பஸ் கட்டண குறைப்பு இன்று அமல் : எந்தெந்த பஸ்களில் எவ்வளவு குறைகிறது?

பஸ் கட்டண குறைப்பு இன்று முதல் அமல் ஆகிறது. எந்தெந்த பஸ்களில் எவ்வளவு குறையும் என்ற தகவலை அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டது.

பஸ் கட்டண குறைப்பு இன்று முதல் அமல் ஆகிறது. எந்தெந்த பஸ்களில் எவ்வளவு குறையும் என்ற தகவலை போக்குவரத்து துறை வெளியிட்டது.

பஸ் கட்டணம், தமிழ்நாடு முழுவதும் 50 சதவிகிதத்தையும் தாண்டி உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பயணிகள் போராட்டம் நடத்தினர். அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தில் சிறிதளவை குறைத்து அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அந்தக் கட்டண குறைப்பு இன்று (29-ம் தேதி) அமல் ஆகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

போக்குவரத்து கழகங்களை கடும் நெருக்கடியில் இருந்து மீளச்செய்து, பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கும், போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய சட்டரீதியான பணப்பயன்களை உரிய காலத்தில் வழங்குவதற்கும், விபத்து இழப்பீட்டு தொகை வழங்குவதற்கும், போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்ட ரீதியான பணப்பயன்களை வழங்குவதற்கும், மாதந்தோறும் ரூ.12 கோடி சுங்கக் கட்டணம் கட்டுவதற்கும் மட்டுமே கடந்த 20-1-2018 அன்று பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், பெரும்பான்மையான பொதுமக்களின் வேண்டுகோளினை கருத்தில் கொண்டும், பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர வேண்டிய போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசு நன்கு பரிசீலித்து பஸ் கட்டணங்களை குறைத்து மாறுதல் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி, தற்போது சாதாரண பஸ்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 60 காசில் இருந்து 58 காசாக குறைக்கப்படுகிறது. விரைவு பஸ்களில் கட்டணம் 80 காசில் இருந்து 75 காசாகவும், சொகுசு பஸ்களில் 90 காசில் இருந்து 85 காசாகவும், அதிநவீன சொகுசு பஸ்கள் (அல்ட்ரா டீலக்ஸ்) 110 காசில் இருந்து 100 காசாகவும், குளிர்சாதன (ஏ.சி.) பஸ்களில் 140 காசில் இருந்து 130 காசாகவும் குறைக்கப்படுகிறது.

சென்னை மாநகர பஸ்களில் (1 முதல் 28 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.4 ஆக குறைக்கப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் ரூ.23-ல் இருந்து ரூ.22 ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்படுகிறது.

அதேபோன்று, மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர்ப்புற பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.4 ஆக குறைக்கப்படுகிறது. அதிகபட்ச கட்டணம் ரூ.19-ல் இருந்து ரூ.18 ஆக குறைக்கப்படுகிறது. மேலும், அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்படுகிறது.

ஏற்கனவே, 20-1-2018-ல் மாற்றியமைக்கப்பட்ட பஸ் கட்டணத்தினால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்படும் என உத்தேசிக்கப்பட்டு இருந்தது. தற்போது, பஸ் கட்டண குறைப்பால் நாளொன்றுக்கு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சராசரியாக ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை தொடர்ந்து வழங்கிட மாற்றியமைக்கப்பட்ட இப்புதிய பஸ் கட்டண விகிதங்களை ஏற்று, தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாற்றி அமைக்கப்பட்ட இப்புதிய கட்டணங்கள் 29-ந் தேதி (இன்று) முதல் அமல் படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close