரகுராம், ஜூலி, ஆர்த்தி, ரைசா, கஞ்சாகருப்பு, வையாபுரி, சக்தி, ஆரூள், பரணி, சினேகன், கணேஷ் போன்ற 14 பேர்களையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து தமிழர்களின் கலாச்சாரம் பண்பாட்டை காப்பாற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பரணியை மற்ற போட்டியாளர்கள் ஒதுக்கி வைத்ததால், அவர் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ‘பரணி வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’ என சக போட்டியாளர்கள் பேசிக் கொண்டது சர்ச்சையை உண்டாக்கியது. இதற்கு நடிகர் அமித் பார்கவ் கடும் கண்டனம் தெரிவித்து ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, சாந்தனு பாக்யராஜ் மற்றும் நடிகை சாந்தினி ஆகியோரும் பரணிக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்தனர். இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, பிக்பாஸ் சர்ச்சையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close