சோதனைகளை கண்டு அஞ்சப்போவதில்லை: முதல்வர் பழனிசாமி திருவாரூரில் பேச்சு

எத்தனை சோதனைகள் வந்தாலும் அஞ்சப் போவதில்லை, தயங்கப் போவதும் இல்லை என திருவாரூர் மாவட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எத்தனை சோதனைகள் வந்தாலும் அஞ்சப் போவதில்லை, தயங்கப் போவதும் இல்லை என திருவாரூர் மாவட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். தொடர்ந்து, நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி, மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் உரையாற்றினார்.

தமிழ் மொழிக்கு தொன்றாற்றியவர்கள் பிறந்த மாவட்டம், விவசாயிகள் நிறைந்த மாவட்டம், பல்வேறு கோயில்களை கொண்ட மாவட்டம், உழவாலும், உழைப்பாலும் உயர்ந்த மாவட்டம், தமிழகத்தில் அதிக அளவிலான நெல் உற்பத்தி செய்யும் மாவட்டம் என திருவாரூர் மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கி தனது உரையை முதல்வர் பழனிசாமி தொடங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக அரசால் மேற்கொள்ளப்பட்டத் திட்டங்களை தனது உரையின் போது விளக்கிய முதல்வர், திருவாரூர் மாவட்டத்துக்கான புதிய திட்டங்களையும் அறிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசாக அதிமுக விளங்கி வருகிறது எனவும், உணவு தானியம் உற்பத்தியில் தமிழகம் நான்கு ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், திருவாரூரில் 72 குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 1,109 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ரூ.300 கோடி செலவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். 140 ஆண்டுகாலம் இல்லாத வறட்சி நிலவிய போதும் தமிழகத்தில் விலை வாசி உயரவில்லை. திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.161.22 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆட்சி மீது தொடர்ந்து தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன என வருத்தம் தெரிவித்த முதல்வர்,”நாட்டிலேயே, சட்டம் – ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. டெல்லி சென்ற போது, வீடுகள் வழங்கும் திட்டத்தில் அதிக வீடுகள் வழங்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். அதனை ஏற்றுக் கொண்டு ராமேஸ்வரம் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், தமிழகத்துக்கு கூடுதல் வீடுகள் வழங்கப்படும் என்றார். இந்த கழகம் இன்னும் நூறாண்டு காலம் இந்த மண்ணில் இருக்கும். சாமானியர்களையும், சரித்திரத்தில் இடம் பெறச் செய்யும் வல்லமை படைத்தது அதிமுக. எத்தனை சோதனைகள் வந்தாலும், அஞ்சப்போவதில்லை. தயங்கப் போவதும் இல்லை” என்றும் முதல்வர் உறுதிபட தெரிவித்தார்.

அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், முனிவர்- பூனை குறித்த குட்டி கதை ஒன்றை கூறி அதிமுக-வின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close