Advertisment

உயிரிழந்த உற்றவர்கள்; துயரில் உறவினர்கள்... நீலகிரியில் மனித - யானை மோதல்களுக்கு காரணம் என்ன? - IET Exclusive

வாழ்விடங்கள் துண்டாடப்பட்டன. உணவு பற்றாக்குறை நிலவுகிறது. செல்லும் வழி தெரியாமல் சிதறி போயுள்ளது யானைக் கூட்டம்.

author-image
Nithya Pandian
New Update
Human animal conflicts in Nilgiris

Elephant news : இந்தியாவில் காட்டு விலங்குகள் மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் குறித்து மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜூ பிஸ்தா எழுப்பிய கேள்விகளுக்கு பதில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சுற்றுசூழல், காடுகள், காலநிலை மாற்றம் இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, கடந்த 5 ஆண்டுகளில் யானைகள் தாக்கி 2,529 நபர்கள் உயிரிழந்தாக கூறியுள்ளார்.  தமிழகத்தில் 2016ம் ஆண்டு 49 நபர்கள், 2017ம் ஆண்டு 43 நபர்கள், 2018ஆம் ஆண்டு 49 நபர்கள், 2019ம் ஆண்டு 47 நபர்கள் மற்றும் 2020ம் ஆண்டு 58 நபர்கள் என்று கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 246 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

Nilgiris News Human animal conflicts deaths of elephants and humans மனித-யானைகள் மோதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள்

மேலும் படிக்க : கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

யானைகள் - மனித மோதல்கள் : அறியப்படாத மனித இழப்புகள்

மருதை

தற்போது உடைந்த கொம்பன் (அ) ஷங்கர் அனைவருக்கும் நன்றாக தெரிந்த யானையாக இருக்கும். சின்னத்தம்பிக்கு பிறகு மிகுந்த சிரமத்துடன் வனத்துறையால் பிடிக்கப்பட்ட யானை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் உள்ள சேரம்பாடி டிவிசனில் தந்தை மகன் என இருவரையும் தாக்கியதால் அவர்கள் உயிரிழந்தனர்.  கொலப்பள்ளி பகுதியின் திமுக யூனியன் கவுன்சிலராக பதவி வகித்து வந்தவர் ஆனந்தராஜ் (49). அவருடைய மகன் பிரசாத் (29). இருவரும் தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய போது யானை தாக்கி உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் போது உயிர் தப்பிய மருதையனிடம் நாம் பேசிய போது பல்வேறு முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Nilgiris News Human animal conflicts deaths of elephants and humans யானை தாக்குதலில் இருந்து தப்பித்த மருதை (Express Photo by Nithya Pandian)

“இந்த பகுதிக்கு சாலை கொண்டு வந்ததில் பெரும் பங்கு ஆனந்தராஜை தான் சேரும். இம்மக்களுக்காக பெரிதும் உழைத்தவர். அவர் மகனை யானை அடித்தது தெரியாமல் அவரும் நானும் தான் எங்களின் லேனுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது என்னுடைய செல்போன் கீழே விழவும் அதை எடுப்பதற்காக கீழே குனிந்தேன். ஆனந்தராஜ் முன்னே நடந்து சென்று கொண்டிருந்தார். யானை அவரை தூக்கியதை மட்டும் தான் பார்த்தேன். அடுத்த நொடிகள் என்ன நடந்தது என நினைவில்லை. என்னை நோக்கி யானை நகர்ந்து வர அங்கிருந்து விரைந்து ஓடி வந்து, லேனில் இருப்பவர்களுக்கு தகவல்கள் தெரிவித்தேன். அனைவரும் பெரும் கூச்சலிட அந்த யானை அங்கிருந்து சென்றுவிட்டது” என்றார்.

அடுத்த நாள் மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா ”இனி இந்த லேனில் இருக்க வேண்டாம். அனைத்தையும் காலி செய்து விட்டு அருகில் இருக்கும் லேனுக்கு செல்லுங்கள் என்றார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. நாங்கள் ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அது தொடர்பாக எந்த முடிவும் இதுவரை வெளியாகவில்லை என்றார் அவர்.  10வது லேன் பகுதியில் யானைகள் வந்ததால் 16 குடும்பங்களை 11வது லேனுக்கு மாறிவர வேண்டும் என்று கூறப்பட்டது. அது தான் யானைகள் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள அரசு கொடுத்திருக்கும் மாற்று முடிவு. நாளை இங்கும் யானைகள் வந்தால் என்ன செய்வோம்? என்கிறார் மருதை.

ராஜேஸ்வரி

”சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு பிறகு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழகர்கள் இந்த பகுதியில் அதிகமாக குடியிருக்கின்றனர். தலைமுறை தலைமுறையாக அங்கும் இங்கும் ஓடி, பெரும் போராட்டத்திற்கு பிறகு எங்களுக்கென்று 3 செண்டில் ஒரு வீடு கட்டினேன். அதற்கு பட்டாவும் இருக்கிறது. அது இல்லாமல் இரண்டரை ஏக்கரில் காஃபி மற்றும் தேயிலை விவசாயம் செய்து வந்தேன். ஆனால் அந்த பகுதியில் அடிக்கடி யானைகள் வருவதால் அங்கிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டனர்” என்கிறார் 1975ம் ஆண்டு இலங்கை நாவலப்பிட்டியில் இருந்து  திரும்பி குழிவயல் சப்பந்தோடாவில் வீடு வாங்கிய ராஜேஷ்வரி.

மேலும் படிக்க : ‘சிலோன் டீ’ வரலாறும் சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் 55 வருடங்களும்!

சரசு - சிசுபாலன்

அய்யன்கொல்லி ”ஒத்தலேன்” பெயருக்கு ஏற்றவகையில் வெறும் ஒற்றை லய வீடுகளையே கொண்டிருக்கிறது இப்பகுதி. பின்புறம் தேயிலை தோட்டங்கள், முன்பே பரந்து விரிந்திருக்கும் காடு. 08ம் தேதி ஜூலை மாதம் 2012ம் ஆண்டு வீட்டுக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த சரசு (59) என்ற பெண்ணை, வீட்டின் முற்றத்தில் நுழைந்து யானை தூக்கி வீசியது. சில அடிகள் தள்ளி கீழே விழுந்த அந்த பெண்மணிக்கு மார்பு பகுதிக்கு கீழ் உணர்வற்ற நிலையில் இருக்கிறார். சுவர் இருந்ததால் தப்பித்தேன். இல்லையென்றால் அன்றே இறந்திருக்க நேரிடும். மேற்கொண்டு உள்ளே வரமுடியாத காரணத்தால், மேலே இருக்கும் சிமெண்ட் சீட்டுகளையெல்லாம் உடைத்து எறிந்துவிட்டு சென்றுவிட்டது.

Human animal conflicts in Nilgiris தன் மனைவி சரசுவுடன் சிசுபாலன் (Express Photo by Nithya Pandian)

”TANTEAயில் இருந்து எந்தவிதமான உதவியும் எங்களுக்கு கிடைக்கவில்லை. வனத்துறையினர் ரூ. 30 ஆயிரம் நிதியுதவி அளித்தனர். எங்களுக்கு அடுத்து தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க யாரும் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்து வெளியேற உத்தரவு வந்தது. 9 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கின்றேன். எனக்கு ஓய்வூதியம் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. மாதம் ரூ. 1000 ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவதை வைத்து ஜீவனம் செய்கின்றோம்” என்கிறார் சரசு. சரசுவை குளிக்க வைப்பதில் துவங்கி அனைத்து வகையான உதவிகளையும் அவருடைய கணவர் சிசுபாலன் (63) செய்கிறார்.

ஜீவா

”மாலை ஒரு 07:15 மணிக்கு நானும் சிவப்பிரகாசம் (எ) ஜீவாவும் வண்டியில் இரும்புப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தோம். 2012ம் ஆண்டு அது.  நான் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றேன். பின்னால் ஜீவா அண்ணன் அமர்ந்திருந்தார். யானை ஜீவா அண்ணாவை தூக்கி வீச நான் வண்டியோடு அருகே இருக்கும் பள்ளத்தில் விழுந்தேன். என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் ஜீவா அண்ணாவை தாக்கியது யானை. இடது  தோள்பட்டையில் மூட்டு விலகி நான் ஒரு மாத காலம் வரையிலும் மருத்துவமனையில் இருந்தேன்” என்கிறார் நாடுகாணியில் வசிக்கும் ராமச்சந்திரன்.

Human animal conflicts in Nilgiris யானை தாக்குதலில் தன் கணவனை இழந்து தவிக்கும் வெள்ளிமலர் (Express Photo by Nithya Pandian)

அரசு தரப்பில் செய்து தரப்பட்ட உதவிகள் என்ன என்று ஜீவாவின் மனைவி வெள்ளிமலரிடம் (43) பேசிய போது, அரசு தரப்பில் இருந்து எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை என்கிறார். “அவர் இறந்த போது எங்களுக்கு  2 குழந்தைகள் இருந்தன. நிதி உதவியாக ரூ. 2.50 லட்சம் தந்தார்கள். அதன் பிறகு என்ன ஏது என்று இதுவரை யாரும் கேட்டு வரவில்லை. ஓய்வூதியம் குறித்தோ, அரசு வேலை குறித்தோ எந்த பேச்சும் இல்லை. தனியாக இருந்து தான் நான் என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினேன்” என்று வெள்ளிமலர்.

மேலும் படிக்க : யானைகளுக்கான மூங்கில் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் ; ஆர்வலர்கள் கவலை

வீரய்யா

”எனக்கு வயசு 69 ஆச்சுங்க... முண்டகுன்னு பகுதியில் வீடு இருக்குது. இந்த அஞ்சாறு வருஷமா தான் யானைங்க அளவுக்கு அதிகமா இந்த பகுதிக்கு வருது. காட்டு நாயக்கர் பழங்குடிங்க, மவுண்டாடன் செட்டிங்க, தாயகம் திரும்பிய தமிழர்கன்னு 76 குடும்பம் அங்க இருக்கோம். என்னன்னா, ஊருக்கு போர சாலைல இரண்டு பக்கமும் புதர் மண்டியிருக்கு. எந்த பக்கம் யானை இருக்குது? எந்த பக்கத்துல இருந்து வரும்னு எங்கனால யூகிக்கவே முடியல. கூடிய சீக்கிரமா எல்லாரும் மெயினான ஏரியாவுக்கு தான் வந்துரனும் போல” என்று கூறினார். 3 மாதங்களுக்கு முன்பு இவருடைய வீடு யானையால் தாக்கப்பட்டு சேதம் அடைந்துவிட்டது. முன்பு போல் இரவு நேரம் வீட்டுக்கு செல்லமுடியாத சூழல் உருவாகி இருப்பதால் நாடுகாணியிலேயே அவர் தங்கி விடுகிறார்.

Human animal conflicts in Nilgiris ஒத்தலேன் எனப்படும் தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதி (Express Photo by Nithya Pandian)

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நிலை என்ன?

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (46). மலையாளி பழங்குடி.  யானைகள் வருடத்திற்கு ஒரு முறை தான் காட்டுக்குள் தான் வரும். டார்ச் அடித்தாலே போய்விடும் ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல. தினமும் யானைகள் வந்து ஆட்களை துரத்துவதைப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அத்தியூர் அட்டனையை சேர்ந்த பெரியசாமி,  பெரிய உள்ளேபாளையம் பகுதியை சேர்ந்த மாரி, பூதாலபுரம்  பகுதியை சேர்ந்த ஜடேசாமி போன்றோர்கள் யானைகள் தாக்கியதில் உயிரிழந்தனர் என்று தகவல் தருகிறார் ராமசாமி.

Human animal conflicts in Nilgiris கடந்த 6 ஆண்டுகளில் அதிக அளவில் யானைகள் இறப்பு ஏற்பட்டிருக்கும் மாவட்டங்கள் (Design : Nithya Pandian)

ஆசனூர் பகுதியில் உள்ள கீழ்மாவளம் பஞ்சாயத்து கவுன்சிலர் அருள்சாமியிடம் (31) பேசிய போது ”புலிகள் காப்பகம் என்ற வார்த்தை வருவத்திற்கு முன்பு எத்தனையோ யானைகள் இந்த பகுதியில் இருந்தன. ஆனால் யானை மனிதனை அடிக்கும் என்பது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்  நிகழ்வாக இருந்தது. ஆனால் தற்போது ஒரு வருடத்தில் 5 பேர்கள் வரை உயிரிழந்துள்ளனர். கால்நடை மேய்ச்சலுக்கு சென்று திரும்பி வரும் போது, செண்டர் தொட்டி அருகே மாதையசாமி என்பவர் யானையின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்தார். வனத்திற்குள் சிறுவனப்பொருள் சேகாரம் செய்ய செல்லக்கூடாது என்றும் மேய்ச்சலுக்கு கால்நாடைகளை ஓட்டிக்கொண்டு செல்லக் கூடாது என்றும் நெருக்கடி தருகின்றனர் வனத்துறையினர்.

அதே துறையில் பணியாற்றிய அரேபாளையத்தைச் சேர்ந்த தவசியப்பன் யானை தாக்கி உயிரிழந்தார். ஆனால் பட்டா நிலத்தில் இறந்தால் மட்டுமே நிதி உதவி கிடைக்கும் என்றும், காட்டுக்குள் விபத்து ஏற்பட்டால் நிதி உதவி இல்லை என்றும் அவர்கள் கூறுவது வேதனை அளிக்கிறது என்றார்.  சிக்கண்ணா, ஆலம்மா என்று யானை தாக்கி உயிரிழந்தவர்களின் பட்டியல் நீள்கிறது. நெல்லிக்காய், கடுக்காய், சீமார்ப்புல் எடுக்க அனைத்து தடைகளையும் விதித்துள்ளனர். இது போன்ற தாக்குதல்களை தடுக்க அரசு முயற்சி மேற்கொள்ளாமல் எங்களை இங்கிருந்து வெளியேற்ற தான் அதிகம் முயற்சிக்கின்றனர் என்றும் கூறினார் அவர்.

போதுமான முன்னேற்பாடுகள் இல்லை

"மனிதர்கள் இறந்த போது எந்த அறிவிப்பும் வரவில்லை. மசினக்குடியில் யானை ஒன்று இறந்த பிறகு,  இந்த பக்கம் தண்டோரா அடித்து, இனிமேல் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அதிகாலை 6 மணிக்கு முன்பு யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்” என்று கூறினார்கள். இந்த பகுதியில் இருக்கும் எந்த லேன் வீட்டிலும் கழிப்பறை வசதி கிடையாது. பொதுக்கழிவறைக்கு தான் செல்ல வேண்டும். 6 மணிக்கு மேல் வெளியே வர வேண்டாம் என்றால் அது எவ்வாறு முடியும்? 7 மணிக்கு மேல் சமைக்க வேண்டாம். அந்த வாசனைக்கு யானைகள் வரும் என்கிறார்கள்.  இந்த உச்சி மலையில் பகலுக்கே சமைத்துவைத்துவிட்டு, இரவில் உறைந்து போன உணவை உட்கொள்வதா? என்று கேள்வி எழுப்பினார் விவசாயிகள் தொழிலாளார்கள் முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ். ”மாலை 6 மணிக்கு மேல் என்பதை விட்டுவிடுவோம். எஸ்டேட்டில் தேயிலை பறித்துக் கொண்டிருக்கும் போது பகலில் யானை வருகிறதே என்ன செய்வது நாங்கள்? எத்தனை நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது? இனிமேல் யானைகள் வந்தால் பட்டாசுகள் வெடிக்க கூடாது, அதனை துரத்தக்கூடாது என்றும் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க : மசினகுடி வலசை பாதை : யானைகளுக்கு இருக்கும் அங்கீகாரமும் உரிமையும் மனிதர்களுக்கு இல்லையா?

செந்நாய், சிறுத்தைப்புலி, கரடி, யானைகள் என்று தொடர்ந்து வனவிலங்குகளால் தொல்லை ஏற்பட்ட வண்ணம் தான் இருக்கிறது. வனத்துறையினர் இந்த  தாக்குதல்களில் இருந்து மக்களுக்கு பாதுகாப்பு தருகின்றோம் என்று தான் கூறுகிறார்கள். ஆனால் எத்தனை நாட்களுக்கு? தினமும் யானைகள் இந்த பக்கம் வந்து கொண்டே தான் இருக்கிறது. இன்று இந்த பகுதிக்கு யானை வந்துவிட்டால், இரண்டு நபர்களை நியமிப்பார்கள். கையில் பட்டாசுடன் யானை வருமா என்று காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் யானைகள் ஏதும் வராது. அவர்கள் அருகில் இருக்கும் மற்ற எஸ்டேட் பகுதிகளுக்கு சென்றுவிடுவார்கள். பின்பு யானையின் நடமாட்டம் இருக்கிறது என்று தெரிந்து நாங்கள்  தகவல் தெரிவித்தால் மற்ற பகுதியில் யானைககள் நடமாட்டம் இருக்கிறது என்று கூறி இங்கு வர மறுத்துவிடுவார்கள். உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் மட்டுமே மீண்டும் இப்பகுதிக்கு வருகின்றனர் என்று கூறுகிறார் பெயர் கூற விரும்பாத உள்ளூர்வாசி.

Elephant-proof trench வனத்துறையால் அமைக்கப்பட்டிருக்கும் அகழி (Elephant-proof trench) - Express Photo by Nithya Pandian

உண்மையை கூற வேண்டும் என்றால், யானைகளுக்கான உணவு முதுமலையில் இல்லை. அவ்வளவு பெரிய வனாந்திரத்தில் இல்லாத காரணத்தால் தான் அது பழச் செடிகளை வளர்த்திருக்கும் எங்களின் பகுதியை நோக்கி வருகிறது. புலிகள் காப்பகத்தில் இருக்கும் அனைத்து ஆங்கிலேயர் கால தாவரங்களையும் எடுக்க வேண்டும் என்றும், யானைகள் அதிகம் விரும்பும் மூங்கில், பலா போன்ற மரங்களை நட வேண்டுமெனும் நாங்கள் வெகுநாட்களாக கோரிக்கைகளை வைத்து வருகின்றோம். ஆனால் என்ன நடைமுறை சிக்கல் இருக்கிறது என்று தெரியவில்லை என்கிறார் வி.டி.எம்.எஸ் தலைவர் ராமகிருஷ்ணன். தேவலா அட்டியில் வசிக்கும் இவர் “யானைகளுக்கு நீர் தேக்க தொட்டி வைக்க அவர்கள் தேர்வு செய்திருக்கின்ற இடம் எல்லாம், சாலை ஓரம் தான். அதனை விட்டுவிட்டால் உடனே எஸ்டேட் லய வீடுகளுக்கு அருகே வைப்பது” இது யானை காப்பதற்காகவா இல்லை மனிதர்களை கண்டு மிரண்டு யானை எங்களை தாக்குவதற்காகவா என்று தெரியவில்லை என்கிறார் 70 வயதான ராமகிருஷ்ணன்.

Human animal conflicts in Nilgiris பயன்பாட்டில் இல்லாமல் புதர் மண்டி இருக்கும், சாலையோரம் அமைக்கப்பட்டிருக்கும் யானைகளுக்கான நீர் தேக்க அணை (Express Photo by Nithya Pandian)

“சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் வந்துவிட்டது என்று கூறி நாங்கள் புகார் தெரிவித்தோம். இரண்டு மணி நேரம் கழித்து பைனாகுலருடன் இரண்டு வயதான வனத்துறை ஊழியர்கள் வந்தார்கள். நிலைமை என்ன என்பதை பார்த்துவிட்டு பிறகு போன் செய்து மேலும் ஒருவரை வர கூறினார்கள். அருகில் இருக்கும் பலா மர கிளை ஒன்றை வெட்டி, அதில் ”கவன்வில்” போன்று செதுக்கி சிறுத்தையின் கழுத்திலும் வயிற்றிலும் அழுத்தி பிடித்து ஊசி ஒன்று போட்டனர். இவர்களின் அழுத்தம் தாங்க முடியாமல் அந்த சிறுத்தை, வண்டிக்கு எடுத்து செல்லும் போதே இறந்துவிட்டது. மனிதர்களிடம் இருந்து வன விலங்குகளை காக்க நாங்கள் வனத்துறையினரை அணுகினால் வனத்துறையினரிடம் இருந்து அந்த சிறுத்தையை காப்பாற்றியிருக்கலாமோ என்று தான் அன்று நாங்கள் ஆதங்கப்பட்டோம்” என்கிறார் கூடலூரை சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர்.

வனத்துறையினர், யானைகள் மனிதர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு வரக்கூடாது என்று அகழிகளை வெட்டியுள்ளனர். அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அகழியில் மண்ணை போட்டுவிட்டு  அதில் நடந்து வருகிறது. ஆனால் அனைத்து பகுதிகளிலும் சுதந்திரமான  நடமாட்டம் இல்லாத காரணத்தால் யானைகளுக்கு எங்கே செல்வது என்ற குழப்பம் நிலவுகிறது என்கிறார் வனத்துறை அதிகாரி ஒருவர்.

மிக சமீபத்தில் தான் ஜீப் மூலமாக ரோந்து பணி மேற்கொண்டு, யானைகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரியப்படுத்தவும் என்று மக்களிடம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் யாரேனும் யானை நடமாட்டத்தினை கண்டால் வனத்துறைக்கு அறிவிப்பார்கள். அவர்கள் அப்பகுதியில் இருக்கும் நபர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்பு இப்படி யானைகள் நடமாட்டம் அதிகம் இருந்ததா?

கொலப்பள்ளி பகுதிக்கு நான் 6 வயதில் வந்தேன். அன்றெல்லாம் நாங்கள் யானையை இந்த பகுதியில் பார்த்ததே கிடையாது. 1962ம் ஆண்டு ஒரு முறை கொலப்பள்ளியில் யானை ஒன்று சுற்றித்திரிந்தது என்று கேள்விப்பட்டு பொதுமக்கள் எல்லாம் ஆர்வத்தோடு அதனை காணச்சென்றனர். அடுத்த சில நாட்களில் அது செய்தியாக கூட வந்தது என்றார் அங்கிருக்கும் விவசாயி ஒருவர்.  வாழையெல்லாம் இந்த பகுதியில் விவசாயமே செய்ய முடியாது. குரங்கு, காட்டுப்பன்றி, யானை, மயில் இவற்றிற்கெல்லாம் போனது போக தான் எங்களுக்கு மிச்சம். பாக்கு மரங்களை எல்லாம் யானைகள் நாசம் செய்து விடுகிறது. ஆனால் எங்களுக்கு நஷ்ட ஈடும் கிடையாது. எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் கோழிக்கோட்டில் இருக்க இந்த விவசாயத்திற்காக நான் இங்கே இருக்கின்றேன் என்றார்.

Human animal conflicts in Nilgiris நெல்லிக்கண்டியில் வசிக்கும் பணியர் பழங்குடியை சேர்ந்த கரியன் (Express Photo by Nithya Pandian)

எனக்கு 68 வயதாகிறது. என்னுடைய மூதாதையர்கள் எல்லாம் வாழ்ந்த பகுதிதான் இது. எங்கள் வாழ்நாளில் யானைகளை ஏதேனும் அறிதான சூழலில் தான் காண்போம். பெரும்பாலும் ஒற்றை ஆண் யானை வழி தவறி வந்திருக்கும். சத்தமிட்டால் உடனே சென்றுவிடும்.  இன்று இருப்பது போல் கூட்டம் கூட்டமாக வருவது இல்லை. தோட்டவேலை எல்லாம் முடித்துவிட்டு நள்ளிரவு கூட வீடு திரும்புவோம். ஒரு பயம் இருந்ததில்லை. இன்று சின்னஞ்சிறு குழந்தைகளோடு இரவு கழிவது பெரும் பாடாய் இருக்கிறது என்கிறார் நெல்லிக்கண்டியில் வசிக்கும் பணியர் பழங்குடியான கரியன். யானைகளின் வழித்தடம் குறித்து என்று அறிவிப்பு வெளியானதோ அன்றில் இருந்து தான் யானைகளின் நடமாட்டம் கணிக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்றார் கரியன்.

மேலும் படிக்க : ரிவால்டோவை முகாமிற்கு அழைத்து வருவதில் சிக்கல்! 8 கி.மீ நடைபயணத்திற்கு பிறகு காட்டுக்குள் ஓட்டம்!

பென்னைக்காட்டில் வசித்து வந்த மவுண்ட்டாடன் செட்டியார்களை தற்போது சன்னக்குழி பகுதியில் குடி அமர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யானைகளின் வலசை பாதையில் நிறைய ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருக்க எங்கே செல்கிறது என்ன செய்கிறது என்பது குறித்து ஒன்றும் அறிய முடியாத சூழல் உருவாகியுள்ளது. கேரளத்தில் நீலம்பூரில் ஆரம்பித்து, கொலப்பள்ளி, சேரங்கோடு, சன்னக்குழி வழியாக பிதிர்காட்டுக்கு யானைகள் சென்று கொண்டிருந்த  அந்த வலசை பாதையின் பயன்பாடும் இதனால் முடிவுக்கு வந்துவிட்டது என்று வருந்துகின்றனர் உள்ளூர்வாசிகள்.

பழங்குடியினர் பகுதியில் நிலைமை என்ன?

தெங்குமரஹாடாவில் வசிக்கும் இருளர் சமூகத்தை சார்ந்த வீரப்பனிடம் பேசிய போது, “யானைகளுக்கு போக மிச்சம் தான் எங்களுக்கு. நாங்கள் பொதுவாகவே யானையை எங்களின் காடுகளில் இருந்து விரட்டுவது கிடையாது. அதற்கு தேவையான உணவை அது உண்ணும் வரை அதனை நாங்கள் தொந்தரவு செய்வது கிடையாது. இன்று யானை ஒன்று வந்துவிட்டால் அடுத்த நாள் அங்கு நாங்கள் மரம் ஒன்றை முறித்து நெருப்பு  வைத்துவிடுவோம். யானைகளை ஈர்க்கும் வகையில் நாங்கள் பலாவோ அல்லது வாழையோ பயிரிடுவது கிடையாது. இரவு நேரங்களில் ஒரு சிறிய ஊதுகுழல் போன்ற கருவி ஒன்றில் நெருப்பை வைத்துக் கொள்வோம். பொதுவாக எங்களின் கிராமத்தில் ஆற்றை ஒட்டி வசிக்கும் மக்களிடம் இது இருக்கும். யானைகள் நீர் அருந்த வரும் போது, இந்த  குழலை ஊதினால், வெளியேறும் நெருப்பை பார்த்துவிட்டு அது ஓடிவிடும். மற்ற நேரத்தில் மத்தளம் போன்ற ஒரு கருவியை வைத்து விரட்டுவதும் உண்டு. மற்றபடி அதனை நெருங்கும் என்னமோ அதனை துரத்தி பலிக்கு பலி வாங்கும் எண்ணமோ எங்களிடம் இல்லை என்றார் அவர்.

Human animal conflicts in Nilgiris காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவதை தடுக்க இருளர் பழங்குடியினர் பயன்படுத்தும் கருவிகள் (Photos : Special Arrangement)

தவறான கொள்கைகளும் மேலாண்மையும் தான் அனைத்திற்கும் காரணம்

”1985ம் ஆண்டில் நான் வனத்துறையில் கால்நடை மருத்துவராக நீலகிரியில் பணியாற்றினேன். 1985 முதல் 95 வரையிலான 10 ஆண்டுகளில் இதை விட மோசமாக யானைகள் மீது தாக்குதல்கள் இருந்தன. ஆனால் யானைகள் மனிதர்களை தாக்கும் நிகழ்வு மிக மிக அரிது. யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டன.  யானைகளின் தந்தங்களை நீக்கிவிட்டு இறந்தது பெண் யானை தான் என்று “போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்” வேண்டும் என்று என்னிடம் கெஞ்சிய  அதிகாரிகளை எனக்கு தெரியும். யானைகள் மீதும்/ காடுகள் மீதும் வனத்துறைக்கு அக்கறை இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலை நான் உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.

யானைகளுக்கு தேவையான உணவு பற்றாக்குறை தான் முழுமைக்கும் காரணம் என்று தான் கூறுவேன். முன்பு மசினக்குடியில் ஆயிரக்கணக்கில் மாடுகள் இருந்தன. புலி அடித்து இறந்தால் கூட, இத்தனை இருக்கிறதே ஒன்று இறந்தால் என்ன என்ற மன நிலை தான் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் இருந்தது. அன்றைய உணவுச்சங்கிலியில் எந்த மாற்றமும் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை புல் நிலங்கள் முற்றிலுமாக தீமூட்டப்பட்டுவிடும். பொட்டாசியம் எல்லாம் மண்ணில் மேல் எழும்பி வரும். அதனை மான்கள் உட்கொள்வதை நானே பார்த்திருக்கின்றேன். இன்று மேய்ச்சலுக்கு அனுமதியும் இல்லை. நாட்டு மாடுகளும் இல்லை. பால் உற்பத்தியும் குறைந்துவிட்டது. மேய்ச்சலுக்கு அனுமதி இல்லாததால் லாண்டானா, பார்த்தீனியம் எல்லாம் புதர் போல் வளர்ந்து கிடக்கிறது. யானைகளுக்கு போதுமான உணவு இல்லாததால் அவை விவசாய நிலங்களை நோக்கி வருகிறது.

Human animal conflicts in Nilgiris கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் இறந்த யானைகளின் எண்ணிக்கை மட்டும் 561 (Graphics : Nithya Pandian)

மேலும் படிக்க : பெற்ற மகனை இழந்தது போல் துடித்தேன் – உருகும் பெல்லன்!

கூடலூரில் முன்பு டால் கிராஸ் எனப்படும் பெரிய வகை புற்களும், மூங்கில் காடுகளும், செமி எவர்க்ரீன் காடுகளும் இருந்தன. தவறான மேலாண்மை தான் இன்று மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே அழுத்தமான சூழல் உருவாக காரணம்.  தாயகம் திரும்பிய தமிழர்களுக்கான வாழ்விடம், தேயிலை தோட்டங்கள் உருவாக்கம் முறையான ஆய்விற்கு பின்பு நடக்கவில்லை. அதனால் தான் இன்று யானைகள் சிதறுண்டு போயுள்ளன.

85-90களில் விவசாய நிலங்களுக்குள் யானை வருவதை தடுக்க, வனத்துறை தான் மின்சார வேலி திட்டத்தை அறிமுகம் செய்து அதிகப்படியாக பிரச்சாரம் செய்தது. சோலார் மின்சார  வேலி வைத்தால் யானைக்கு பாதிப்பு இல்லை என்பதும் பொய். நான்கு முறை ஐந்து முறை அதே வேலியில் திருப்பி திருப்பி கால் வைத்தால், இதயத்துடிப்பு நின்று இறந்துவிடாதா? அதிக பட்சமாக பாதுகாப்பிற்காக  மனிதன் திருப்பி தாக்குவது உண்டு. அரிதினும் அரிதாக அது போன்ற சூழல்களில் யானைகள் உயிரிழக்க கூடும். அன்றைய சூழலில் யானை சாப்பிட்டது போக மிச்சம் நமக்கு என்று இருந்த மக்களின் மனநிலையும் இன்று மாறியுள்ளது. அதனால் தான் பலாப்பழம், அன்னாச்சி பழங்களில் அவுட்டுக்காயை வைக்கின்றனர். அதுவும் கூட ஆரம்பத்தில் இஞ்சி, காப்பி ஆகியவற்றை காட்டுப்பன்றிகளிடம் இருந்து காக்க வைத்தனர். இன்று நிலைமை மாறிவிட்டது என்று கூறுகிறார் கால்நடை மருத்துவர். அவரின் பாதுகாப்பு கருதி அவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Elephant Nilgiris
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment